search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட குண்டு இதுபோன்ற ராக்கெட் லாஞ்சரின் முன்பகுதியில் பயன்படுத்தக்கூடியது
    X
    பறிமுதல் செய்யப்பட்ட குண்டு இதுபோன்ற ராக்கெட் லாஞ்சரின் முன்பகுதியில் பயன்படுத்தக்கூடியது

    திருப்போரூரில் கோவில் அருகே மேலும் வெடிகுண்டுகளா? - இரும்பு வியாபாரியிடம் விசாரணை

    திருப்போரூர் கோவில் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பழைய இரும்பு வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் கோவில் பின்புறம் உள்ள குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த திலீபன் (25) என்பவரது பிறந்தநாளை நண்பர்கள் சூர்யா உள்பட 6 பேர் கேக் வெட்டி கொண்டாடினர். அவர்கள் புதரில் கிடந்த இரும்பு பொருளை உடைத்தபோது அது பயங்கரமாக வெடித்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா பலியானார். நேற்று காலை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி திலீபனும் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் காயம் அடைந்த ஜெயராம், திருமால், யுவராஜ், விசுவநாதன் ஆகிய 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் வெடித்தது ராணுவத்தில் பயன்படுத்தும் வெடிகுண்டு என்பது தெரிந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த இடம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

    நேற்று காலை சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜ், டி.ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    ஓய்வு பெற்ற ராணுவ வெடிகுண்டு நிபுணர் ஜெயராம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதர் மறைவில் கிடந்த வெடிக்காத மற்றொரு வெடிகுண்டை கண்டுபிடித்தனர். அதனை பாதுகாப்பாக கொண்டு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    முதலில் வெடித்த குண்டில் 2007 என்ற சீரியல் எண் உள்ளது. நேற்று பறிமுதல் செய்யப்பட்ட குண்டில் 2009- என்ற சீரியல் எண் உள்ளது.

    ராணுவத்தில் ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் இந்த குண்டுகள் எப்படி இங்கு வந்தது என்பது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ராணுவ அதிகாரிகளும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    அப்பகுதியில் மேலும் இதேபோன்று குண்டுகள் இருக்கலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று 3-வது நாளாக போலீசார் அந்த இடம் முழுவதும் அங்குலம், அங்குலமாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    சம்பவம் நடந்த இடம் முழுவதும் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே பழைய இரும்பு வியாபாரி ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில் குளம் அருகே அவர் இரும்பு குடோன் வைத்து இருந்தார். அதனை அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலி செய்ததாக தெரிகிறது.

    எனவே கடையை காலி செய்தபோது அந்த குண்டு பழைய இரும்பு என்று நினைத்து வீசப்பட்டதா? அதனை கொடுத்தவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    மானாமதி கிராமத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள அனுமந்தபுரத்தில் ராணுவ பயிற்சி நிலையம் உள்ளது. அங்கிருந்து யாரேனும் பழைய இரும்பு பொருள் என்று நினைத்து வெடிகுண்டை திருடி வந்தனரா? என்று விசாரிக்கிறார்கள்.



    Next Story
    ×