என் மலர்tooltip icon

    ஈரோடு

    கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ‘பெற்றோருடன் வாழ விருப்பமில்லாததால்’ தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என நீதிபதியிடம் இளம்பெண் முறையிட்டதால் ஈரோடு கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் வடக்கு புதுப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் நித்யானந்தன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவர் ஈரோடு குமலன்குட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் நித்யானந்தன் வேலை செய்தார். அப்போது அவருக்கும், சதீசின் அக்காள் மகளான காயத்திரிக்கும் (20) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதலுக்கு காயத்திரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடந்த 2-ந் தேதி நித்யானந்தனும், காயத்திரியும் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள். பின்னர் அவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர். 3-ந் தேதி திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

    இதற்கிடையே கொடுமுடி போலீஸ் நிலையத்தில் காயத்திரி கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்யானந்தனை கொடுமுடி போலீசார் விசாரணைக்காக அழைத்தனர்.

    இதனால் காயத்திரியை அழைத்து கொண்டு நித்யானந்தன் கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு காயத்திரி தனது காதல் கணவருடன் வாழ விரும்புவதாக போலீசில் தெரிவித்தார். இதனால் காயத்திரியை நித்தியானந்தனுடன் போலீசார் அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு அவர்கள் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    இந்தநிலையில் செல்போன் கடையின் உரிமையாளரான சதீஸ், நித்யானந்தனுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்றும், ரங்கம்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து காயத்திரிக்கும், அவரது பெற்றோர் சொத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விடுங்கள் என்றும் சதீஸ் கூறியுள்ளார்.

    இதனால் நித்யானந்தன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஈரோட்டுக்கு கடந்த 17-ந் தேதி காரில் வந்தார்.

    ரங்கம்பாளையம் பகுதியில் பத்திர பதிவு அலுவலகத்துக்கு செல்லும் வழியில் காயத்திரியின் உறவினர்கள் காத்திருந்தனர். அங்கு நித்யானந்தன் தனது மனைவியை அழைத்து வந்ததும், அவர்கள் ஆயுதங்களுடன் வந்து காயத்திரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நித்யானந்தன் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் காயத்திரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காதல் கணவரை மறந்துவிட்டு தங்களுடன் வந்துவிடுமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அவரும் பெற்றோருடன் இருப்பதாக ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும், கடத்தல் வழக்கு நடந்து வருவதால் காயத்திரியை ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று அழைத்து சென்றார்கள்.

    அங்கு நீதிபதி மாலதியின் முன்னிலையில் காயத்திரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பெற்றோருடன் தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தனது காதல் கணவர் நித்யானந்தனை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரியும் அவர் கூறியுள்ளார். இது அவரை அழைத்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நித்யானந்தனை கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி மாலதி போலீசாருக்கு உத்தரவிட்டார். நித்யானந்தனை போலீசார் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினார்கள். அதன்பிறகு காதல் கணவரான நித்யானந்தனுடன் காயத்திரியை சேர்த்து வைத்து நீதிபதி அனுப்பி வைத்தார்.

    ஈரோட்டில் பெற்றோருடன் வாழ விரும்புவதாக தெரிவித்துவிட்டு நீதிபதி முன்பு தனது காதல் கணவருடன் அனுப்பி வைக்குமாறு பெண் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பவானி அருகே அரசு தந்த நிலத்தில் வீடு கட்டிக்கொடுக்க கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    பவானி:

    ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சித்தோடு அருகே உள்ள கன்னிமார்கரடு பகுதியில் ஒவ்வொருவருக்கும் அரசு தலா 1.25 சென்ட் இலவச வீட்டு மனைக்கான பட்டா வழங்கியுள்ளது.

    இதேபோல் மொடக்குறிச்சி வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில் யார் யாருக்கு? எந்தெந்த அளவுகளில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற விவரம் முறையே இல்லாமல் ஒட்டுமொத்தமாக பட்டா தரப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அரசு மொத்தமாக வழங்கிய நிலத்தை முறையே ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். மொடக்குறிச்சி பகுதியில் 30 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்து மீண்டும் கன்னிமார்கரடு பகுதியிலேயே வழங்க வேண்டும். பசுமை வீடு திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பகல் 12 மணியளவில் சித்தோடு கன்னிமார்கரடு பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி இளங்கோ, ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது, மொடக்குறிச்சி பகுதியில் வழங்கப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றாக கன்னிமார்கரடு பகுதியிலேயே இடம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவில் முடிவு செய்யப்படும் என்றும், மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள கன்னிமார்கரடு பகுதி சமன் செய்து அளவீடு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தார்கள்.

    இதை ஏற்றுக்கொண்டு மாலை 6.30 மணி அளவில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்கள்.

    ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் தேர்தல் பரப்புரைக்காக செல்ல முயன்ற உதயநிதி ஸ்டாலினை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனை கண்டித்து தி.மு.க.வினர் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    அதன்படி ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மாநில அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
    ஈரோடு அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் நல்லசாமி (வயது 33). திருமணம் ஆகாதவர். இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் சரிவர செயல்படவில்லை. இதனால் அவர் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களுக்கு உதவியாக வேலை செய்து வந்தார்.

    திருமணம் ஆகாததாலும், பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்ததாலும் நல்லசாமி மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நல்லசாமி நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் லோகநாதபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் ஆறுமுகம் (வயது 26). கட்டிட தொழிலாளி. ஆறுமுகத்துக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி ஈரோட்டை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை ஆறுமுகம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு அவர் பாலியல் ரீதியாக மாணவிக்கு தொந்தரவு கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்து உள்ளார். 

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறுமுகத்தை கைது செய்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
    ஈரோடு:

    இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6 வயது முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் கல்வி கற்க வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பள்ளிக்கூடங்கள் செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு ஆண்டுதோறும் எடுக்கப்படுகிறது. அதில் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களை பள்ளிக்கூடங்களில் சேர்த்து படிக்க வைக்கவும் அரசு அதிகாரிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த கணக்கெடுக்கும் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பள்ளிக் கூடங்களுக்கு செல்லாதவர்களை கணக்கெடுக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் நேற்று தொடங்கியது. இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு பழைய பூந்துறைரோடு ஒடைபள்ளம் பகுதியில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் நேற்று ஈடுபட்டார்கள். அவர்கள் வீடு, வீடாக சென்று 18 வயதுக்கு உள்பட்டவர்கள் உள்ளனரா? அவர்கள் எந்த பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கிறார்கள்? எந்த வகுப்பு படிக்கிறார்கள்? முறையாக பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்களா? போன்ற விவரங்களை சேகரித்தனர். இந்த பணி அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும் என்று தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்தும் அரசியல் நிலைப்பாடு குறித்தும் அடுத்த மாதம் நடைபெறும் தலைமை நிர்வாக குழுவில் முடிவு எடுக்கப்படும்.

    7 பேர் விடுதலை குறித்து கவர்னர் மவுனம் காக்க கூடாது. உடனடியாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    வட மாநிலங்கள் போல் தமிழகத்தில் பா.ஜனதாவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்ற வழியில் உள்ள பா.ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பது நல்லதல்ல. மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட நிலை போலவே தமிழகத்திலும் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும்.

    ரஜினி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.அவர் மிக அமைதியை விரும்பக் கூடியவர். அரசியல் மிக பரபரப்பான ஒன்று.அவர் அரசியலுக்கு வரமாட்டார் என நான் நம்புகிறேன். நாங்கள் ஏற்கனவே அதிமுக - பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டோம். அ.தி.மு.க.வை நினைத்து கவலைப்படுகிறோம்.

    தமிழக அரசு நீட் தேர்வில் தேர்வான மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. அதனை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். வேல் யாத்திரை குறித்து கருத்து கூற விரும்ப வில்லை.

    உதயநிதி ஸ்டாலின் அரசியல் நோக்கத்திற்காக கைது செய்தது தவறு. மதம் மற்றும் சாதி ரீதியாக செல்வதை தடை செய்ய வேண்டும். அரசியல் நோக்கதற்காக செல்வதை தடை செய்ய கூடாது.

    வீட்டில் தனியாக இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் இயங்காததால் ஆன்லைனில் மாணவி பாடம் படித்து வந்தார்.

    மாணவியின் தாய் இறந்து விட்டார். அவரது தந்தை லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வேலை காரணமாக அவரது தந்தை வெளியே சென்று விடுவார். மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.

    இதை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (26) என்பவர் கவனித்து வந்தார். சம்பவத்தன்று மாணவிக்கு ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து மாணவி வீடு திரும்பிய தனது தந்தையிடம் தெரிவித்தார். அவர் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையத்தில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவருடைய மனைவி கீதா (43). இவர்களுக்கு கீர்த்தனா (25), ஹேமா (23) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணேசன் சூரம்பட்டி வலசு பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். தொழில் சம்பந்தமாக இவர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேசனால் தான் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த கணேசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று தனது காய்கறி கமிஷன் மண்டியில் விஷம் குடித்துவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணேசனின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் மகள்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானிசாகர் பகுதியில் பூக்கள் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பவானிசாகர்:

    பவானிசாகர் மற்றும் அதன் அருகே உள்ள எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்துள்ளனர். நாள்தோறும் இப்பகுதியில் சுமார் 5 டன் பூக்கள் விளைகிறது. இந்தப் பூக்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகம் மாநிலத்திற்கும் அனுப்புகின்றனர். பூக்களில் தேவைக்கேற்ப நாள்தோறும் அதன் விலையில் மாற்றம் ஏற்படுகிறது.

    பவானிசாகர் பகுதியில் நேற்று மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,100-க்கும், முல்லைப்பூ ரூ.310-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும் வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,250-க்கும், முல்லைப்பூ ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினத்தை விட நேற்று முல்லைப்பூ (கிலோ) ரூ.400-ம், மல்லிகைப்பூ (கிலோ) ரூ.150-ம், சம்பங்கி பூ ரூ.30-ம் குறைந்திருந்தது.
    பவானி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பவானி:

    பவானி காலிங்கராயன்பாளையம் அடுத்துள்ள எலவமலையை சேர்ந்தவர் மெய்நாதன் (வயது 40). இவருடைய மனைவி மோகனாம்பாள் (35) இவர்கள் இருவரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மோனாம்பாள் விஷம் குடித்துவிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மோகனாம்பாள் இறந்து விட்டதாக கூறினார்கள். 

    இது குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காலிங்கராயன் பாசனப்பகுதியில் முற்றிய நெல்மணிகள் தலைசாய்ந்து தரையைப்பார்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடைக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான பாசனப்பகுதிகளில் ஒன்று காலிங்கராயன் பாசனப்பகுதி. ஈரோடு முதல் கொடுமுடி ஆவுடையார்பாறை வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகிறது. இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஏக்கர் வரை நெல் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன் பாசனப்பகுதிகளில் ஆண்டுக்கு 10½ மாதங்கள் தண்ணீர் வருவதால் முப்போகம் விளையும் வயல்களை கொண்டதாக உள்ளன.

    அதன்படி தற்போது காலிங்கராயன் பாசன பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வயல்களில் பயிர் செய்யப்பட்டு உள்ள நெல் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. முற்றிய நெல்மணிகள் தலைசாய்ந்து தரையைப்பார்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடைக்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகிறார்கள்.
    ×