என் மலர்
ஈரோடு
பவானி அருகே உள்ள மயிலம்பாடி, போத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ராம்நாயக்கர் (வயது 50). இவரது மகன் பிரசன்னா (22).
இவர் தனது தந்தையிடம் ரூ. 2 லட்சம் பணம் கேட்டார். ‘‘அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்’’ என்று கூறிய தந்தை ராம்நாயக்கர் பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரசன்னா தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். தந்தையை திட்டிய அவர் கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
எனவே ராம் நாயக்கர் வீட்டைவிட்டு வெளியே சென்றார். இந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனது தாயை பிரசன்னா தாக்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம் நாயக்கர் வீட்டுக்குள் சென்று பிரசன்னாவை தடுத்தார். அப்போது ராம் நாயக்கரை பிரசன்னா தாக்கி கீழே தள்ளி விட்டார்.
இந்த கைகலப்பு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த பிரசன்னா அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து பவானி போலீஸ் நிலையத்தில் ராம் நாயக்கர் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரசன்னாவை கைது செய்தார். #Tamilnews
பு.புளியம்பட்டி:
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானிசாகர் அணை ஆகும். மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக 2-வது பெரிய அணையாக இது திகழ்கிறது.
கேரள வனப்பகுதி மற்றும் ஊட்டி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை தண்ணீர் பவானி ஆறு மூலமாகவும், மற்றும் காட்டாறான மாயாறு வழியாகவும் பவானிசாகர் அணைக்கு வருகிறது.
கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைக்கு கிடு..கிடுவென நீர்வரத்து உயர்ந்தது. இதனால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. இது மள..மளவென உயர்ந்து நேற்று 66 அடியாக உயர்ந்தது.
இன்று காலை மேலும் 3 அடி கூடி 69 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 832 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கேரள மற்றும் நீலகிரி மலை பகுதியில் இன்று காலை 6 மணியில் இருந்து தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மதியத்துக்கு மேல் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.
குடிநீருக்காக பவானி ஆற்றில் வழக்கம் போல் 200 களஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் 2 சோதனை சாவடிகள் உள்ளன.
வன சோதனை சாவடியும் அருகேயே வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியும் உள்ளது.
இன்று காலை 6 மணியளவில் ஈரோட்டிலிருந்து 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் பண்ணாரி வன சோதனை சாவடி அருகே உள்ள வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடிக்குள் புகுந்தனர். உள்ளே நுழைந்து கேட்டை அடைத்து கொண்டனர். உள்ளே இருந்த ஊழியர்களை வெளியே விடவில்லை. அவர்களிடம் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
நாள் ஒன்றுக்கு இந்த வழியாக எத்தனை வாகனங்கள் செல்கிறது? சரக்கு லாரிகள் எத்தனை செல்கிறது? அவர்களிடம் எந்த முறையில் சோதனை மேற்கொள்கிறீர்கள்? என்று கிடுக்கி பிடி கேள்விகள் கேட்டனர்.
மேலும் சோதனை சாவடியில் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்தை அங்கு உள்ள மேஜையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்து எண்ணினர். இதில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது. “சோதனை நடத்தி கொண்டிருக்கிறோம். பிறகு சொல்கிறோம்” என்று கூறினர்.
பண்ணாரி வாகன போக்குவரத்து சோதனை சாவடியில் இன்று காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
கோபி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோபி அருகே உள்ள மொடச்சூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகள் ஷர்மிலி (வயது 18). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஷர்மிலிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை என்று தெரிகிறது. ஷர்மிலி மனவேதனையில் இருந்து உள்ளார். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ரமேசும், ரேவதியும் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டனர். ஷர்மிலி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது அவர் வீட்டின் விட்டத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷர்மிலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் தான்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புலாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் உஷார் அடைந்த போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர். சேலம் மாவட்டம் வீரபாண்டியில் இருந்தே மாறுவேடத்தில் கண்காணித்தபடி இருந்தனர்.
ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நின்றது. போதை பொருள் தடுப்பு போலீசார் கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக கூறப்பட்ட பொது பெட்டியில் ஏறி சோதனை நடத்தினர்.
அங்கு ஒரு ‘மர்ம’ பை கிடந்தது. அதை போலீசார் பிரித்து பார்க்கும் போது அதில் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆனால் அதனை கடத்தி கொண்டு வந்த ஆசாமி யார் என தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பவானிசாகர் அணை தண்ணீர் பூர்த்தி செய்து வருகிறது.
இந்த அணைக்கு நீலகிரி மாவட்ட மலை பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. அங்கு மழை பெய்யும்போது அந்த தண்ணீர் பில்லூர் அணைக்கு வந்து அந்த அணை நிரம்பி பவானி ஆற்றின் வழியாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும்.
தற்போது நீலகிரி மலை பகுதியிலும், கேரளாவிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. எனவே அந்த அணை நிரம்பி கடந்த 4 நாட்களாக உபரிநீர் வெளியேறுகிறது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக வரும் இந்த தண்ணீர் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 15 ஆயிரத்து 186 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் நேற்று முன்தினம் 57 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62 அடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 4 அடி உயர்ந்து 66.17 அடியாக உள்ளது.
அணையில் நீர் இருப்பு 9.4 டி.எம்.சி.யாகும். அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும், குடிநீருக்காக பவானி ஆறு வழியாக 200 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து அதிக அளவில் மழை பெய்து வருவதாலும், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 4-வது நாளாக பில்லூர் அணை நிரம்பி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும் பவானிசாகர் அணை நிரம்புமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 13 லட்சம் லாரிகள் ஓடாத நிலை ஏற்படுவதால் அத்தியாவசிய பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நன்மை தரவில்லை. தற்போது சட்ட ரீதியாக காவிரி மேலாண்மை வாரியம் என்கிற ஒரு வடிவம் கிடைத்துள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் ஒரு கோட்பாட்டை தந்துள்ளது. காவிரி நதி நீரை பயன்படுத்தும் 4 மாநிலங்களும் அந்த கோட்பாட்டை சரியாக பின்பற்ற வேண்டும். அந்த வகையில் கர்நாடக அரசு ஆணைய உறுப்பினரை இன்னும் நியமிக்கவில்லை.
மீண்டும் கர்நாடக அரசின் சட்டத்துக்கு சவால்விடும் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. மத்திய அரசு இதை வேடிக்கை பார்க்காமல் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
பசுமை வழிச்சாலை அமைப்பில் உள்ள உடனடி பாதகங்கள் என்ன? என்பதை மக்களுக்கு புரிய வைத்து மக்கள் விரும்பினால் மட்டுமே அமைக்க வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு அநீதியான திட்டங்கள் திணிக்கப்பட்டால் போராட்டம் நடைபெறும். வாக்களித்த மக்களை அலட்சியப்படுத்த எந்த உரிமையும் அரசுக்கு கிடையாது.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #JactoJio
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மயிலம் பாடி கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (வயது 60).
இவரது மனைவி மாதேஸ்வரி (54). இந்த தம்பதியினருக்கு 1 மகனும் 1 மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. அந்தியூர் அடுத்த பருவாச்சியில் கோவிந்தராஜ் கொல்லப்பட்டறை நடத்தி வந்தார்.
தொழிலை விரிவுப்படுத்த கோவிந்தராஜ் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். மேலும் நிதி நிறுவனத்திலும் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாராம்.
ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் கணவனும், மனைவியும் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டனர். இதையொட்டி அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
கணவன்-மனைவி இருவரும் பருவாச்சியில் உள்ள கொல்லப்பட்டறைக்கு சென்றனர். பட்டறை மாடிக்கு சென்ற அவர்கள் தாங்கள் வாங்கி வந்த விஷத்தை குடித்தனர்.
முன்னதாக கோவிந்த ராஜ் தனது தம்பி நாராயணனுக்கு போன் செய்தார். போனில் பேசிய அவர், ‘‘நான் உயிரோடு இருக்கமாட்டேன். நானும் என் மனைவியும் விஷம் குடித்துவிட்டோம்’’ என்று கூறினார்.
அண்ணன் பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் பட்டறைக்கு வந்து பார்த்தார்.
பட்டறையின் மாடிக்கு சென்று பார்த்தபோது இருவரும் விஷம் குடித்து மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டார்.
உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும் சேர்க்கப்பட்டனர்.
நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் அவரது மனைவி மாதேஸ்வரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரி இன்று அதிகாலை 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
கடன் தொல்லையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூர் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள பட்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அந்தியூர், பவானி, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பி.எஸ் எஸ். சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். த.மா.க வின் மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், துணை தலைவர் ஆறுமுகம் பொது குழு உறுப்பினர் எஸ்.பி.சந்திரசேகர் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தற்போது மழை காலமாக இருப்பதால் மலைப்பாங்கான இடங்களில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் மற்றும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும். 27 மாவட்டங்களுக்கு உயிர் நாடியாக விளங்கும் காவிரி குடி நீர் ஆதாரம் டெல்டா பகுதிகளுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டும் கர்நாடக அரசு ஏன் இன்னும் உறுப்பினர்களை நியமனம் செய்யவில்லை? இது விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையாகும் தமிழக அரசு வலுவான முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.
நீதி மன்ற உத்தரவை மதிக்காத கர்நாடகா அரசு மீது மத்திய அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் சத்தியமங்கலத்தில் இருந்து அம்மாபேட்டை வரையிலும் பவானியில் இருந்து தொப்பூர் வரையிலும் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை உடனடியாக செயல்படுத்த வேன்டும்
ஒரே கோப்பில் கையெழுத்து போட்டு மதுவை ஒழிக்க முடியாது படிப்படியாக குறைக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் டாஸ்மார்க் விசயத்தில் அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.
மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நோக்கமாகும். அதற்காக ஒரு கோடி கையெழுத்து பெற்று கவர்னரிடம் கொடுத்த கட்சி த.மா.க மட்டுமே. த.மா.க.தனித்துவம் வாய்ந்தது. தனித்தே செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan
கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ஷர்மிலி (வயது 18). கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் ஷர்மிலி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை ரமேஷ் மாட்டு பால் கறக்க தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.
அவர் வீட்டுக்கு திரும்ப வந்த போது கதவு மூடப்பட்டு கிடந்தது. திறந்து பார்த்த போது உள்ளே இருந்த அறையின் மின் விசிறி கொக்கியில் தனது துப்பட்டாவால் ஷர்மிலி தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கல்லூரி மாணவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையம் என்.ஜி.ஓ. காலனி வீதியில் நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 2 பவுன் செயினை திடீரென பறித்து கொண்டு மின்னலாய் மறைந்தான்.
அந்த பெண் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் அந்த ஆசாமி மாயமாகிவிட்டான். அவனுக்கு 20 வயதிலிருந்து 25 வயதுதான் இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடம் அருகே ரோட்டோரம் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உள்ளது. அந்த கடையின் வெளியே உள்ள சி.சி.டி.வி. கேமராவில் வழிப்பறி ஆசாமியின் உருவம் பதிவாகி இருக்கும் அதை பார்த்து குற்றவாளியை பிடித்து விடலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் நீண்ட நாளுக்குப் பிறகு பவானிசாகர் அணைக்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
மேலும் நீலகிரி மலை பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை முதல் அது மேலும் பல மடங்கு உயர்ந்து அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 186 கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அணையின் நீர் மட்டம் நேற்று 57.46 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 62 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணைக்கு தண்ணீர் வரும் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
தொடர்ந்து வரும் வெள்ளப் பெருக்கால் மாயாற்றில் வனப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வேண்டாம், துணி துவைக்கவும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வன அதிகாரிகளும், பொதுப்பணி துறையினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.






