search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நகை- பணத்தை கொள்ளையடித்த வழக்கில்: என்ஜினீயர்- கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது

    சத்தியமங்கலம் அருகே கணவன், மனைவியை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் என்ஜினீயர், கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சஜ்ஜீவ் (வயது 41). இவர் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரீனா. இவர்களுக்கு சுரஜ் என்ற மகனும், ஸ்ரீனிகா என்ற மகளும் உள்ளனர்.

    சஜ்ஜீவின் வீட்டு மாடியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி.

    கடந்த 8-ந் தேதி இரவு சஜ்ஜீவின் வீட்டுக்குள் தலையில் குல்லாய் மற்றும் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திபுதிபுவென புகுந்தது. உடனே அந்த கும்பல் தங்கள் கையில் இருந்த அரிவாள், கம்பு மற்றும் இரும்பு கம்பியால் ரீனாவை தாக்கி உள்ளது. வலி தாங்க முடியாமல் ரீனா அலறினார். மேலும் ரீனாவிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்தது. ரீனாவின் அலறல் சத்தம் கேட்டு பாலமுருகன், அவருடைய மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். உடனே அந்த கும்பல் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் அவர்கள் 2 பேரையும் தாக்கியது. இதற்கிடையே சஜ்ஜீவ் வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவரையும் கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    இதுபற்றி அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யாவும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (25) என்பவரை கைது செய்தனர். என்ஜினீயரிங் முடித்து உள்ள இவர் சத்தியமங்கலம் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட பிரகாஷ், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ‘தன்னுடைய அண்ணன் திருமணத்துக்காக கடன் அதிக அளவில் வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும்,’ தெரிவித்தார்.

    பிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், ‘சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேர், 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர், சத்தியமங்கலம் நேருநகரை சேர்ந்த அருள்ராஜ் (19), அரியப்பம்பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் (19), ஸ்ரீநாத் (19), திம்மையன்புதூரை சேர்ந்த மகேந்திரன் (48), வரதம்பாளையத்தை சேர்ந்த முத்து (34) ஆகிய 8 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 பவுன் நகை, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கம்பு, இரும்பு கம்பி, 2 மோட்டார்சைக்கிள்கள், ஒரு மொபட் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 9 பேரும் சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×