என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மழை நீர் வீடுகளுக்குள் 2 அடி உயரத்திற்கு புகுந்ததால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
    • வீடுகளில் மழை நீர் புகுந்ததால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கத்தை தொலைத்து பெரும் அவதி அடைந்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவும் பலத்த மழை பெய்ததால் விவசாய நிலங்கள் வழியாக முழுமையாக மழை நீர் வெளியேற வழியில்லாத நிலையில் தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.

    மழை நீர் வீடுகளுக்குள் 2 அடி உயரத்திற்கு புகுந்ததால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூகலூர் பேரூராட்சி தலைவர் ஜெயலட்சுமி, கோபி தாசில்தார் உத்தரசாமி மற்றும் வருவாய்த்துறையினர், கோபி சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த இரும்பு கதவு வழியாக வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.

    மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது குறித்து வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், பல ஆண்டு காலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தை சென்றடைந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர் தடுப்பு சுவர் அமைத்ததால் மழை நீர் வெளியேற வழியில்லாத நிலையில் குடியிருப்புகளை சூழ்ந்தும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது தெரியவந்தது.

    வீடுகளில் மழை நீர் புகுந்ததால் இரவு நேரங்களில் மக்கள் தூக்கத்தை தொலைத்து பெரும் அவதி அடைந்தனர். இன்னும் சிலர் வீடுகளில் புகுந்த நீரை குடம், வாலிகளை கொண்டு இறைத்து வெளியேற்றினர்.

    • கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஈரோடு மாநகர் பகுதியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தீவிரம் அடைந்து மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், கொடிவேரி, வரட்டுப்பள்ளம், பவானி, அம்மாபேட்டை, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் மிக பலத்த மழை பெய்து. பவானியில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கொடிவேரி பகுதியில் அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், பவானிசாகர், கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் மொடக்குறிச்சி, நம்பியூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

    கோபிசெட்டிபாளையம் அடுத்த அரசூர் - தட்டாம்பு தூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் 2 முறை மழைநீரில் மூழ்கி போக்குவரத்து தடைபட்டது.

    அதனை சரி செய்து மீண்டும் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மீண்டும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.

    இதனால் நம்பியூரில் இருந்து சத்தி செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடத்தூர் பள்ளிக்கூடம் பிரிவு சுண்டக்காம்பாளையம் வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு-பவானி செல்லும் சாலையில் உள்ள ஆர்.என்.புதூர் பகுதியில் காளிங்கராயன் வலது கரையில் அமைந்துள்ள 30 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த பி.பி.டி. ரகம் நெற்பயிர்கள் பெய்த கனமழையினால் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளன. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தின் முக்கிய அணைகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், பெரும்பள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி-71, அம்மாபேட்டை-60.40, வரட்டுப்பள்ளம்-58.40, கோபி-52.20, பவானிசாகர்-42, பெருந்துறை-36, பவானி-19.20, சத்தியமங்கலம்-18, கவுந்தப்பாடி-15, ஈரோடு-9, மொடக்குறிச்சி-6.20, நம்பியூர்-6, சென்னிமலை-4.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 460 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • ஈரோடு சம்பத் நகரில் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மசாஜ் சென்டரின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக மசாஜ் சென்டர் அதிகரித்து வருகிறது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வடமாநில பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

    இதில் ஒரு சில மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவ்வப்போது மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்களை மீட்டுள்ளனர். அதற்கு காரணமான இடைத்தரகர்களையும் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு சம்பத் நகரில் பகுதியில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1000 ரூபாய் முதல் மசாஜ் செய்யப்படும் என கூறி பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த மசாஜ் சென்டரின் ஊழியர்களான, ரவிக்குமார், விமல்ராஜ் மற்றும் செல்வின் சச்சு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய 6 இளம்பெண்களை மீட்டு, மசாஜ் சென்டரை பூட்டி சீல் வைத்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மசாஜ் சென்டரின் உரிமையாளர் சுமன்சிவாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர்கள் சஞ்சய் மற்றும் கவுதம். இவர்கள் பெருந்துறையில் உள்ள சிப்காட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். தினமும் இவர்கள் மோட்டர் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தனர்.

    பவானியில் இருந்து சென்ற இவர்கள் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு பச்சப்பாலி மேடு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக சென்ற லாரியினை முந்தி செல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரும் திடீரென நிலை தடுமாறி லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து லாரி டிரைவரான சேலத்தை சேர்ந்த குமார் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.
    • தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த நாட்களாக பரவலாக இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதே போல் போல் நேற்று இரவும் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கொடிவேரி மற்றும் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி பகுதியில் 7 செ.மீட்டர் மழை கொட்டியது.

    இதனால் பவானி ஆற்றில் மழை வெள்ளம் இருகரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் கொடிவேரி தடுப்பணையிலும் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும் உபரி நீர் அதிகளவில் செல்வதாலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. இன்று கொடிவேரிக்கு பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். உள்ளே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது.
    • யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. மேலும் கனரக வாகனங்களும் அதிக அளவில் இந்த பாதையில் வந்து கொண்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் மழை அவ்வப்போது பொழிந்து வருவதால் மலைப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகளில் பிடிப்பு தன்மை குறைந்து பாறைகள் சாலையில் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் பர்கூர் சாலையில் செட்டிநெடு என்ற இடத்தின் அருகே பாறை உருண்டு விழுந்து சாலையில் நின்றது. அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வராமல் இருந்த தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி ஜவுளி விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
    • சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் திங்கள் மாலை முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது.

    தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரள, தெலு ங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு இங்கு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை மந்தமாக நடந்து வந்த நிலையில் கடந்த வாரம் முதல் தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடி த்துள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவாக வந்திருந்தனர்.நேற்று இரவு முழுவதும் விடிய விடிய ஜவுளி சந்தை வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    மழை பெய்தாலும் மழையை பொறுப்படுத்தாமல் வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை மொத்தம் கொள்முதல் விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    குழந்தைகளுக்கான ஜவுளி துணி விற்பனைகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதைபோல் பெண்களுக்கான காட்டன் சுடிதார் வியாபாரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. ஆண்களுக்கான பேண்ட், சட்டை, வேஷ்டி விற்பனையும் விறு விறுப்பாக நடந்தது.

    இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும் போது,

    கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினை காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி கடந்த வாரம் முதல் ஜவுளி விற்பனை ஓரளவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    இந்த வாரம் ஜவுளி வார சந்தை நேற்று மாலை கூடியது. இரவில் விடிய விடிய வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    நூற்றுக்கணக்கான ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர். சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடைபெற்றது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது. பெட் சீட்டுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன.

    இந்த ஆண்டு தீபாவளியொட்டி புதிய டிசைன்களில் ஜவுளி ரகங்கள் அதிகம் வந்துள்ளது. இதனால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் சாலையின் இருபுறம் சிறு சிறு ஜவுளி கடைகள் போடப் பட்டிருந்தன. அதிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேப்போல் சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம், பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஜவுளிக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கும் வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    அதே நேரம் மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரண மாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67. 72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,056 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 400 கன அடியாக நீர் திறந்து விட்ட நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    • கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை பணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 78). இவர் பெருந்துறை வார சந்தையில் சோடா கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக அவருக்கு தீராத வயிற்று வலி இருந்தாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் வயிற்று குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த அவர் பெருந்துறை வார சந்தையில் உள்ள அவரது சோடா கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சொட்டு நீர் பைப்பினை வாலிபர் ஒருவர் எடுத்துக் கொண்டிருந்தார்.
    • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கொல்லம்பாளையம் ஏரி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உமா சங்கர் (49). இவரது தோட்டத்தில் பயிர்களுக்கு சொட்டுநீர் முறையில் விவசாயம் செய்து வருகின்றார்.

    இந்த நிலையில் அந்த சொட்டு நீர் பைப்பினை வாலிபர் ஒருவர் உமா சங்கரின் தோட்டத்தில் புகுந்து பைப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த தோட்ட த்தின் உரிமையாளர் உடனடியாக அங்கு சென்று அவரை பிடித்தார்.

    இதையடுத்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனை அடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஒலகடம் அடுத்த தாண்டா ம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (25) என்பதும், அவர் பைப்புகளை விற்பனை செய்வதற்காக திருடியதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 994 மூட்டைகள் கொண்ட 45 ஆயிரத்து 525 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.90 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.89.25 காசுகள், சராசரி விலையாக ரூ.87.42 காசுகள் என்ற விலை களிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.01 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 16 ஆயிரத்து 255 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22 .88 காசுகள்,

    அதிகபட்ச விலையாகரூ 29. 60 காசுகள், சராசரி விலையாக ரூ.27.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 765 மூட்டைகள் கொண்ட 36 ஆயிரத்து 349 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பி்ல் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.78.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.49 காசுகள், சராசரி விலையாக ரூ.85.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.64.68 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.36 காசுகள், சராசரி விலையாக ரூ.80.89 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.

    மொத்தம் எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேர்த்து தேங்காய்கள், தேங்காய் பருப்பு ரூ.66 லட்சத்து 70 ஆயிரத்து 493-க்கு விற்பனையானது.

    • ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கந்தாம்பாளையம் பிரிவு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் கந்தாம்பாளையம் பிரிவு அருகே வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    விசாரணையில் வேனில் வந்தவர்கள் பவானி குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35), பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்த செல்வன் (48) என்பது தெரிய வந்தது.

    அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கி பள்ளகாட்டூர் ரோஜா நகரில் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    மொத்தம் அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட வேனை போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பவானி மண் தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் பொதுமக்களிடம் இருந்து ரேசன் அரிசியை வாங்கி பெருந்துறை பகுதியில் தங்கி வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    ×