என் மலர்tooltip icon

    ஈரோடு

    கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #UdumalaiRadhakrishnan
    சென்னிமலை:

    சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் 115-வது பிறந்த தின விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடிகாத்த குமரன் தனது 28-வது வயதில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தான் ஏந்திய சுதந்திர கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்து தேசத்திற்காக தன்னுயிரை நீத்தார்.

    அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் அரசின் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. கொடி காத்த குமரன் பிறந்த நாளான அக்டோபர் 4-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

    அதன்படி, 2-வது ஆண்டாக இந்த ஆண்டு சிறப்பான முறையில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள்விழா நடைபெற்றுள்ளது. மேலும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நினைவகங்களை திறந்து வைத்துள்ளார்.

    கால்நடைப்பராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புறங்களில் சுமார் 2.50 லட்சம் ஏழை, எளிய, ஆதரவற்ற மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் சுமார் 77 ஆயிரம் பேர் பயனடையவுள்ளனர். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் நியமனம் செய்ய 1300 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விரைவில் பரிசீலனை செய்து நியமிக்கப்படுவார்கள்.

    காங்கேயம் இன மாடுகளை பராமரிக்கின்ற வகையில், பவானிசாகர் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையமானது பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, நிலங்கள் சமன் செய்து, தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பர்கூர் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் பாலை நல்ல விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    முதல் அமைச்சர் அறிவித்ததுபோல் நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு ஒரத்து பாளையம் அணை பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். #UdumalaiRadhakrishnan
    ரெயில் பயணத்தின் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மாவிழிபாளையம் ரெயில்வே பாலம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரெயில்வே போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்கு வங்காளத்தை சோமைஹேம்பரம் (வயது 27) என்பதும் திருப்பூரில் இருந்து ஹவுரா ரெயிலில் பயணம் செய்த போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சோமைஹேம்பரம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பலியானார்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 24). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    சண்முகம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருநகர் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சண்முகம் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. பலத்த காயம் அடைந்த சண்முகம் உயிருக்கு போராடினார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் நள்ளிரவு 1.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அந்தியூர்:

    காந்தி பிறந்த நாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

    இதை பயன்படுத்தி அந்தியூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் அங்கிருந்த ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், ‘அவர் அந்தியூர் தேர் வீதியை சேர்ந்த சங்கர் (வயது 37) என்பதும், அவர் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சங்கரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் அந்தியூர் கருமலையான் கோவில் பகுதியில் மது விற்றதாக அந்தியூர் புதுக்காடு பகுதியை சேர்ந்த சின்னதம்பி (42) என்பவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 
    பழைய முறையில் தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று சொல்லும் காங்கிரஸ் மீண்டும் காட்டில் போய் வாழ சொல்கிறதா? என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார். #PonRadhakrishnan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள பனக்கள்ளி கிராமத்தில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டதின்கீழ் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா நடந்தது.

    மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு நலவாழ்வு மையத்தை ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தவறான பொய்பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உலக அளவில் கச்சா எண்ணை விலை உயர்வால் தான் எண்ணை நிறுவனங்களால் உயர்த்தப்பட்டு வருகிறது.


    பாதுகாப்பு மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறி இருக்கிறார் ப.சிதம்பரம். அவர் நிதிமந்திரியாக இருக்கும்போது என்ன ஊழல் செய்தார்? என்று மக்களுக்கு தெரியும். நிர்மலா சீதாராமன் எவ்வாறு பதவியை கையாண்டு வருகிறார்? என்பதும் மக்களுக்கு தெரியும்.

    மீண்டும் பழைய முறையில் தேர்தலுக்கு ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என கூறி உள்ளது காங்கிரஸ்! மீண்டும் நாம் காட்டில்போய் வாழ முடியுமா? காட்டுக்குள் போய் வாழ சொல்கிறதா காங்கிரஸ்? நடந்தே காட்டுக்கு செல்ல முடியுமா?

    பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் தான் நல்லது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார். #BJP #PonRadhakrishnan
    உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Congress
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார்.

    இக்கூட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செங்குளம் பழனிச்சாமி, சந்திரசேகர், வட்டார தலைவர்கள் நடராஜ், ஆண்ட முத்துசாமி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரவி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஆர்.எம்.பழனிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் வினோத், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கலா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர்கள் லோகேஸ்வரன், விஜய், கலைப்பிரிவு மாவட்ட தலைவர் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

    அக்டோபர் 2-ம் தேதி அன்று காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சியைக் ஈரோடு தெற்கு மாவட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது அன்று நடைபெறக்கூடிய கிராமசபை கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட செய்வது கிராமசபை கூட்டத்தில் உள்ளூரில் நிலவும் பிரச்சினைகளை மையப்படுத்தி அதை சரிசெய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற செய்ய வேண்டும்.

    அக்டோபர் 4ஆம் தேதியன்று நடைபெறக்கூடிய திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது பூத் கமிட்டி அமைக்காத பகுதிகளில் உடனடியாக பூத் கமிட்டி அமைத்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

    தியாகி குமரனுக்கு சென்னிமலையில் அவர் பிறந்த வீட்டை மணிமண்டபம் கட்டி அரசு விழா தொடர்ந்து நடக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாவட்ட துணை தலைவர் ராஜா சத்தியமூர்த்தி நன்றி கூறினார். #Congress
    கோபி அருகே பெய்த கனமழையால் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையம், கொளப்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கொளப்பலூர்-சிறுவலூர் ரோட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    எனவே இந்த பாலத்தின் அருகே வாகனங்கள் செல்வதற்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தரைப்பாலத்தின் மீது மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.

    எனவே பெருந்துறை, சிறுவலூர், திங்களூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும், அங்கிருந்து கொளப்பலூருக்கு வரும் வாகனங்களும் கெட்டிசெவியூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

    கோபி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இது அந்த பகுதி விவசாயிகளையும், பொது மக்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

    டிஎன்.பாளையம் அருகேயும் கன மழை பெய்தது. இதன் காரணமாக அரக்கன் கோட்டை வாய்க்காலில் வெள்ளம் காரணமாக உடைப்பு ஏற்பட்டு வயல் வெளிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    அதோடு அருகிலுள்ள ஆலமரம் சாய்ந்து வாய்க்காலில் சேதத்தை ஏற்படுத்தியது. ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாய்ந்த மரத்தின் கிளைகளும், கழிவுகளும் அகற்றுப்பட்டன.

    புஞ்சை புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான காராபாடி, காவிலிபாளையம், பொன்னம்பாளையம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பவானிசாகர் ரோட்டில் உள்ள பொன்னம்பாளையத்தில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. #tamilnews
    ஈரோட்டை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக அம்மாபேட்டையை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த 15 வயது மைனர் பெண் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி சந்தை கரையில் உள்ள அத்தை வீட்டில் தங்கி இருந்தார். இவரது தாயாரும் அங்கேயே இருந்தார்.

    சம்பவத்தன்று குறிச்சி பெரிய வாய்க்காலில் இளம்பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது பெருந்துறை அடுத்த குஞ்சரமடை சத்யாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்த இளம்பெண்ணை அழைத்து திடீரென மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதை கண்ட மற்ற பெண்கள் இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் வி‌ஷயத்தை சொன்னார்கள்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணுக்கும், திவாகர் என்பவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாயார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் ஜெகதீஸ், லோகேஸ்வரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அம்மா பெயரை சொல்லி, ஆட்சி நடத்துபவர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு சுக போகர்களாக, கை கட்டி, வாய் பொத்தி அடிமையாக சேவை செய்து வருகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறினார். #TTVDhinakaran
    ஈரோடு:

    ஈரோடு பெருமாள் மலை அருகே இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சியின், அருந்ததியர் சமுதாய அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் நிறுவனர் வீரா சிதம்பரம் தலைமை வகித்து பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நான் இங்கு வருவதற்கு முதன்மை காரணம் தமிழகத்தில் ஜாதி, மத, பேத மற்ற சமுதாய நல்லிணக்கத்தில் மக்கள் வாழ வேண்டும். யாருக்கும் வேண்டுமானலும் நீங்கள் வாக்கு அளியுங்கள். அது உங்கள் தனிப்பட்ட உரிமை. ஆனால் நம்மிடம் பிரிவினை உண்டாக்க நினைத்தால், அதுக்கு இடம் கொடுக்காமல் நம்மிடையே ஜாதி மத பேதமின்றி அனைவரும் சகோதர சகோதரிகளாக இருப்போம் என தான் இங்கு வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஜாதி மற்றும் மதத்தின் பெயரை சொல்லி துண்டாட தீய சக்திகள் தேர்தலை நோக்கி குறிவைத்து வருகின்றனர்.

    அதற்கு இடம் கொடுக்க கூடாது என்று உங்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன். திராவிட இயக்கத்தின் அடி நாதமே சமூக நீதி தான். மத்தியில் ஆள்பவர்களால் சமூக நீதி சிதைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 12ம் வகுப்பில் எவ்வளவு மார்க் எடுத்தாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோம். இந்த ஆண்டு பிரதீபாவை இழந்தோம். பேரறிஞர் அண்ணா, மாநிலத்தில் சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தில் அடிப்படையில் தான் திராவிட இயக்கத்தை உருவாக்கினார்.

    இன்று அம்மா பெயரை சொல்லி, ஆட்சி நடத்துபவர்கள் மத்தியில் ஆள்பவர்களுக்கு சுக போகர்களாக, கை கட்டி, வாய் பொத்தி அடிமையாக சேவை செய்து வருகின்றனர். மேலும் மத்தியில் ஆள்பவர்களுக்கு ஏவல் அரசாங்கமாக, அடிமை அரசாங்கமாக தமிழகத்தில் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான் தமிழக மக்கள் இந்த ஆட்சி தொடர கூடாது என்பதை நினைத்து, தேர்தலை எதிர்பார்த்தும்,ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்த்தும் காத்து கொண்டிருக்கின்றனர்.

    ஆட்சி பொறுப்பில் இருக்கும் பழனிச்சாமியும், அமைச்சர்களும் இன்று யாரால் பொறுப்பில் இருக்கிறோம் என மறந்து விட்டு, ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்து, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்றனர். தங்களை பதவியில் அமர வைத்தவர்களுக்கு துரோகம் செய்தவர்கள் எப்படி நல்வர்களாக இருக்க முடியும்? சீர்திருத்தங்கள் செய்ய முடியும்? நலத்திட்டங்களை வழங்க முடியும்? தயவு செய்து எண்ணிப்பாருங்கள். இந்த ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்று அமமுக தமிழக மக்கள் சார்பில் போராடி வருகிறது.

    பாஜக தேசிய செயலாராக இருக்கும் எச்.ராஜா, பெரியாரை பற்றியும், காவல்துறை, நீதித்துறை பற்றி அவதூரக பேசினார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருக்கின்றனர்.

    தமிழகத்தின் நலன் கருதி இந்த ஆட்சியினை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் எத்தனையோ வெளி வருகின்றன. இந்த ஆட்சி முடிவுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு விடிவு பிறக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran




    தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருப்பது கொடுமை என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். #MansoorAliKhan #ArunJaitley
    ஈரோடு:

    ஈரோட்டில் முன்னாள் ராணுவ வீரர்கள் பற்றிய குறும்படம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு குறும்படத்தை வெளியிட்டார்.

    அப்போது நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு என்பது தந்தை பெரியார் பிறந்த பூமி ஆகும். ஈரோட்டுக்கு வந்த போது பெரியாரின் சாதனைகளும் அவரின் அருமை பெருமைகள் என் கண் முன்னே நிற்கிறது. தற்போது பெரியாரை பற்றி தரக்குறைவான விமர்சனங்கள் வருவது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அதிலும் 95 வயதிலும் அவர் செய்த சாதனைகள் அதிகம்.

    தமிழர்கள் பல துறைகளில் இந்தியா முழுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பெரியார் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் இவ்வளவு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. தமிழகத்தில் பிறந்த காரணத்தினால்தான் அவர் அர்ப்பணிப்புகளை தவறாக சொல்லி வருகின்றனர்.

    பெரியாரின் சிலைகளை அவமதித்து வருவது மிகவும் வருந்தத்தக்க வி‌ஷயம். அரசியல் சித்தாந்தத்தில் ஓட்டுகள் வாங்காமல் முதலமைச்சராக, கவர்னராக, அமைச்சர்களாக உள்ளனர். ராணுவ அமைச்சர்களாகவும் உள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜெட்லி கூட நிதி அமைச்சராக இருப்பது கொடுமை.


    தி.க கட்சியில் உள்ள பல்வேறு தலைவர்கள் அமைச்சர்களாகவும், கவர்னராகவும் உயர் பதவியை அடையாத நிலையில் உள்ளனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் இவர்களை இப்படி புறந்தள்ளியது ஏன்? என கேள்வி எழுப்புகிறேன்.

    பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அந்தப் பாதையிலிருந்து விலகியதால் தான் தற்போது தவறுகளும் ஏற்பட்டு வருகிறது. பெரியாரின் கொள்கை என்பது ஆயிரம் ஆண்டுகள் மக்களை வழிநடத்தக்கூடிய திறன் உள்ளது.

    இந்த மண்ணில் அனைத்து வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இனியும் இதை வளரவிடக்கூடாது. திருமுருகன் காந்தி போன்றவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஆட்சியாளர்கள் அராஜகம் செய்து வருகின்றனர். இதனை ஊழலற்ற ஆட்சி என்கிறார்கள். போராட்டக்காரர்களை ஒடுக்குகின்றனர்.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் கை கூலிகளாக உள்ளனர். இது வெட்கக்கேடான வி‌ஷயம்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இந்த ஆட்சியை இனம் கண்டு தக்க பாடம் வருங்காலத்தில் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.   #MansoorAliKhan   #ArunJaitley
    இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

    ஈரோடு:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

    அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

    தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

    இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

    விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

    திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோபி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள தாளக்கொம்பு புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது மகன் குணசேகரன் (40). விவசாயி. இவர்கள் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று காலை வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.

    எனவே வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது லட்சுமியும், குணசேகரனும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து பிணங்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கோபி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது குணசேகரனுக்கு திருமணம் ஆகாததால் தாயும், மகனும் விரக்தியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×