என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேன் வியாபாரி
    X
    கேன் வியாபாரி

    சிட்லபாக்கத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து தண்ணீர் கேன் வியாபாரி பலி

    சிட்லபாக்கத்தில் சேதமடைந்த மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தண்ணீர் கேன் வியாபாரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் சாரங்கன் அவென்யூ கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சேது (42). அதே பகுதியில் மினி ஆட்டோ மூலம் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் உணவு சாப்பிட்டார். பின்னர் மீதி இருந்த உணவை வீட்டின் வெளியே உள்ள தெரு நாய்களுக்கு வைப்பதற்காக சென்றார்.

    அப்போது தெருவில் இருந்த சேதமடைந்த மின் கம்பம் திடீரென முறிந்து சேதுவின் மீது விழுந்தது. மின்கம்பத்தில் இருந்த வயர்கள் அறுந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேதுவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேது பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இந்த பகுதியில் பல வருடங்களாக மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையிலேயே உள்ளன. இதே போல் அதிக அளவு மின் கம்பங்கள் காட்சியளிக்கிறது.

    இந்த மின் கம்பங்களை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சேது உயிரிழப்புக்கு மின் வாரியத்தின் அலட்சியமே காரணம். மேலும் உயிர் பலி ஏற்படாமல் இருக்க சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    முகலிவாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு, பூமிக்கு அடியில் சரிவர மின் கம்பி புதைக்கப்படாததால் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×