என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபிசெட்டிபாளையத்தில் சாலை ஓரம் படுத்து தூங்கிய 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பாலம் அருகே ஏராளமான நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பகல் நேரங்களில் ஊசி, பாசி, மணி விற்றுவிட்டு இரவில் அவர்கள் இங்கு குடும்பத்துடன் தங்கி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் அமாசை (28), திலகா (27) ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சந்துரு (7), தில்லி (2), சக்தி (1) ஆகிய 3 ஆண் குழந்தைகளும், மகேஷ் (5) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    நேற்று இரவு 9 மணியளவில் அமாசையின் குழந்தைகள் 4 பேரும் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாலையோரம் படுத்து தூங்கினர். அப்போது அவர்களது 2 வயது ஆண் குழந்தை தில்லி திடீரென மாயமானான்.

    இதையடுத்து குழந்தையை காணாத பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பஸ் நிலையம் பகுதியில் இரவு முழுவதும் தேடி பார்த்தனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களிலும் தேடி பார்த்தனர். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் இன்று காலை குழந்தையை காணாமல் கதறி அழுதனர். இதனால் பஸ் நிலையம் முழுவதும் ஒரே பரபரப்பு நிலவியது. அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

    இதுபற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் பஸ் நிலையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது குழந்தையின் பெற்றோர் அமாசை, திலகா ஆகியோர் தங்களது 2 வயது மகன் தில்லி நேற்று இரவு சாலையோரம் தூங்கி கொண்டு இருந்தபோது திடீரென மாயமாகி விட்டான்.

    மேலும் எங்களது மகனை மர்ம நபர்கள் யாரோ கடத்தி சென்று விட்டனர். எனவே எங்கள் குழந்தையை மீட்டு தர வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குழந்தையின் போட்டோவை பெற்று கொண்டு குழந்தையை மீட்டு தருவதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக கோபி பஸ் நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    அந்தியூர் அருகே கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    அந்தியூர்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப்பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 23). ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (20). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து சரஸ்வதி கணவருடன் அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் கணவருடன் ஒரே மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சரஸ்வதி மாதேசிடம், ‘கடன் அதிகமாக உள்ளது. எனவே நாம் 2 பேரும் சொந்த ஊருக்கு சென்று விடலாம்’ என்று அடிக்கடி கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று காலை சரஸ்வதி மாதேஷிடம் அருகே உள்ள வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாதேஷ் நேற்று முன்தினம் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை காணவில்லை என்று புகார் அளித்தார்.

    இந்த நிலையில் குப்பாண்டபாளையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பிணத்தை மேலே கொண்டு வந்தனர். அந்த பெண், காணாமல் போன சரஸ்வதி என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

    உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் சரஸ்வதிக்கு திருமணம் நடந்து 3 மாதங்களே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    அந்தியூர் சென்னம்பட்டி அருகே உள்ள ஜர்த்தல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 38). அவருடைய மனைவி வனிதா. இவர்களுடைய மகன் அகில் (9). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (30). அவருடைய மனைவி கலையரசி (28). இவர்களுக்கு நிதிஷா (10), கார்நிஷா (7) ஆகிய 2 மகள்களும், சுகேஷ் (3) என்ற மகனும் உள்ளனர்.

    ராஜேந்திரன் வீடு அருகே விஜயராகவன் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர், ராஜேந்திரனுடன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதனால் விஜயராகவன் ராஜேந்திரனை பார்க்க அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், ராஜேந்திரனின் மனைவி கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.

    இந்த விஷயம் ராஜேந்திரன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. மேலும் விஜயராகவனும், கலையரசியும் உறவு முறையில் அண்ணன்-தங்கை ஆவார்கள். இதனால் அவர்கள் விஜயராகவனையும், கலையரசியையும் அழைத்து கண்டித்துள்ளார்கள். எனினும் அவர்களால் கள்ளக்காதலை கைவிட முடியவில்லை. தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    ஆனாலும் கள்ளக்காதல் ஜோடி உறவினர்கள் தங்களை பிரிந்து விடுவார்களோ? என்று பயந்தார்கள். இதனால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் நேற்று முன்தினம் இரவு இதுபற்றி விஜயராகவன் தனது உறவினர் ஒருவரிடம் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள போகிறோம் என்று செல்போனில் கூறியுள்ளார். இதுபற்றி உடனே அவர் அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பிறகு சிறிது நேரத்தில் விஜயராகவனும், கலையரசியும் மோட்டார்சைக்கிளில் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். ஏரி கரையில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அதில் தங்கள் செல்போன்களை 2 பேரும் வைத்துள்ளனர். அதன்பின்னர் அருகே இருந்த 40 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இதற்கிடையே உறவினர் கூறிய தகவலின் பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள்.

    பின்ன கயிறு கட்டி கிணற்றில் இறங்கி விஜயராகவன், கலையரசியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தார்கள்.

    அதன்பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் அருகே கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் பெரியசேமூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற, சின்னசேமூர் சிவசக்திநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதன் காலனி பகுதியில் நின்று கொண்டு லாட்டரி சீட்டு விற்ற ஈரோடு மஜித்வீதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஈரோட்டில் கனிமொழி எம்.பி. கூறினார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பி.யுமான கனிமொழி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தொடங்க உள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு ஈரோட்டிற்கு வந்தார். ஈரோட்டுக்கு வந்த கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை நாளை (அதாவது இன்று) எடப்பாடியில் தொடங்க உள்ளேன். திமுக தேர்தல் அறிக்கை கூட்டத்தில் அடுத்த முறை நிச்சயமாக பங்கேற்பேன்.

    தமிழகத்திற்கு நிவர் புயல் நிவாரண தொகையையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள நிவாரண தொகையையும் சேர்த்து மத்திய அரசிடம் இருந்து தமிழக முதல்-அமைச்சர் பெற்றால் மகிழ்ச்சி தான். சென்னையில் கடந்த முறை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது போல இந்த முறையும் மக்களை பாதுகாக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அனைத்து துறைகளிலும் முதலிடம் என கூறும் தமிழக அரசால் ஒரு வேலை வாய்ப்பை கூட உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு எதில் முதலிடம் என தெரியவில்லை. நிவர் புயலின் போது தமிழக அரசு எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் தான், நிவர் புயல் தனது சீற்றத்தை குறைத்து கொண்டதோ? என எண்ண தோன்றுகிறது. பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். இவருடைய மகன் கவுதமன். என்ஜினீயர். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் சவுந்தர்யா. வேளாண்மையில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். இவர்களுடைய திருமணம் நேற்று கோபியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    கவுதமனும், சவுந்தர்யாவும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் திருமணம் முடிந்ததும் பழங்கால முறைப்படி மணமக்களை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்ல உறவினர்கள் முடிவு எடுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று திருமணம் நடந்ததும் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் ஏறி, கோபி நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்தனர். 7 கி.மீ. தூரத்தில் உள்ள வெள்ளாளபாளையத்துக்கு மாட்டு வண்டியிலேயே புதுமண தம்பதிகள் அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து மாட்டு வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதிகள் கூறுகையில், ‘நாங்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நினைவு கூற வேண்டும் என்பதற்காக மாட்டுவண்டி பயணத்தை மேற்கொண்டோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது’ என்றனர்.
    கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    வீரபாண்டி:

    கொடுவாயில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் கொடுவாய் மாகாளியம்மன் கோவில் வீதியைச்சேர்ந்தவர் குமரேசன் (வயது 49). இவர் இதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திருமண விழாவிற்கு தாராபுரம் சென்றுள்ளார்.

    திருமண விழாவிற்கு சென்று விட்டு நேற்று மதியம்வீட்டுக்கு திரும்பி வந்த போது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த டி.வி, குளிர்சாதனப்பெட்டி மற்றும் வெள்ளிக்கொலுசு, வெள்ளிகுடம், வெள்ளிக்குத்துவிளக்குகள் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து குமரேசன் அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவினாசிபாளையம் போலீசார், அருகில் இருப்பவர்களிடமும் மற்றும் தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்குள் புகுந்து ரூ.2லட்சம் பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார் 484 பேரை கைது செய்தனர்.
    ஈரோடு:

    அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்கங்கள் சார்பில் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.

    கொரோனா உதவித்தொகையாக அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். புதிய வேளாண் சட்டத்தையும், தொகுப்புகளாக மாற்றப்பட்ட தொழிலாளர் சட்டங்களையும், மின் திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலை திட்டப்பணியை, 200 நாட்களாக உயர்த்தி, அந்த தொழிலாளர்களுக்கான கூலியையும் உயர்த்தி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதேபோல் சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி, கடம்பூர், மொடக்குறிச்சி, கோபி பகுதிகளிலும் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 484 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு :

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டோர் கொனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

    இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 

    இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 731 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது தொற்று உள்ள 332 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 139 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    நிவர் புயல் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. எனவே நேற்று ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
    ஈரோடு:

    நிவர் புயல் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. எனவே நேற்று ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. ஈரோடு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் மட்டும் பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    இதுபோல் வங்கிகள் அனைத்தும் நேற்று இயங்கவில்லை. வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் இருந்தனர்.
    தாளவாடி அருகே யானைகள் துரத்தியதில் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினார்கள்.
    தாளவாடி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் நேற்று முன்தினம் காரில் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூட்டில் உள்ள கோவிலுக்கு சென்றார்கள். அங்கு சாமிதரிசனம் செய்து விட்டு ஈரோடு மாவட்டம் தாளவாடி வழியாக நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மேட்டுப்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள்.

    கும்டாபுரம் அடுத்த வனப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென 3 யானைகள் ரோட்டில் வந்து நின்றன. இதனால் டிரைவர் காரை நிறுத்தினார்.

    அப்போது 3 யானைகளும் காரை நோக்கி ஆவேசமாக வந்தன. இதனால் காருக்குள் இருந்தவர்கள் பயத்தில் அலறினார்கள். உடனே டிரைவர் காரை பின்னோக்கி வேகமாக ஓட்டினார். அப்போது நிலைதடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. அதன்பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரில் இருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து 5 பேரும் தாளவாடி பஸ்நிலையம் சென்று, அங்கிருந்து பஸ்சில் மேட்டுப்பாளையம் சென்றார்கள். பள்ளத்தில் கவிழ்ந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

    பள்ளத்தில் கார் கவிழ்ந்ததால் யானைகள் அவர்களை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டன. இல்லை எனில் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்கும். யானைகள் தனியாக நின்றால்தான் வாகனங்களை துரத்தும் கூட்டமாக இருந்தால் சாதுவாக இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் 3 யானைகள் சேர்ந்து காரில் சென்றவர்களை துரத்திய சம்பவம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 95.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1140 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 50 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கனஅடி என மொத்தம் 2ஆயிரத்து 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    ×