search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    பெற்றோர், மாணவர்கள் மனநிலை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

    தமிழகத்தில் பள்ளியை திறப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்வோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

    ஈரோடு:

    தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு செயல்களை அரசு செய்துள்ளது. திராவிட இயக்கத்தின் வரலாற்றில் அனைவரும் சமநிலை அடைய வேண்டும் என்பதற்காக அரும்பணி ஆற்றியவர் தந்தை பெரியார்.

    ஒரு நாடு எப்படி சீர் திருத்தத்தை உருவாக்குகிறது என்பதற்கு தந்தை பெரியார் எடுத்துக்காட்டாக விளங்கியவர். தந்தை பெரியாரின் வழியில் திராவிட இயக்கம் 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டில் வேரூன்றி இன்றும் திராவிட இயக்கம் நிலைத்து நிற்கிறது என்பதற்கு தந்தை பெரியாரின் வழிகாட்டுதல் தான் காரணம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆன்லைன் வகுப்புகளுக்கு உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மாணவர்களின் நலன் கருதி மன அழுத்தத்தை குறைக்க ஆன்லைன் வகுப்பு கூடாது என்ற நிலையை அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்றத்தில் முதல்வர் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்கும். இதற்காக அரசு பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாடுபடுவார். இருமொழிக் கொள்கை என்பதை ஆணித்தரமாக எடுத்துக் கூறியிருக்கிறார்.

    பள்ளி கட்டணம் முழுமையாக வசூலிப்பதாக 14 பள்ளிகள் மீது புகார்கள் வந்ததன் பேரில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் அரசுக்கு இல்லை.

    பொருளாதார நெருக்கடியில் அதுபோன்ற நிலைகளில் அரசால் அறிவிக்க இயலாது. மத்திய அரசு 21-ந் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளியை திறக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள். பள்ளியை திறப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலை, கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்வோம். 2-ம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பெரியார் நகர் பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×