என் மலர்
காஞ்சிபுரம்
- மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் மூவர்ண பலூன்களை பறக்க விட்டு சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கும், 25- ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய திருநாட்டின் விடுதலைக்காக மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின், மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கதர் ஆடை அணிவித்து கவுரவித்தார். பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ்சூப்பிரண்டு சண்முகம், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் ராமச்சந்திர பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். மேலும், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை, வேளாண்மை உழவர் பாதுகாப்புத் நலத்துறை, முன்னாள் படைவீரர் நலத் துறை, தாட்கோ ஆகியவற்றின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் 25 பேருக்கு ரூ. 27 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 24 போலீசாருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 579 அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சீபாஸ் கல்யாண், வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் சுகபுத்திரா, கூடுதல் போலீஸ் சூப்பரண்டு ஹரிகுமார், மீனாட்சி, திருவள்ளூர் துணை சூப்பரண்டு அனுமந்தன், நகராட்சி ஆணையர் சுபாஷினி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு நன்னடைத்தை சான்றிதழ்களை கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
காஞ்சிபுரம்:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்.இ.டி. சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை "வயித்திலே அடிப்பது" என்பார்கள் என கூறியுள்ளார்.
In Kanchipuram district alone, 466 LED screens were arranged for live telecast of @narendramodi in Ayodhya. In more than 400 of those places the police has either confiscated the screens or deployed force to prevent the live telecast.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024
LED suppliers are fleeing with fear. The…
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
- தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வடகலை, தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
- கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது. வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.
இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக வடகலை-தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிரபந்தம் பாடப்பட்டது.
வடகலை,தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் கிராமிய விழா நடைபெற்றது. மாட்டு வண்டி பயணம், ஒயிலாட்டம், சிலம்பம், கபடி , கோலபோட்டி, கயிறு இழுத்தல் போட்டி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் மாட்டு வண்டியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் பயணம் செய்து விழா மேடைக்கு வந்து அடைந்தார்.
இதை தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகி அணியில் இணைந்து போட்டியிட்டார். மறுமுனையில் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் ஒரு அணியாக கலந்து கொண்டனர். இரு அணிகள் மோதியதில் ஜி. கே.வாசன் அணி கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்றது. தான் பெற்ற வெற்றியை இளைஞர் அணிக்கும் மாணவர் அணிக்கும் சமர்ப்பித்தார்.
இதனை அடுத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார். கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினர் மற்றும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படுவது வதந்தி என ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். வதந்திக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்ற அறிவிப்பு, அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல், நான் ராமர் கோவிலுக்கு செல்வேன் தரிசிப்பேன் . வருகின்ற 22-ந் தேதி என்னுடைய கட்சி தொண்டரின் திருமணத்தை நான் திருவாரூரில் நடத்தி வைக்கிறேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் நான் கோவிலுக்கு சென்று நிச்சயம் தரிசிப்பேன்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பல வசதிகள் இருக்கலாம் , அதில் மாற்று கருத்து கிடையாது. அது எப்பொழுது வரவேண்டுமோ அப்பொழுது தான் வர வேண்டும். அங்கு மெட்ரோ ரெயில், போதிய அளவில் பஸ் போக்குவரத்து கிடையாது. விளம்பரத்திற்காக மக்களை அலைக்கழிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது.
ஆட்சியாளர்களின் தவறை சாதாரண மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தவறுகளுக்கான பாடத்தை அவர்கள் தங்களுடைய வாக்கின் மூலம் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார்.
- நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
- தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.
- அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
- விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர் மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு வருகிற 19-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 044-27269148 தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் காஞ்சிபுரத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காஞ்சிபுரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த ஆஸ்பத்திரியில்அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதி கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றும் பாட்டிலை தொங்கவிட உரிய ஸ்டாண்டு இல்லாததால் அதனை துடைப்பத்தின் நுனியில் கட்டி வைத்து பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மருத்துவ கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்தியில் நிலவும் இந்த நிலை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. நோயாளிகளுக்கான படுகையிலும் போதிய வசதிகள் இல்லை. குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக ஏற்றும் மருந்துகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் ஸ்டாண்டுகள் பெரும்பாலான படுக்கைகளில் இல்லை.
இதனால் தரையை துடைக்க பயன்டுத்தும் துடைப்பத்தின்(மாப்)பின் அடிப்பகுதியில் உள்ள துணியை நீக்கி விட்டு அதன் கம்புகளை மட்டும் நோயாளிகளின் படுக்கையுடன் கட்டி வைத்து உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக செலுத்தும் மருந்து பாக்கெட்டுகளை தொங்கவிட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பல நோயாளிகளின் படுக்கையில் இந்த துடைப்ப நுனி கட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அங்குள்ள மின்விளக்கு சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் போதிய படுக்கை இல்லாததால் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் சிரமம் அடையும் நிலை ஏற்பட்ட உள்ளது.
இது தொடர்பாக காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, காய்ச்சல் வார்டில் ஒவ்வொரு படுக்கையிலும் குளுக்ககோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை தொங்க விட துடைப்பத்தின் நுனிகள் மட்டுமே உள்ளன. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் எந்த பதிலும் கூறுவதில்லை. ஆஸ்பத்தரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.
செய்யூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறும்போது, துடைப்பத்தின் கீழ்பகுதியில் உள்ள துணி இருந்த பகுதியை அகற்றி விட்டு அதனை ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். நோயாளிகளின் படுக்கையில் இந்த நுனிகளில் சரியாக கட்டப்படாமல் சரிந்து விழுகிறது. எனக்கு குளுக்கோஸ் அந்த துடைப்பத்தின் கம்பில் கட்டிதான் ஏற்றினார்கள். நான் கைகளை அசைக்கும் போதெல்லாம் அது நழுவி என் மீது விழுந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறும்போது:-
காய்ச்சல் வார்டில் கொசுவலை கட்டுவதற்காக துடைப்பத்தின் கம்புகளை சிலர் பயன்படுத்தி உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகள் தொங்க விட்டு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கு 32 ஸ்டாண்டுகள் உள்ளன என்றார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில்
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. ஆனால் காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகள் மட்டுமே உள்ளன.
இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பாதித்து வருபவர்களுக்கு தனித்தனி வார்டு இல்லாததால் அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்றனர்.
- சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.
- தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து பட்டாசு ஆலை விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இதேப்போல் காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத்தொகையை பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 10 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனவும் இந்த தொகையை பட்டாசு குடோன் உரிமையாளரிடம் இருந்து மாநில அரசு வசூலிக்கலாம், அதில் தீர்ப்பாயம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது என்றும் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டு இருந்தது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தொடர்ந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் இத்தகைய பட்டாசு ஆலைகள் ஒழுங்காக செயல்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டியது அரசின் வேலையாகும்.
மேலும், சமுதாய அக்கறையுள்ள அரசு என கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலைதானே? என்று தெரிவித்தனர்.
தமிழக அரசு தரப்பில் கூறும்போது, இழப்பீடு வழங்குவதில் எந்த தயக்கமும், பிரச்சனையும் இல்லை. ஆனால் அதை எவ்வளவு வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நிர்ணயம் செய்யவும் முடியாது.
அவ்வாறு இழப்பீட்டை நிர்ணயம் செய்ய தொடங்கினால், இதுதொடர் பழக்கமாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும், சொத்து குவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற்றது.
- அனைவருக்கும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேசரய்யர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சி மகா பெரியவர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 30-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி காஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள ஸ்ரீ மடம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மடத்தில் உள்ள மகா பெரியவரின் அனுஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது.
முன்னதாக இன்று அதிகாலை 5 மணிமுதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் போன்று இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு பாடினர். அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேசரய்யர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- மிச்சாங் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
- வருகிற 20-ந்தேதி, பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்:
மிச்சாங் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வருகிற 20-ந்தேதி, பிப்ரவரி 3 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளதால் உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பழைய காலனியை சேர்ந்தவர் ரகோத்தமன். விவசாயி. இவரது மனைவி சத்யா (வயது30). இவர் செய்யூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சத்யா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சத்யாவுக்கு நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மானாமதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அவருக்கு டாக்டர் லத்திகா மற்றும் நர்சுகள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று இரவு 11:30 மணியளவில் சத்யாவுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக சத்யாவின் உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகரித்து உள்ளதால் உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் இன்று காலை திரண்டனர். அவர்கள் சத்யாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாயும் குழந்தையும் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திடீரென ஆஸ்பத்திரி அருகே மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்யா மற்றும் அவரது குழந்தையின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






