என் மலர்
ஈரோடு
ஈரோடு:
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு செயல்களை அரசு செய்துள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக அரும்பணி ஆற்றியவர் தந்தை பெரியார்.
ஒரு நாடு எப்படி சீர் திருத்தத்தை உருவாக்குகிறது என்பதற்கு தந்தை பெரியார் எடுத்துக்காட்டாக விளங்கியவர். தந்தை பெரியாரின் வழியில் திராவிட இயக்கம் 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் வேரூன்றி இன்றும் திராவிட இயக்கம் நிலைத்து நிற்கிறது என்பதற்கு தந்தை பெரியாரின் வழிகாட்டுதல் தான் காரணம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மாணவர்களின் நலன் கருதி மன அழுத்தத்தை குறைக்க ஆன்லைன் வகுப்பு கூடாது என்ற நிலையை அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் முதல்வர் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும். இதற்காக அரசு பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாடுபடுவார். இருமொழிக் கொள்கை என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
பள்ளி கட்டணம் முழுமையாக வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார்கள் வந்ததன் பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை.
பொருளாதார நெருக்கடியில் அதுபோன்ற நிலைகளில் அரசால் அறிவிக்க இயலாது. மத்திய அரசு 21-ந் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளியை திறக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள். பள்ளியை திறப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்வோம். 2-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பெரியார் நகர் பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள கொடுமணல் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருந்ததால் பல்வேறு ஆய்வுக்குழுக்கள் மூலம் ஆய்வுகள் நடைபெற்று வந்தது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் தலைமையில் கொடுமணல் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 8-வது அகழாய்வு பணி நடந்து வருகிறது.
இதில், கொடுமணலில் கல்லங்காடு என்ற இடத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதே பகுதியின் அருகில் அணிகலன்கள் தயார் செய்த தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்தது.
தற்போது கல்லறைகள் இருந்த பகுதியில் சுமார் 6 அடி ஆழத்தில் 50 மீட்டர் தூரத்துக்கு நீண்ட கால்வாய் போல் தோண்டி ஆய்வு செய்தனர். அதில் பெரிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒரு முதுமக்கள் தாழியில் மண் இருந்தது. அதனை அகற்றிய போது மனித மண்டை ஓடு, துண்டு, துண்டாக கிடந்த கை, கால் எலும்பு மற்றும் முதுகுத்தண்டுவட எலும்பு ஆகியவை இருந்தன. இதில் சிலவற்றை ஆய்வுக்குழுவினர் பத்திரப்படுத்தி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து அகழாய்வு துறை திட்ட இயக்குனர் ஜெ.ரஞ்சித் கூறுகையில், ‘இதுவரை நடந்த ஆய்வில் தற்போதுதான் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான முழு அடையாளமாக 3 வரிசைகளாக செங்கற்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட தொழிற்கூடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் தான் பளிங்கு கற்களால் ஆன அணிகலன்கள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு அதிகமான கல்மணிகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைத்துள்ளன.
இந்த அகழாய்வு பணி வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது’ என்று தெரிவித்தார்.
மகாளய அமாவாசை நாளை (வியாழக்கிழமை) வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் செய்து புனித நீராடுவதற்காக பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
தற்போது கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரே இடத்தில் அதிகம்பேர் கூடுவதால் நோய்தொற்று பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறை, கொடுமுடி மற்றும் காவிரி, பவானி ஆற்றங்கரைகளில் உள்ள புனித- புண்ணியதலங்களில் பொதுமக்கள் கூடி திதி, தர்பண பூஜைகள் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவு பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலை பிரிவில் ஒரு லாரி நேற்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி திடீரென மொடச்சூர் சாலையில் திரும்பியது. அப்போது அந்த வழியாக பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது.
இதனால் மொபட் லாரியின் முன்பக்க டயரில் சிக்கிக்கொண்டது. இதில் மொபட்டை ஓட்டி வந்த வாலிபர் முன்பக்க டயரில் சிக்கினார். மேலும் அவர் வலி தாங்க முடியாமல் “அய்யோ, அம்மா” என்று அலறினார். உடனே டிரைவர் லாரியை நிறுத்திவிட்டார்.
இதைப்பார்த்த அங்கிருந்த போக்குவரத்து போலீசார் உடனே ஓடிச்சென்றனர். பின்னர் லாரியில் சிக்கியிருந்த வாலிபரை வெளியே கொண்டு வந்தனர். இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சி அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த விபத்து காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கோபி போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடி குண்டு வைக்கப்போவதாகவும், தற்போது வெளியே சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்து தொலை பேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் தெரிவித்த செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.
அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெருந்துறை அடுத்த துடுப்பதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கவுரிசங்கர் (வயது 36) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கோவிலில் ரூ. 5 லட்சம் மதிப்பில் உமாமகேஸ்வரி உடனமர் வாகீஸ்வரர், உற்சவ மூர்த்தி ஐம்பொன் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.
சம்பவத்தன்று கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற வாலிபர் உண்டியலை உடைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
அதன் பின்னர் அங்கிருந்த மின்சார சுவிட்டை ஆப் செய்து விட்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை உடைத்தார். அதனை கோவிலுக்கு பின்புறம் உள்ள சுற்றுச்சுவரின் அருகில் உள்ள புதருக்குள் வீசி விட்டு சென்று விட்டார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் செயல் அலுவலர் பிரேமாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வெள்ளித்திருப்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த கோவிலில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்பட்டு உள்ளது.
அதில் வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து உண்டியலை உடைக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (25). இவர்களுக்கு 4 வயதில் மகள் உள்ளாள். சத்யாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணமாகி கணவர்களை பிரிந்து உள்ளார். 3-வதாக சுரேசை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி மகளுடன் சத்யா திடீரென மாயமானார். அவரை சுரேஷ் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் சுரேஷ் தனது மனைவியை கண்டுபிடித்து கொடுக்கும்படி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவையும், அவரது மகளையும் தேடி வந்தனர்.
அதேசமயம் அந்த பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான குமார் (28) என்பவரின் மனைவி திலகாவும் தனது கணவரை காணவில்லை என்று பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சுரேஷ் வேலைக்கு சென்றுவிட்ட பிறகு வீட்டில் இருந்த சத்யாவுடன் குமார் பழகி வந்ததும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மகளுடன் மாயமான சத்யா மற்றும் குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த போலீசார் அவர்களது விவரங்களை தொடர்ந்து கண்காணித்து தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாயமானவர்கள் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன்மலை அருகே உள்ள கொள்ளேகால் பகுதியில் இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு சத்யா, 4 வயது மகள், குமார் ஆகியோரை போலீசார் மீட்டு பெருந்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், சத்யாவும், குமாரும் விருப்பத்தின் பேரிலேயே வீடுகளை விட்டு வெளியேறியதாகவும், முதலில் சென்னை சென்றுவிட்டு, பிறகு யாரும் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கர்நாடகா மாநிலத்துக்கு சென்றுவிட்டதாகவும், அங்கு திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் போலீசாரிடம் கூறினார்கள். இதைத்தொடர்ந்து சத்யாவின் தந்தையையும், கணவர் சுரேசையும், குமாரின் மனைவி திலகா மற்றும் உறவினர்களையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தங்களது தவறை உணர்ந்த கள்ளக்காதல் ஜோடி பிரிந்து விடுவதாக போலீசில் உறுதி அளித்தனர். அதன்பிறகு கள்ளக்காதல் ஜோடிக்கு போலீசார் அறிவுரை வழங்கி சத்யாவை அவரது தந்தையுடனும், குமாரை அவரது மனைவி திலகாவுடனும் அனுப்பி வைத்தனர்.
‘மருதமலை’ திரைப்படத்தில் பல திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைவது போன்ற நடிகர் வடிவேலின் நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். அதன் முடிவில் முதல் கணவர் அந்த பெண்ணை அழைத்து செல்வது போன்று அந்த காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்த சினிமா பட பாணியில் பெருந்துறை அருகே 3 முறை திருமணமான பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து 9 மாதங்களுக்கு பிறகு சிக்கி இருப்பதும், போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






