search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ் டெப்போ முன்பு டிரைவர், கண்டக்டர்கள் இரவில் திடீர் ஆர்ப்பாட்டம்
    X

    அரசு பஸ் டெப்போ முன்பு டிரைவர், கண்டக்டர்கள் இரவில் திடீர் ஆர்ப்பாட்டம்

    பெருந்துறை அருகே அரசு பஸ் டெப்போ முன்பு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை சேனடோரியத்தை அடுத்த பைபாஸ் ரோடு அருகே பெருந்துறை அரசு பஸ் டெப்போ உள்ளது. இந்த அரசு பஸ் டெப்போவில் சுமார் 50-க்கும் மேற்ப்ட்ட வெளியூர் செல்லும் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் உள்ளன.

    இங்கு வரும் பஸ்கள் அனைத்தும் தினமும் காலையில் இங்கிருந்து சென்று மீண்டும் இரவில் வருவது வழக்கம். ஒரு சில பஸ்கள் மட்டும் பகல் வேளையில் டெப்போவிற்கு வரும். இந்த பஸ்கள் அனைத்தும் இங்கு வந்து தான் டீசல் பிடிக்க வேண்டும்.

    டீசல் பம்ப் டெப்போ நுழைவு வாயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தள்ளி அமைந்துள்ளது. இந்த டீசல் பம்பின் முன்பகுதியில் தற்போது ஆட்டோமேடிக் கார் வா‌ஷர் எனப்படும் தானியங்கி பஸ் கழுவும் எந்திரம் அமைப்பதற்காக ஷெட் அமைக்கப்பட உள்ளது.

    உள்ளே நுழையும் பஸ் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே டீசல் பிடிக்க செல்ல முடியும். இதனால் பின்னால் வரும் பஸ்கள் அனைத்தும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.. எனவே இந்த இடத்தில் ஆட்டோமேடிக் கார் வா‌ஷர் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். டெப்போவின் பின்பகுதியில் உள்ள காலி இடத்தில் ஷெட் அமைக்க வேண்டும். இதனால் பஸ்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் முதல் இந்த பணிகள் தொடங்கப்பட்டன. நேற்று இரவு டெப்போவிற்கு வந்த பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அங்கு பணி நடைபெறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து இரவு டெப்போ முன்பு வெளியே அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று கூடினர். அவர்கள் உடனடியாக பணியை நிறுத்த வேண்டும். விரைவில் இந்த பகுதியில் 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் அந்த பணியின் போது ஷெட் அமைக்கும் இடமும் பாதிக்கப்படும்.

    எனவே மாற்று இடத்தில் இந்த பணியை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×