என் மலர்tooltip icon

    ஈரோடு

    தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது.
    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    மேலும் நீலகிரி மலைப்பகுதியில் ஓடி வரும் மோயாறும், பவானி ஆறும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, அதில் இருந்து உபரி நீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.16 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 299 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 930 கன அடி தண்ணீர் வந்தது.

    அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    * தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை.

    * முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.


    * 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும்.

    * 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் இலங்கை அகதிகள் முகாம், இலங்கை தமிழர் முகாமில் அவ்வபோது சென்று சோதனை செய்வது வழக்கம். இதேப்போல் சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் கியூ பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிலர் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கியூ பிரிவு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒரு இளம் பெண் போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கியூ பிரிவு போலீசார் அரச்சலூர் இலங்கை தமிழர் முகாமில் விசாரணை நடத்தினர். இதில் முகாமில் தங்கியிருந்த பிரதீபா (வயது 36) என்ற இளம்பெண்ணின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பிரதீபா 1990-ம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக இலங்கை தமிழர் முகாமில் தங்கி இருந்தது தெரியவந்தது. மேலும் யாராவது போலி பாஸ்போர்ட்டுடன் தங்கி உள்ளார்களா? என்று கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போனில் பாட்டுக்கேட்டதை பெற்றோர் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பரிசல் துறை வீதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 55). கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி சகுந்தலா. இவர்களது மகள் ஹேமா மாலினி (14). இவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வேலுமணியும், சகுந்தலாவும் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டனர். ஹேமா மாலினி மட்டும் வீட்டில் இருந்தார்.

    அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து கரும் புகை வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். உடனே இதுபற்றி வேலுமணிக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் பதறியபடி உடனே வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் அவர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அங்கு சமையல் அறையில் ஹேமா மாலினி உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    உடனே இதுபற்றி வேலுமணி பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள். ‘கடந்த வாரம் ஆன்லைன் வகுப்புக்காக ஹேமா மாலினிக்கு வேலுமணி செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

    ஆனால் ஹேமா மாலினி செல்போனில் அடிக்கடி பாட்டு கேட்டு வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ஹேமா மாலினி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்’ என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் சோமசுந்தரம் தலைமை தலைமை தாங்கினார்.

    கொரோனாவுக்கான ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பு நிலையில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, மின்சார சட்ட திருத்த மசோதா போன்றவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    பவானி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மகன் செந்தில் (வயது 34). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி அன்று தனது வீடு முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் நேற்று சித்தோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் துரத்தி சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் சிவகுமார் (20) என்பதும், அவர் வைத்திருந்த மோட்டார்சைக்கிள் மாமரத்துப்பாளையம் செந்திலிடம் இருந்து திருடியது என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
    டி.என்.பாளையம் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பள்ளத்தூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 40). அவருடைய மனைவி கவிதா (35). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு கார்த்திகேயன் (17), கோகுல்நாத் (15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    கோகுல்நாத் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகேயன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது தாய் கவிதா வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் கட்டிலில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கார்த்திகேயன் பங்களாப்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்தப்புகாரில் அவர் ‘எனது தாய் கவிதாவின் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில் கவிதாவின் கணவர் மோகனசுந்தரம் நேற்று காலை வாணிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முகமது ஹனீபாவிடம் சரண் அடைந்தார். அவர் மோகனசுந்தரத்தை பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது மனைவி கவிதாவை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.

    பின்னர் மோகனசுந்தரம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நான் கண் பார்வை குறைபாடு உடையவன். இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். எனது மனைவி கவிதாவும், மகன் கார்த்திகேயனும் வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் எனது மனைவியின் நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எனக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து கவிதாவை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். சம்பவத்தன்று பிற்பகல் 3 மணி அளவில் கடையில் டீ வாங்கி வந்தேன். அதில் மயக்க மாத்திரையை போட்டு கவிதாவுக்கு குடிக்க கொடுத்தேன். அவரும் அதைக்குடித்தார். பின்னர் நான் வெளியில் சென்றுவிட்டேன். அதன்பின்னர் மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு சென்று பார்த்தேன்.

    அப்போது கவிதா வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் சேலையால் இறுக்கி அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு பயந்து அங்கிருந்து வெளியே சென்று தலைமறைவாக இருந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவதை அறிந்ததும் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி உள்ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது பின்னர் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டலத்திற்குள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து மாவட்டத்திற்குள் மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டத்திற்குள் மீண்டும் அரசு போக்குவரத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந்தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. எனினும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து தனியார் பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 268 தனியார் பஸ்கள் உள்ளன. இதில் மாவட்டத்துக்குள் 40 பஸ்களும், வெளி மாவட்டங்களுக்கு 228 பஸ்களும் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் தனியார் பஸ்களை இயக்காமல் இருந்து வந்தோம்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம், திருப்பூர், கோவையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அந்தியூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள அத்தாணி புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் தீபலட்சுமி (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு சவுண்டப்பூரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று தங்கினார். நேற்று காலை அவர் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை காணவில்லை. மேலும் அரிசி மூட்டைகள் பின்புறம் பையில் வைக்கப்பட்டு இருந்த தங்கசங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் காணவில்லை.

    இதுகுறித்து தீபலட்சுமி ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்றதை யாரோ மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து திறந்துள்ளனர். அதன்பின்னர் அதிலிருந்த ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அரிசி மூட்டையின் பின்புறம் பையில் இருந்த 20 பவுன் நகையையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    அம்மாபேட்டை அருகே விபத்தில் லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை சித்தையன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். அவருடைய மகன் முருகன் (வயது 42). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்த செங்கோடன் மகன் விவேக் (25), பெருமாள் மகன் ராஜவேல் (36). முருகன், விவேக், ராஜவேல் ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    நெரிஞ்சிப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த டேங்கர் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவேக், ராஜவேல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குழு தந்த அறிக்கை அடிப்படையில் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    * குழு தந்த அறிக்கை அடிப்படையில் தமிழகத்தில் பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

    * நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

    * எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம்.




    * சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

    * கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.

    * சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தங்கியிருந்து மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள 6 வயது சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தாள். இதுபற்றி அறிந்த சிவா அங்கு சென்றார். சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, அங்குள்ள புதருக்கு அழைத்து சென்றார்.

    அங்கு வைத்து சிவா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சல் போட்டாள். இதையடுத்து சிவா அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதுகுறித்து அவளது பெற்றோர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர். பின்னர் அவர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் கோபி கிளை சிறையில் சிவா அடைக்கப்பட்டார்.
    ×