என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்த மாணவியை வெட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி பகுதிக்கு உட்பட்ட பட்டறை வேலம் பாளையத்தில் இன்று காலை 14 வயது மாணவி குழாய் அடியில் துணி துவைத்துக் கொண்டி ருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்து அந்த மாணவியை வெட்டினார்.

    இதில் மாணவிக்கு முகம், கழுத்து, கை போன்ற பகுதிகளில் வெட்டு விழுந்தது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த ஆண்டில் மட்டும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தாலும், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தாலும் பவானிசாகர் அணை 3 முறை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதன் காரணமாக கடந்த 1-ந் தேதி மீண்டும் முழு கொள்ளளவான 105 அடியை பவானிசாகர் அணை எட்டியது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3597 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 1100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 6-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர் பந்தல்பாளையம், ஆர்.என். புதூர், கோண வாய்க்கால், லட்சுமி நகர், காளிங்கராயன் பாளையம், பெருமாள் மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம் பரப்பு, கங்காபுரம், செல்லப்பன் பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம்.

    மேட்டூப்பாளையம், நொச்சி பாளையம், தயிர் பாளையம், கொங்கம் பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம் பாளையம், கே.ஆர்.பாளையம், ராசாம் பாளையம், தொட்டம்பட்டி, பி.பெ.அக்ரகாரம்.

    மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம், காவேரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம் பாளையம், ஈ.பி.பி. நகர், எஸ்.எஸ்.டி. நகர். வேலான் நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை.

    இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் வாரிய செயற் பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் கவுன்சிலர் 18 பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் பதிவான வாக்குகள் மொடக்குறிச்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் யுவரேகா வெற்றி பெற்றார்.

    யூனியன் கவுன்சிலர் 18 பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி, 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பேபி குமார், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கேசவன், 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகானந்தம், 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி, 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கருணாகரன், 7-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணி, 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடசாமி, 9-வது வார்டில் அ.தி.மு.க. கணபதி, 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி வெற்றி பெற்றார்.

    11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி மணி, 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் உமா மகேஸ்வரி, 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விமலா தேவி, 14-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தனபாக்கியம், 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.சண்முகம், 16-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கவுசல்யா, 17-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் புனிதாவதி, 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    மொடக்குறிச்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

    46 புதூர் ஆர்.பிரகாஷ், லக்காபுரம் சாலை மாணிக்கம், முத்து கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி, நஞ்சை ஊத்துக்குளி சரண்யா தேவி, குளூர் செல்வராஜ், ஆனந்தம்பாளையம் காயத்ரி, அட்டவணை அனுமன் பள்ளி தனபாக்கியம், எழுமாத்தூர் ஈஸ்வரமூர்த்தி, ஈஞ்சம்பள்ளி மாயவன், கணபதி பாளையம் பத்மாவதி, காகம் சண்முகம், கனக புரம் சரண்ய, காட்டு வலசு மகாசாமி, குளவிலக்கு லோக நாயகி, முகாசி அனுமன் பள்ளி பெரியசாமி, நஞ்சை காளமங்கலம் நவநீதன், பழமங்கலம் மேகலை, பூந்துறை சேமூர் தமிழ் செல்வன், புஞ்சை காளமங் கலம் திலகவதி, துயம் பூந்துறை பேபி, 60 வேலம் பாளையம் செல்வி, விளக்கேத்தி சுப்பிரமணியம், கண்டி காட்டுவலசு மகாசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வீட்டிலிருந்து வெளியே சென்ற என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையம் குளத்து வீதியை சேர்ந்தவர் முருகன் பெயிண்டர். இவரது மனைவி பெயர் சுலோச்சனா.

    இவரது மகன் முத்துகோபால் (வயது 27). சிவில் என்ஜினீயர். இவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது பாட்டி குப்பாயாள் வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முத்துகோபால் பாட்டி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் காணாமல் போன சிவில் என்ஜினீயர் முத்துகோபால் இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே பிணமாக கிடந்தார். அவரது உடலிருந்து துர்நாற்றம் வீசியது. அவர் இறந்து சில நாட்கள் ஆகி இருக்க கூடும் என தெரிகிறது.

    அவரது முகம் வீங்கியபடி இருந்தது. இதனால் அவரது சாவில் மர்மம் உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தாயாருக்கு போன் செய்துவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த வெள்ளோடு கொம்மக்கோவில் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா (வயது 31). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கவிதா உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்திகேயன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கவிதா இருந்தார். அப்போது அவர் தனது தாய்க்கு போன் செய்து தனக்கு கடுமையான வயிற்றுவலி இருப்பதாக கூறினாராம்.

    இந்நிலையில் வேலைக்கு சென்ற கார்த்திகேயன் வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டிற்குள்ளே வந்து பார்த்த போது கவிதா தூக்குப்போட்டு கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் கவிதாவை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் தாளக்குளம் 3-வது வார்டு ஒன்றிய அதிமுக வேட்பாளர் மணி என்கிற ராமலிங்கம் 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த தகவல் அறிந்ததும் மயங்கி விழுந்தார்.
    பவானி:

    பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

    அப்போது அந்த பகுதியில் அனைத்து கட்சி பிரமுகர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இங்கு வாக்கு எண்ணும்போது சிறு குளறுபடி ஆனது. இதனால் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இந்த நிலையில் தாளக்குளம் 3-வது வார்டு ஒன்றிய அதிமுக வேட்பாளர் மணி என்கிற ராமலிங்கம் இதில் 7 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    இந்த தகவல் அறிந்ததும் ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்து மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.




    சென்னிமலை யூனியன் தேர்தலில் ஓட்டுக்கள் பிரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் வந்து ஓட்டுகளை பிரித்துக் கொடுத்தார்.
    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 கிராம ஊராட்சி 14 யூனியன் வார்டு மற்றும் கிராம ஊராட்சிகள் வார்டு 186, மாவட்ட ஊராட்சிகள் வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் துவங்கியது முதல் கட்டமாக வடமுகம், வெள்ளோடு, புங்கம்பாடி. குமாரவலசு ஆகிய ஊராட்சிகளில் பதிவான ஓட்டுகள் பிரிக்கப்பட்டது.

    இந்த பணி முடிய 2.30 மணி நேரம் ஆகி காலை 10:30 மணிக்கு தான் ஓட்டுகள் எண்ணும் பணிகள் தொடங்கியது. ஓட்டுகள் பிரிக்கும் பணி 5 கட்டமாக நடக்க இருந்த நிலையில் மூன்றாம் கட்ட ஓட்டு பிரிக்கும் பணி மாலை 5 மணி வரை தொடங்கவில்லை. இந்த தகவல் அறிந்து வந்த மாவட்ட கலெக்டர் கதிரவன், திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகியோர் வந்து ஓட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன் பின்பு பணிகள் சுறுசுறுப்படைந்தது இரவு 12.40 மணி அளவில் அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.



    ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியனில் உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கணவன், யூனியன் கவுன்சிலர் வார்டுக்கு போட்டியிட்ட மனைவி இருவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருப்பவர் வெ.பா.இளங்கோ. இவர் குமராவலசு கிராம ஊராட்சி தலைவர் பதவிற்கு போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 58 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இவரது மனைவி காயத்திரி யூனியன் வார்டு 4-ல் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி அ.தி.மு.க., வேட்பாளரை விட 1,339 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    ஒரே குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் உள்ளாட்சி தேர்தலில் வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தினை கொடுத்துள்ளது.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. இதில் பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு செல்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் சின்னவலசு என்கிற சுக்கிரமணிய கவுண்டர் வலசு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 31-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது. அன்று இரவு கம்பம் நடும் விழாவும் நடந்தது, இதையொட்டி கம்பத்திற்கு பக்தர்கள் குறிப்பாக பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    இரவு (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 7-ந் தேதி பக்தர்கள் காவேரி சென்று தீர்த்தம் மற்றும் கரகம் எடுத்து வருகிறார்கள்.

    மறுநாள் (8-ந் தேதி) காலை பொங்கல் விழா நடக்கிறது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருகிறார்கள். இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கப்படுகிறது. விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    8-ந் தேதி அம்மன் மலர் பல்லக்கில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. 

    நம்பியூரில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்தில் ஆசிரியர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட ஓட்டுகள் எண்ணும் பணி நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடந்தது. இதில் நம்பியூர் அருகே உள்ள மலையப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரவணன் என்பவர் இந்த ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    ஓட்டு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்தில் ஆசிரியர் சரவணன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை ஏற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோட்டில் அ.தி.மு.க சார்பில் மக்கள் இ-சேவை மையத்தை எம்.எல்.ஏ.க்கள் கேவி ராமலிங்கம், கேஎஸ் தென்னரசு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

    ஈரோடு:

    அ.தி.மு.க மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி ஏற்பாட்டில் சூரம்பட்டிவலசு, வார்டு எண் 47-ல் அம்மா மக்கள் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா மக்கள் இ-சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ், கேசவமூர்த்தி, ஜெயராஜ் கோவிந்தராஜ், முருக சேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக் குமார், மாணவரணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாதையன், சூரம்பட்டி தங்கவேலு உள்பட பலர் நிகழ்ச்சி கலந்து கொண்டனர்.

    இந்த இ-சேவை மையத்தில் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்குதல் ,ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பித்தல், திருத்தம் செய்தல். வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட சான்றிதழ், ஆன்லைன் பட்டா சிட்டா வில்லங்க சான்றிதழ், பணபரிமாற்றம், ஈ.பி பில் கட்டணம், பான் கார்டு, பாஸ்போர்ட், வேலைவாய்ப்பு பதிவு செய்தல், டி.என்.பி.சி. அரசு தேர்வு பதிவு செய்தல், இரண்டு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல் போன்ற பணிகள் இலவசமாக செய்து கொடுக்கப்படும். 

    ×