search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஈரோட்டில் கனிமொழி எம்.பி. கூறினார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தை தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பி.யுமான கனிமொழி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தொடங்க உள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நேற்று இரவு ஈரோட்டிற்கு வந்தார். ஈரோட்டுக்கு வந்த கனிமொழி எம்.பி.க்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை நாளை (அதாவது இன்று) எடப்பாடியில் தொடங்க உள்ளேன். திமுக தேர்தல் அறிக்கை கூட்டத்தில் அடுத்த முறை நிச்சயமாக பங்கேற்பேன்.

    தமிழகத்திற்கு நிவர் புயல் நிவாரண தொகையையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள நிவாரண தொகையையும் சேர்த்து மத்திய அரசிடம் இருந்து தமிழக முதல்-அமைச்சர் பெற்றால் மகிழ்ச்சி தான். சென்னையில் கடந்த முறை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது போல இந்த முறையும் மக்களை பாதுகாக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அனைத்து துறைகளிலும் முதலிடம் என கூறும் தமிழக அரசால் ஒரு வேலை வாய்ப்பை கூட உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு எதில் முதலிடம் என தெரியவில்லை. நிவர் புயலின் போது தமிழக அரசு எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் தான், நிவர் புயல் தனது சீற்றத்தை குறைத்து கொண்டதோ? என எண்ண தோன்றுகிறது. பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×