search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை
    X
    பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது

    தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது.
    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    மேலும் நீலகிரி மலைப்பகுதியில் ஓடி வரும் மோயாறும், பவானி ஆறும் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதை தொடர்ந்து, அதில் இருந்து உபரி நீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.16 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 299 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 930 கன அடி தண்ணீர் வந்தது.

    அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வினாடிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 102 அடியை எட்டி விடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    Next Story
    ×