என் மலர்tooltip icon

    ஈரோடு

    • துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.
    • சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை சாலையில் கலெக்டர் அலு வலகம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விதை சான்று மட்டும் அங்கக சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.

    பின்னர் தனி நபரின் அலுவலகத்தில் புகுந்து ஒரு லேப்டாப் மற்றும் பணம் ரூ.9000 மர்ம நபர்கள் திருடி உள்ளனர். அருகில் இருந்த பைனான்ஸ் நிறுவனத்தில் திருட முயற்சித்துள்ளனர்.

    ஆனால் பணம் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • கண்காணிப்பு கேமிராவில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் தலவுமலையில் ஓட்டல் நடத்தி வருபவர் முத்துசாமி (55). இவர் கடந்த 3-ந் தேதி தனது ஓட்டலில் வழக்கம்போல் வேலைநேரம் முடிந்த பின்னர் தனக்கு சொந்த மான மோட்டார்சை க்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதில் மோட்டார் சைக்கிளை திருடும் காட்சி பதிவாகி இருந்தது.

    அது நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த பழனிமுத்து என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (40) என்பது தெரிய வந்தது. இவர் ஓட்டலி்ல் 2 மாதங்கள் வேலை செய்து விட்டு நின்றவர் என்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் அறச்சலூர் போலீசார் பூந்துறையில் இருந்து எழுமாத்தூர் செல்லும் ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்ததில் அவர் அறச்சலூர் தலவுமலையில் ஓட்டலில் நிறுத்தியிருந்த ேமாட்டார் சைக்கிளை திருடிய கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அறச்சலூர் போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • குண்டேரிப்பள்ளம் அணைக்கு இரவு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.
    • அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 26.26 அடியாக காணப்படுகிறது.

    டி.என்.பாளையம், நவ.7-

    ஈரோடு மாவட்டம் கோபி, சத்தி மற்றும் குண்டேரி பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் டி.என்.பாளை யம் அடுத்த கொங்கர்பாளை யம் ஊராட்சி குண்டேரிப்பள்ளம் அணைக்கு இரவு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு 86.2 மி.மீ அளவு மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

    குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை க்கு நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து உள்ளது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் முழுக்கொள்ள ளவு 41.75 அடி ஆகும். நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 24.32 அடி இருந்தது.

    இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து 66.44 கன அடி நீர் வந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 26.26 அடியாக காணப்படுகிறது.

    மேலும் டி.என்.பாளை யம் சுற்றுவட்டார பகுதி களான டி.ஜி.புதூர், ஏளூர், அரக்கன் கோட்டை, வாணி ப்புத்தூர், கொங்கர்பாளையம், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், நஞ்சை புளியம்பட்டி, புஞ்சை துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, பெருமுகை, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 2 மணி நேரம் நேரம் கன மழையும், அதனை தொடர்ந்து மிதமான மழை யும் பெய்தது.

    கணக்கம்பாளையம் பகுதியில் 95.4 மி.மீ, குண்டேரிப்பள்ளம் 86.2 மி.மீ, கொடிவேரி 44 மி.மீ மழை பொழிவும் பதிவாகி உள்ளது.

    • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
    • கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை மழை பெய்யவில்லை. ஆனால் இரவு 9 மணி அளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் இரவு இரவு நேரத்தில் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு மாநகர் பகுதியில் இரவு 9 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதியில் அகில் மேடு வீதி, பஸ் நிலையம், பெரிய வலசு, வீரப்பன் சத்திரம், ரெயில் நிலையம், கருங்கல்பாளையம், நாடார் மேடு, வில்லரசம்பட்டி, அசோகபுரம், திண்டல் உள்பட பல்வேறு பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு மோசிகீரனார் வீதியில் 50 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுது மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். வீட்டுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்ததால் குழந்தைகள் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு நாடார் வீட்டில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. ஈரோடு அன்னை சத்யா நகர், மல்லிநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

    அங்குள்ள பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் செடி, கொடிகள் அடைத்து இருந்ததால் மழை நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது. இதனால் இப்போது மக்கள் வெளியே வர முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    சில மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வாலியால் கொண்டு வெளியே இறைத்து ஊற்றினர். மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி வாகனம் ஒன்று பள்ளத்தில் சிக்கியது.

    ஈரோடு ரங்கபாளையம் கே.கே.நகர் பாலத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு 4 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 124 மில்லி மீட்டர் அதாவது 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணைப்பகுதியில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, சென்னிமலை, மொடக்குறிச்சி, பவானி சாகர், வரட்டுப்பள்ளம், நம்பியூர், பெருந்துறை, அம்மாபேட்டை, கொடுமுடி, தாளவாடி, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இரவு நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    நேற்று இரவு பலத்த மழையால் ஈரோட்டில் இருந்து கொடுமுடி செல்லும் டவுன் பஸ்சில் பயணிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைப்பிடித்து சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கனமழையால் மாவட்ட முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இரவில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானி-124, குண்டேரிப் பள்ளம்-86.20, ஈரோடு-80.30, கவுந்தப்பாடி-80.20, கோபி-49.20, கொடிவேரி-44, சென்னிமலை-42, மொடக்குறிச்சி-40, பவானிசாகர்-36, வரட்டுப் பள்ளம்-32, நம்பியூர்-30, எலந்தகுட்டைமேடு-29.40, பெருந்துறை-25, அம்மாபேட்டை-28.80, கொடுமுடி-22, சத்திய மங்கலம்-14, தாளவாடி-4.

    • சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந்தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதி ர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.

    ஆனால் அன்று சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை வந்தது. இதை அடுத்து இன்று காலை சீமான் கட்சி நிர்வாகிகளுடன் ஈரோடு கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி (பொறுப்பு) வழக்கை வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்று மீண்டும் சீமான் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

    முன்னதாக சீமான் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீதிமன்றம் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது.
    • ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளையும், ஆளாத மாநிலங்களில் ஆளும் கட்சியையும் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை கொண்டு சோதனை நடத்துகிறது.

    தமிழகத்தில் தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடக்கவில்லையா? இத்தனை நாட்கள் கழித்து தேர்தல் வரும் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஜெகத்ரட்சகன் இப்போ பணக்காரர் ஆனவர் இல்லை.

    இந்த சோதனையில் நேர்மை இல்லை என இது முதலமைச்சர் சொன்னது உண்மைதான். சோதனையை வைத்து அச்சுறுத்தலை பா.ஜ.க. செய்கிறது. இலங்கையில் ஜனநாயகம் இல்லை. சாதாரண பூர்வ குடிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ராணுவத்தில் அனைத்து தரப்பு இந்தியர்களும் இடம் பெற முடியும். ஆனால் இலங்கையில் பூர்வ குடிகள் ராணுவத்தில் இடம்பெற முடியாது.

    சனாதனம் என்றால் என்ன என்பதற்கான வரையறை இல்லை. வர்ணாசிரம தர்மம், சனாதனம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது. பிறப்பின் அடிப்படையில் உயர்வு- தாழ்வு சொல்வதுதான் சனாதன வர்ணாசிரம கொள்கை.

    இந்த கோட்பாடுகள் இந்த நூற்றாண்டிலும் அறிவியல் உலகத்திலும் இதனை நம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஒருவரை தாழ்ந்தவன் என்று சொல்ல மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எனக்கு யாரும் அடிமை இல்லை, நானும் யாருக்கும் அடிமை இல்லை. இதைத்தான் பெரியாரும் சொல்கிறார்.

    உலகத்திலேயே உயர்ந்த குடி உலகத்திற்கு உணவளிக்கும் உழவர் குடி மட்டுமே. சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் கலந்து கொண்டதே குற்றம் என சொல்வதில் நியாயம் இல்லை. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அவருடன் கூட்டணி வைப்போமா என்பது குறித்து அவருடன் பேசி விட்டு தான் சொல்வோம்.

    தற்பொழுது நாங்கள் தனித்து போட்டியிடுகின்றோம். 20 தொகுதிகளில் பெண்களையும் 20 தொகுதிகளில் ஆண்களையும் நிறுத்துகின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.
    • மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இரட்டை கரடு பகுதியில் மலை அடிவாரத்தில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் பெரிய, பெரிய ராட்சத பாறைகள் உள்ளன.

    மலை அடிவாரத்தில் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) என்பவர் வீடு உள்ளது. கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் ஸ்ரீதருடன் வீட்டில் வசித்து வருகிறார். கிருஷ்ண மூர்த்தி கூலி தொழிலாளி.

    இந்நிலையில் இரட்டைக்கரடு பகுதியில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ண மூர்த்தி தனது மனைவி, மகனுடன் வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    பலத்த மழை காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு 2 ராட்சத பாறைகள் திடீரென கிருஷ்ணமூர்த்தி வீட்டின் மீது உருண்டு விழுந்தது.

    ஒரு பாறை வீட்டின் சமையல் அறையிலும், மற்றொரு பாறை வீட்டின் ஹாலிலும் உருண்டு விழுந்தது. இதில் சமையல் அறையின் ஒரு பகுதி மற்றும் வீட்டின் ஹால் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. சமையலறையில் இருந்த ஸ்டவ், பாத்திரம், குடம் போன்றவை முற்றிலும் சேதமடைந்தது.

    இரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதால் கிருஷ்ணமூர்த்தி எழுந்து வந்து பார்த்தார். அப்போது பாறைகள் வீட்டின் மீது உருண்டு விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    நல்ல வாய்ப்பாக பாறைகள் கிருஷ்ணமூர்த்தி தூங்கிக் கொண்டிருந்த அறையில் விழாததால் அவர் குடும்பத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும் அப்பகுதி மக்கள் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழலாம் என்று பீதி அடைந்து உள்ளனர். 

    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் சதீஷ் என்ற கபாலி (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் புறாக்களை வளர்த்து வருகிறார்.

    இவரது வீட்டையொட்டி பொன்னுசாமி வீதி உள்ளது. இதன் அருகே மின் டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சதீஷ் வளர்க்கும் புறா ஒன்று பொன்னுசாமி வீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் உட்கார்ந்து இருந்தது. எங்கே மின்சாரம் தாக்கி இறந்து விடுமோ என்ற பயத்தில் புறாவை காப்பாற்ற சதீஷ் முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் கைபட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சதீஷை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தையடுத்து கடந்த 30-ம் தேதி பொன்னுசாமி வீதியில் பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நீரூற்று நிலையத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், மின் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி வெடித்து வருதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி இதனை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.11 அடியாக உள்ளது. அதாவது கடந்த 3 நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 926 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    • கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கவுரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கவுரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதற்காக அவர் மாதம் தோறும் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் புளியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.

    அப்போது கவுரியை உடல் பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை பிறக்கும் தேதி வந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து அன்று மாலை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கவுரியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கவுரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது பிறந்த குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

    இதனையடுத்து குழந்தைக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது. எனினும் குழந்தை உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்த ஒரு நாளே ஆன பெண் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆசிரியை மஞ்சுளாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
    • இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    பெருந்துறை:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே குச்சிபாளையம் அடுத்த வெள்ளக்கல்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி மஞ்சுளா (52). இவர் பள்ளிபாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆசிரியை மஞ்சுளா தனது மொபட்டில் குச்சி பாளையத்தில் இருந்து கோவிந்தம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் மஞ்சுளாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு ஆசிரியை மஞ்சுளா மூளை சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் மஞ்சுளாவின் உடல் பாகங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அளிப்பதாக விருப்பம் தெரிவித்தனர். அதன் பேரில் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து இன்று ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அவரது இதயம், சிறுநீரகம், கண் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    இதையடுத்து அவரது உடலுக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், ஆசிரியரின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆசிரியை மஞ்சுளாவின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    • படுகாயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • மலையம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கணபதிபாளையம் எடக்காடு காலனியை சேர்ந்தவர் ராசன் 65) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இறந்தார். இவரது உடல் பாசூரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக இவரது உறவினர்கள் பலர் தகனம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தகனம் முடிந்ததும் உறவினர்கள் அனைவரும் ஒரு சரக்கு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சரக்கு வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள தோட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் எடக்காடு காலனியை சேர்ந்த பழனி சாமி, முருகன் (61), கண்ண ம்மாள் (60), சரவணன் (55), சாந்தி (45), பாப்பாத்தி (40), மாதம்மாள் (55), பரமேஸ்வரி (32), சண்முகம் (65), மல்லிகா (55), பழனியம்மாள் (65), சொர்ணம்மாள் (55), குழந்தைசாமி மூர்த்தி (48) ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர்.

    இதையடுத்து படுகாயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய பழனிசாமியை கணபதி பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிசாமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்த மற்ற 12 பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×