search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான திலீப்ராகவன், சூர்யா.
    X
    பலியான திலீப்ராகவன், சூர்யா.

    திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்து 2 வாலிபர்கள் பலி

    திருப்போரூர் கோவில் அருகே குண்டு வெடித்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்போரூர்: 

     காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ளது மானாம்பதி கிராமம். இங்கு சுமார் 100 ஆண்டுகள் பழமையான கங்கையம்மன்  கோவில் உள்ளது. 

    இக்கோவில் குளம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தூர் வாரப்பட்டுள்ளது. கோவிலை புதுப்பிக்கும் பணிகளும் நடந்துள்ளன. 

    மானாம்பதி பாடசாலை தெருவில் வசித்து வந்த வாலிபர் திலீபனுக்கு நேற்று பிறந்த நாள். இதற்காக நேற்று மதியம் நண்பர்களுடன்  கோவிலின் பின்புறத்தில் உள்ள கோவில் குளம் அருகில் திலீபன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். இதில் அவரது நண்பர்களான சூர்யா, யுவராஜ், திருமால், விஸ்வநாதன், ஜெயராமன் ஆகிய 5 பேரும் பங்கேற்றுள்ளனர். கேக் வெட்டிய  பிறகு திலீபன் உள்பட அனைவரும் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். 

     மாலை 3.30 மணி அளவில் திடீரென அவர்கள் அமர்ந்து இருந்த இடத்தின் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. கோவிலின்  அருகில் வசித்து வரும் லட்சுமி என்ற பெண் சத்தம் கேட்டு உடனே வெளியில் ஓடி வந்தார். அப்போது 5 பேரும் ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்தபடி கிடந்தனர். 

    அவர் கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை திரட்டினார். உடனடியாக மானாம்பதி கிராம மக்கள் அனைவரும் குண்டு வெடித்த பகுதிக்கு  விரைந்து சென்றனர். உடனடியாக அனைவரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
    வெடித்த குண்டு சிதறி கிடக்கும் காட்சி.

    இருப்பினும் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்த சூர்யா, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உடல் சிதறி  காயம் அடைந்த திலீபன், யுவராஜ், திருமால், விஸ்வநாதன், ஜெயராமன் ஆகிய 5 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திலீபன் உயிரிழந்தார். பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாடிய திலீபன் பிறந்த  நாளிலேயே குண்டு வெடிப்பில் பலியான சம்பவம் அவரது பெற்றோரை மட்டுமின்றி மானாம்பதி கிராம மக்களையும் சோகத்தில்  ஆழ்த்தி உள்ளது. 

    காயம் அடைந்தவர்களில் ஜெயராமனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் மட்டும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி  அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யுவராஜ், திருமால், விஸ்வநாதன் ஆகியோருக்கு செங்கல்பட்டு அரசு  ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    பலியான சூர்யா, திலீபன் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரி சவ கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.  இவர்களது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் அழுது புரண்டபடி உள்ளனர். இதனால் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் சோகம் நிலவி  வருகிறது. அங்கு போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.  

    குண்டு வெடித்ததில் சேதம் அடைந்த கோவில் சுவர்.

    தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த ஒரு வாரமாக பரபரப்பு நிலவி வருகிறது. கோவையில் பயங்கரவாதிகள்  பதுங்கி இருப்பதாக வெளியான தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

    இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம்  கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    குண்டு வெடிப்பு நடைபெற்ற மானாம்பதி கங்கையம்மன் கோவிலில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேரில்  சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக மானாம்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள். குண்டு வெடித்தது எப்படி என்பது பற்றி இன்னும் முழுமையான தகவல்கள் எதுவும் போலீசுக்கு கிடைக்க வில்லை.  குண்டு வெடித்தது பற்றி மானாம்பதி கிராமத்தில் போலீசார் விசாரித்தனர். அப்போது யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.  குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகி விட்ட நிலையில் 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களிடம் விசாரணை  நடத்தினால் மட்டுமே குண்டு வெடிப்பு தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 

    குண்டு வெடிப்பு தொடர்பாக காயம் அடைந்தவர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் வாய் திறந்து  சொன்னால் மட்டுமே குண்டு வெடிப்பு பற்றிய மர்மம் விலகும் என்பதால் அவர்கள் அளிக்கப்போகும் வாக்குமூலம் முக்கியமாக  பார்க்கப்படுகிறது.  

    இதற்கிடையே மானாம்பதி கிராமத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×