என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் தீவிர சிகிச்சை மற்றும் நேரடி கண்காணிப்பினால் கொரோனாவில் இருந்து 93 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகர் பகுதியை சேர்ந்த 93 வயது மூதாட்டி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 13-ந் தேதி சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 92 சதவீத நுரையீரல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த 18-ந் தேதி மூதாட்டிக்கு நோயின் பாதிப்பு குறைந்த நிலையில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நோயின் தாக்கம் குறைந்து அவர் குணமடைந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து 93 வயது மூதாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர்களின் தீவிர சிகிச்சை மற்றும் நேரடி கண்காணிப்பினால் மூதாட்டி குணமடைந்ததாக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மணி தெரிவித்தார்.

    புதிய வேளாண் மசோதாவை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளை பொருள் வணிக ஊக்குவிப்பு சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்த சட்டம், விவசாயிகள் அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

    ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெறுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    விளை நிலங்கள், சாதாரண மனிதர்களை பாதிக்கும் வகையிலும், இயற்கையை அழிக்கும்படி கொண்டு வரப்பட்டுள்ள சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையை திரும்ப பெற வேண்டும், என்ற கோரிக்கையை வலியுறுத்திஈரோடு மாவட்டத்தில் இன்று ஈரோடு, கோபி, கடம்பூர் ஆகிய 3 இடங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    ஈரோடு பஸ்நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர்கள் சி.எம்.துளசிமணி, ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பு ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக மறியல் போராட்டம் செய்தனர்.

    கோபி பஸ் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் பஸ் நிலையத்தில் மலைவாழ் மக்கள் மாநில குழு உறுப்பினர் சடையப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, கோபி, பவானி ஆகிய நகராட்சிகள் மற்றும் ஏராளமான பேரூராட்சிகள், ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

    நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.8 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.8 அடியாக நீடித்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 106 கன அடி தண்ணீர் வந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் கரை புரண்டு ஓடியது கடல் போல் காட்சி அளித்தது.
    ஈரோடு:

    கர்நாடகாவில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர்அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இந்தநிலையில் டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு 18 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு கரை புரண்டு ஓடும் தண்ணீரால் கடல் போல் காட்சி அளித்தது.

    ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு ஏராளமானவர்கள் வேலை க்கு சென்று வருகிறார்கள். தினமும் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் பயணிகள் ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள். போக்குவரத்துக்கு சவுகரியமாகவும், கட்டணம் குறைவாகவும் இருப்பதால் ரெயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடங்கியது. அதன்பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தளர்வு செய்யப்பட்ட பிறகு வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்கள், கார்களை பயன்படுத்தினார்கள். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்கிய பிறகு வெளி மாவட்டங்களுக்கு பஸ்களில் சென்று வருகிறார்கள். ஆனால் பஸ்களில் செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க சிரமமாக இருப்பதால் பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஈரோடு சீசன் டிக்கெட் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு பல ஆயிரம் பேர் வேலைக்காக சென்று வருகிறார்கள். ரெயில் வசதி இல்லாததால் சொந்த வாகனத்திலும், பஸ்களிலும் வேலைக்காக சென்று வருகிறோம். பஸ்களில் செல்வதற்கு கூடுதல் நேரமாகிறது. மேலும், பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முடியவில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. பஸ் கட்டணமும் அதிகமாக இருப்பதால் பயணச்செலவும் அதிகமாகிறது.

    ஏற்கனவே கொரோனா முடக்கம் காரணமாக வருமானமின்றி தவித்து வருகிறோம். கூடுதல் செலவு ஏற்படுவதால் சிரமம் அதிகமாகிறது. ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கனவே எடுக்கப்பட்ட சலுகை கட்டண டிக்கெட் கொரோனா ஊரடங்கு காரணமாக பயன்படுத்தப்படாமலே காலாவதியாகிவிட்டது. எனவே ரெயில் சேவை தொடங்கும்போது டிக்கெட்டை காலநீட்டிப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி.யிடம் ரெயில் பயணிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
    தாளவாடி அருகே லாரிகளை மறித்து கரும்பை பிடுங்கி தின்னும் யானைகளால் டிரைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது நல்ல மழை பெய்து உள்ளதால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை முக்கிய சாலையாக இருப்பதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    கடந்த சில நாட்களாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை யானைகள் தங்களுடைய குட்டிகளுடன் அடிக்கடி கடந்து செல்கின்றன. அவ்வாறு கடந்து செல்லும் யானைகள் சாலையோரமாக உலா வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக- கர்நாடக எல்லையில் தாளவாடியை அடுத்த காரப்பள்ளம் அருகே சென்றபோது குட்டிகளுடன் சாலையோரமாக வந்த யானையானது திடீரென கரும்பு லாரியை வழிமறித்தது. யானையை கண்டதும் டிரைவர் அப்படியே லாரியை நிறுத்தினார். பின்னர் அந்த யானையானது லாரியில் இருந்த கரும்பை பிடுங்கி தின்ன தொடங்கியது. சிறிது நேரத்துக்கு பின்னர் லாரியை அங்கிருந்து அதன் டிரைவர் ஓட்டி சென்றார்.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையில் சென்றபோது லாரி பழுதாகி நின்றது. அப்போது அங்கு வந்த 2 யானைகள் கரும்பு வாசனையால் ரோட்டில் வந்து நின்று கொண்டன. பின்னர் அந்த யானைகள் லாரியில் இருந்த கரும்புகளை பிடுங்கி தின்றன. இரவு நேரம் என்பதால் டிரைவர் லாரியை விட்டு இறங்காமல் அவருடைய இருக்கையிலேயே பயந்தபடி இருந்தார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அந்த 2 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் டிரைவர் நிம்மதி பெருமூச்சு அடைந்தார். குறிப்பாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றி வரும் லாரிகளை யானைகள் அடிக்கடி மறித்து கரும்புகளை பிடுங்கி தின்பது தொடர்கதையாகி வருகிறது. யானைகளால் இதுவரை டிரைவர்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படவில்லை. எனினும் காட்டு யானைகளால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்தில் லாரிகளை இயக்க வேண்டி உள்ளதாக டிரைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோட்டில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்தவர் நரசிம்மன்(வயது 41). இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது39). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நரசிம்மன் ஈரோடு சம்பத் நகரில் சேர்கான் என்ற ஆன்லைன் வர்த்தக அலுவலகம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பல லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனவேதனையுடன் காணப்பட்ட நரசிம்மன், வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப் பார்த்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நரசிம்மனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்.

    அங்கு, டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நரசிம்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோபி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி.வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜி.பி.வெங்கிடு. தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 1996- 2001-ம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து உள்ளார். மேலும் கோபி நகர தி.மு.க. செயலாளர், தலைமை கழக பேச்சாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்பட கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும், கோபி நகராட்சி கவுன்சிலராகவும் இருந்து உள்ளார். அதுமட்டுமின்றி மொழிப்போர் தியாகியான இவர் தி.மு.க. நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றவர்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜி.பி.வெங்கிடு, கடந்த சில நாட்களாக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ஜி.பி.வெங்கிடுவுக்கு திரிபுராம்பாள் என்ற மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
    நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 494 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.53 அடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால், அணை விரைவில் நிரம்பிவிடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

    எனவே பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.



    இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசபாளையம், அத்தாணி சவுண்டப்பூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி, ஆப்பக்கூடல், சென்னிமலைகவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரிபுதூர், தளவாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடப்பட்டு உள்ளது.

    எனவே பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், ஆற்றங்கரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் செல்லும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    பண்ணாரியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியை ஒற்றை யானை சூறையாடியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது பண்ணாரி சோதனை சாவடி பகுதி. இங்கு போக்குவரத்து துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை என 3 துறைகள் சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கும் வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனை சாவடிகளில் தணிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன.

    கடந்த 3 மாதங்களாக ஒற்றை யானை பண்ணாரி சோதனை சாவடி பகுதியில் சுற்றித்திரிகிறது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஒற்றை யானையானது பண்ணாரியில் உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதிக்கு வந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தங்களுக்கு தேவையான டீ போடுவதற்காக நாட்டு சர்க்கரையை வாங்கி சோதனை சாவடியின் பின்புறத்தில் உள்ள அறையில் வைத்திருந்தனர். இதை மோப்பம் பிடித்தபடியே சோதனை சாவடியின் பின்புறத்துக்கு அந்த யானை சென்றது. பின்னர் துதிக்கையை அறையின் உள்ளே விட்டு நாட்டு சர்க்கரையை எடுக்க முயன்றது. ஆனால் முடியவில்லை.

    இதனால் யானை சோதனை சாவடியை இடித்து தள்ளியதுடன், அதில் இருந்த சிமெண்டு அட்டையிலான மேற்கூரையையும் பிடுங்கி தூக்கி எறிந்து சூறையாடிது. யானையின் அட்டகாசத்தை கண்டதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் யானையின் கண்களுக்கு படாமல் சோதனை சாவடிக்குள்ளேயே பதுங்கி கொண்டனர்.

    பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஏற்கனவே இந்த யானை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அங்கு அமைக்கப்பட்டிருந்த டீக்கடை ஒன்றை இடித்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.
    அந்தியூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள அம்மன்பாளையம் பகுதியில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சிலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ‘அவர்கள் பவானியை சேர்ந்த குமார் (வயது 25), விஜயகுமார் (31), மணிகண்டன் (35), பெருந்துறையை சேர்ந்த சிவக்குமார் (32) உள்பட 11 பேர் பணம் வைத்து சூதாடியது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 11 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.77 ஆயிரத்து 300-யும் பறிமுதல் செய்தனர்.
    2 மகன்கள் இறந்த துயரத்தால் தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சியண்ணன் (வயது 70). நெசவுத் தொழிலாளி. அவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 65). இவர்களுடைய மகன்கள் குமார் (43), கணேசன் (40). இதில் குமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணேசன் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறந்தார். 2 மகன்களும் இறந்துவிட்டதால் அதையே நினைத்து பழனியம்மாள் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை பச்சியண்ணன் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் பழனியம்மாள் மட்டும் இருந்தார். அப்போது அவர் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பழனியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×