search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    சாலை ஓரம் படுத்து தூங்கிய 2 வயது குழந்தை கடத்தல்

    கோபிசெட்டிபாளையத்தில் சாலை ஓரம் படுத்து தூங்கிய 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பாலம் அருகே ஏராளமான நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பகல் நேரங்களில் ஊசி, பாசி, மணி விற்றுவிட்டு இரவில் அவர்கள் இங்கு குடும்பத்துடன் தங்கி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் அமாசை (28), திலகா (27) ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சந்துரு (7), தில்லி (2), சக்தி (1) ஆகிய 3 ஆண் குழந்தைகளும், மகேஷ் (5) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    நேற்று இரவு 9 மணியளவில் அமாசையின் குழந்தைகள் 4 பேரும் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சாலையோரம் படுத்து தூங்கினர். அப்போது அவர்களது 2 வயது ஆண் குழந்தை தில்லி திடீரென மாயமானான்.

    இதையடுத்து குழந்தையை காணாத பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பஸ் நிலையம் பகுதியில் இரவு முழுவதும் தேடி பார்த்தனர். மேலும் சுற்று வட்டார கிராமங்களிலும் தேடி பார்த்தனர். குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் இன்று காலை குழந்தையை காணாமல் கதறி அழுதனர். இதனால் பஸ் நிலையம் முழுவதும் ஒரே பரபரப்பு நிலவியது. அந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது.

    இதுபற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் பஸ் நிலையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது குழந்தையின் பெற்றோர் அமாசை, திலகா ஆகியோர் தங்களது 2 வயது மகன் தில்லி நேற்று இரவு சாலையோரம் தூங்கி கொண்டு இருந்தபோது திடீரென மாயமாகி விட்டான்.

    மேலும் எங்களது மகனை மர்ம நபர்கள் யாரோ கடத்தி சென்று விட்டனர். எனவே எங்கள் குழந்தையை மீட்டு தர வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் குழந்தையின் போட்டோவை பெற்று கொண்டு குழந்தையை மீட்டு தருவதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக கோபி பஸ் நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    Next Story
    ×