என் மலர்
ஈரோடு
முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது:-
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருப்பூர் தொகுதியை பொறுத்த வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் எதிர்கட்சி அதிகளவில் ஓட்டுகளை பெற்றிருந்தது. அதே சமயம் எனது தொகுதியான பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் எதிர்கட்சி குறைந்த அளவே கூடுதல் ஓட்டுகளை பெற்றிருந்தனர்.
இதற்காக நானும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களும் அந்த அளவுக்கு தீவிரமாக களம் இறங்கி பாடுபட்டோம். அ.தி.மு.க.வில் அதிகார பலம் படைத்தவர்கள் எதிர்கட்சிகளுக்கு அப்பட்டமாக துணை போனார்கள். அதையும் மீறி எதிர்கட்சி அதிக ஓட்டுகள் பெறாமல் தடுத்தோம். இது உண்மை
நமது கட்சியில் அதிகார பலத்தில் இருப்பவர்களின் துரோகத்தை கட்சி தலைமையிடம் ஆதாரத்துடன் கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை கட்சி தலைமை அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர அர்ப்பணிப்பு உணர்வுடன் நான் மக்கள் பணியாற்றி வந்திருக்கிறேன். இது எனது தொகுதி மக்களுக்கும் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் தெரியும். எதிர்கட்சிகாரர்களை விட சமாளித்து விடலாம். ஆனால் நமது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை சமாளிக்கவே பெரும் சவாலாக இருக்கிறது.

நான் அமைச்சராக இருந்தபோது பெருந்துறையில் மனமகிழ்மன்றம் பெயரில் செயல்பட்ட சூதாட்ட கிளப்பை அகற்றி அங்கு பேரூராட்சி அலுவலகம் கட்டிகொடுத்தேன்.
அந்த பகுதியில் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூடும் சந்தை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அரசு டாஸ்மாக் மது பார் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது சூதாட்ட கிளப் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதை கண்டு என் தொகுதிமக்கள் என்னிடம் மதுக்கடை வேண்டாம். குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு தெரியாமலேயே என் தொகுதியில் சூதாட்ட கிளப் அமைத்து இருக்கிறார்கள். இது எனக்கு பெரும் அதிர்ச்சி அளித்து உள்ளது.
இது முதல்-அமைச்சருக்கு தெரிந்துதான் நடந்துள்ளதா? இதற்கான அனுமதி முதல்வருக்கு தெரிந்துதான் கொடுக்கப்பட்டுள்ளதா? என எனக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூதாட்ட கிளப்பை தடுத்து நிறுத்தாதது ஏன்?
பெருந்துறையில் இளைஞர்கள் அதிகம் வசிக்கும் பகுதி கல்லூரிகளும், பள்ளிகளும் நிறைந்த பகுதி. இங்கு அமைந்து உள்ள சூதாட்ட கிளப், டாஸ்மாக் பார் ஆகியவற்றால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் கெடும் வாய்ப்பும் உள்ளது.
முதல்வர் அண்ணன் எடப்பாடியார் இதில் தலையிட்டு இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. கூறினார்.
ஈரோடு உள்பட பல மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உயர்மின் கோபுரங்கள் அருகே சென்றாலோ, அதன்கீழ் விவசாய பணிகளில் ஈடுபட்டாலோ மின்காந்த புலன் பாய்ந்து பாதிப்புகள் ஏற்படும் என்றும் மின்கசிவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் கூறி வருகிறார்கள். ஆனாலும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது. இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை பாராளுமன்றத்தில் காட்டி பேசுவேன். மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி, மின்சாரத்துறை மந்திரியிடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன்’ என்றார்.
ஈரோடு:
திருப்பூர் எஸ்.வி. காலனி வடக்கு நாவலர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39) தொழிலாளி. இவருக்கும் கோபி அடுத்த குளத்துப்பாளையத்தை சேர்ந்த யுவமணிக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
செந்தில்குமார் தற்போது திருமுருகன் பூண்டி அருகே உள்ள செட்டிபாளையத்தில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 12-ந் தேதி மீண்டும் கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்டு யுவமணி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் செந்தில்குமார் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 13-ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற செந்தில்குமார் திடீரென மாயமானார். இந்த நிலையில் மறுநாள் 14-ந் தேதி செந்தில் குமார் தனது தந்தைக்கு போன் செய்து தனக்கு மனசு சரி இல்லை என்றும் தான் பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் பவானிசாகர் வந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதியை தேடி பார்த்தனர். அப்போது பவானிசாகர் பார்க்கிற்கு தென்புறம் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் செந்தில் குமாரின் உடல் மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொது மக்கள் புகார் கூறி வருகிறார்கள்.
குடிநீர் பிரச்சினையை கண்டித்து சில இடங்களில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் சாலை மறியல்- ஆர்ப்பாட்டம், முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த புரவி பாளையத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்பட வில்லையாம். இது குறித்து அந்த கிராம மக்கள் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் வெள்ளி திருப்பூர் மெயின் ரோட்டில் திரண்டனர். பிறகு அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் ஆவேசத்துடன் சிறை பிடித்தனர். மேலும் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு அதிகாரிகளும், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் ஆவேசத்துடன், ‘‘ஒரு மாதமாக சரியாக தண்ணீர் வருவதில்லை. அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று தான் தண்ணீர் பிடித்து காய்ச்சி வடிகட்டி குடித்து வருகிறோம். எனவே எங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வையுங்கள். முறையாக குடிக்க தண்ணீர் வழங்க இனியாவது நடவடிக்கை எடுங்கள்’’ என்று கூறினர்.
பொதுமக்களிடம் தேவையான நடவடிக்கை எடுக்க உறுதி அளிப்பதாக அதிகாரிகள் கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள், பெண்கள் மறியலை கை விட்டனர். சிறை பிடித்த அரசு பஸ்சையும் விடுவித்தனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) டெய்லர். இவரது மனைவி பிரியா (33). இவர்களுக்கு யுகாஸ், சியாஸ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. பிரியா கணவருடன் கோபித்துக்கொண்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு தனது 2 மகன்களுடன் சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று பட்டுக்கோட்டைக்கு சென்ற சக்திவேல் மனைவியுடன் சமாதானம் பேசி வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் மனைவி வரவில்லை. இதனால் மன வேதனையில் அவர் இருந்தார். இன்று காலை டெய்லர் கடைக்கு வந்த சக்திவேல் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை சேனடோரியத்தை அடுத்த பைபாஸ் ரோடு அருகே பெருந்துறை அரசு பஸ் டெப்போ உள்ளது. இந்த அரசு பஸ் டெப்போவில் சுமார் 50-க்கும் மேற்ப்ட்ட வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளன.
இங்கு வரும் பஸ்கள் அனைத்தும் தினமும் காலையில் இங்கிருந்து சென்று மீண்டும் இரவில் வருவது வழக்கம். ஒரு சில பஸ்கள் மட்டும் பகல் வேளையில் டெப்போவிற்கு வரும். இந்த பஸ்கள் அனைத்தும் இங்கு வந்து தான் டீசல் பிடிக்க வேண்டும்.
டீசல் பம்ப் டெப்போ நுழைவு வாயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி அமைந்துள்ளது. இந்த டீசல் பம்பின் முன்பகுதியில் தற்போது ஆட்டோமேடிக் கார் வாஷர் எனப்படும் தானியங்கி பஸ் கழுவும் எந்திரம் அமைப்பதற்காக ஷெட் அமைக்கப்பட உள்ளது.
உள்ளே நுழையும் பஸ் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே டீசல் பிடிக்க செல்ல முடியும். இதனால் பின்னால் வரும் பஸ்கள் அனைத்தும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.. எனவே இந்த இடத்தில் ஆட்டோமேடிக் கார் வாஷர் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். டெப்போவின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் ஷெட் அமைக்க வேண்டும். இதனால் பஸ்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் முதல் இந்த பணிகள் தொடங்கப்பட்டன. நேற்று இரவு டெப்போவிற்கு வந்த பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அங்கு பணி நடைபெறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து இரவு டெப்போ முன்பு வெளியே அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று கூடினர். அவர்கள் உடனடியாக பணியை நிறுத்த வேண்டும். விரைவில் இந்த பகுதியில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் அந்த பணியின் போது ஷெட் அமைக்கும் இடமும் பாதிக்கப்படும்.
எனவே மாற்று இடத்தில் இந்த பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறு பான்மையினர் மாணவ- மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர் விடுதிகள் 16, மாணவிகள் விடுதிகள் 13, கல்லூரி மாணவர் விடுதிகள் 2, மாணவிகள் விடுதி 2 உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் ஐடிஐ-யில் படிக்கும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
அனைத்து மாணவ- மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழி காட்டி வழங்கப்படும். மலைப்பகுதிகளில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
பெற்றோர்- பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலைய தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதி உடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்- அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ, இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளுக்கு சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
எனவே விடுதிகளில் தங்கி படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள் சலுகைகளை பெற்று, பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வை கண்டித்து ஈரோடு வீரப்பசத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, பாட்ஷா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர் முருகன், தி.மு.க கோட்டை பகுதி செயலாளர் ராமசந்திரன், பெரியசேமூர் செல்வராஜ், தமிழ்புலிகள் கட்சியின் சிந்தனை செயலாளர் சித்திக், சலீம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, ம.தி.மு.க , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் புலிகள், யூனியன் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 6 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் முதல் மாநிலமாக விளங்குகிறது. கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும். நிதி பற்றாக்குறை இருந்தாலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளில் 72 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் கூடுதலாக 2 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. இருந்த போதிலும், மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் 413 இடங்களில் இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 2 ஆயிரத்து 834 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இருமொழி கொள்கையில் மாற்றம் இல்லை. தனியார் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படிக்கும் 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கும் அரசு சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
2013-14-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் பணியில் இல்லாத காரணத்தினால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் கிருஷ்ணசாமி (வயது57). உடல் நலம் சரி இல்லாததால் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்து இருந்தார்.
இனதயொட்டி உடல்நிலையை பரிசோதிக்க அவர் தனது மனைவி மல்லிகாவுடன் காரில் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
காரை அவரே ஓட்டிச் சென்றார். அருகில் அவரது மனைவி அமர்ந்து சென்றார் கோவை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி கோபிக்கு வந்து கொண்டிருந்தார்.
நம்பியூர் அருகே பூச்ச நாயக்கன் பாளையம் பகுதியில் ஒரு வளைவில் கார் வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள ஒரு புளிய மரத்தில் மோதி ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டும் அவரது மனைவியும் கார் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். மனைவி மல்லிகாவுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. டிஎஸ்பியும் காயத்துடன் தப்பினார்.
பிறகு இருவரும் மீட்கப்பட்டு கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து நம்பியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து பவானிசாகருக்கு வேஸ்ட் அட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை 8.30 மணியளவில் புளியம்பட்டி அருகே வந்தது.
அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பும் போது அந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வியாபாரி பழனிசாமி மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர் மீது லாரி கவிழ்ந்ததில் வியாபாரி பழனிசாமி இடுபாடுக்குள் சிக்கி பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.
இதில் அவர் பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான வியாபாரி உடல் சத்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இதை போல் முன்பு ஒரு லாரி ஒரு வீட்டுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்த இடத்தில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
கோபி அருகே உள்ள இண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 36) செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி பெயர் வைத்தீஸ்வரி.
சசிபிரியா (8) என்ற ஒரு மகள் உள்ளாள். இவள் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று மதியம் மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மகளை அழைத்துக்கொண்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு முருகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கோபி அருகே நல்ல கவுண்டன்பாளையத்தில் சென்றபோது எதிரே கோபி மொடச்சூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இதில் எதிர்பாராத வகையில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே முருகேஷ் பரிதாபமாக இறந்தார். மகள் சசிபிரியாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சசிபிரியாவும் பரிதாபமாக இறந்தாள்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சீனிவாசன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் தந்தையும்- மகளும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






