என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசிகள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் ஆலோசனையின்பேரில் ரெயில்வே போலீசார் ரெயில்களில் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சண்டிகரில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் கண்ணன், ஜெகதீஸ், போலீஸ்காரர் ரவிக்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது பயணிகளின் இருக்கைக்கு அடியில் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டைகளை போலீசார் பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம் கோபால்புரத்தை சேர்ந்த குமாரின் மகன் சரவணகுமார் (வயது 25), சரவணனின் மகன் சரத்குமார் (25) ஆகியோர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி என மொத்தம் 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்த காணப்பட்டது. இதனால் அணையில் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 823 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடி என மொத்தம் 2,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் குறித்து அரசு பள்ளி ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கள்ளிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் ராஜசேகர்.

    இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று போலி அரசாணை வழங்கியதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.விசாரணையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.70 லட்சம் வரை மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஆசிரியர் ராஜசேகரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

    அரசு வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ரூ. 70 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் ராஜசேகர் இடைத்தரகர் போன்று செயல்பட்டு உள்ளார். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. போலி ஆணை வழங்கி மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நபர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவரது நடவடிக்கை குறித்து கண்காணித்து வருகிறோம். விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பூந்துறைரோடு பகுதியில் டவுன் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஈரோடு நாவலடியார் வீதியை சேர்ந்த நாசர் (வயது 56) என்பதும், அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாசரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 11 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றார்கள். அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த எத்திராஜ் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 16 லாட்டரி சீட்டுகள், ஒரு மொபட், ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.

    லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் பி.பி.அக்ரஹாரம் வன்னியர் வீதியை சேர்ந்த பாபு என்கிற கருப்பண்ணசாமி (வயது 48) என்பதும், அவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக நம்பியூர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் எரிக்காட்டுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வடிவு. இவர்களுக்கு பானுமதி (13) என்ற மகளும், உதயகுமார் (12) என்ற மகனும் உள்ளனர்.

    பானுமதி நஞ்சைப் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை 6.30 மணியளவில் தனது வீட்டின் குளியல் அறைக்கு மாணவி பானுமதி சென்றார்.

    அப்போது அங்கிருந்த மின் வயர் மூலம் குளியல் அறையின் இரும்பு கதவில் மின் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதை கவனிக்காத மாணவி பானுமதி இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குளிக்க சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் தனது மகனை அழைத்து அக்காவை வரச்சொல் என்றார். இதையடுத்து அவரது மகன் உதயகுமார் குளியல் அறையின் கதவை தட்டினார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது.

    இதையடுத்து அவர் தனது பெற்றோரிடம் மின்சாரம் பாய்ந்து இருப்பதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகன் மின் இணைப்பை துண்டித்துவிட்டு குளியல் அறைக்குள் சென்று பார்த்தார். அப்போது பானுமதி மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறிந்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் நேற்று இரவு ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. திடீரென அந்த கும்பலில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை அந்தக் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் கல்லால் தாக்கினர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஆனால், போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்தக்காயங்களுடன் கிடந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. எந்த காரணத்துக்காக அந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார் எனவும் தெரியவில்லை.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரை கொலை செய்த நபர்கள் குறித்து சம்பவம் நடந்த சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர். வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியானார். இதையடுத்து குளிர்பானம் குடித்த ஒரு சிறுமி ரத்த வாந்தி எடுத்தார்.

    இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அவர்கள் உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன உணவுகள் மற்றும் பழைய இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்து உள்ளார்.

    பின்னர் ரோகிணி தேவி எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு இரவில் படுக்க சென்றார். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம் போல் எழுந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த ரோகிணி சோர்வாக காணப்பட்டார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து செல்ல முடிவு செய்தனர். அப்போது திடீரென ரோகிணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்சு முலம் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ரோகிணி ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே ரோகிணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ரோகிணியின் தந்தை கல்யாண சுந்தரம் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் தனது மகள் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- பெண்ணின் உறவினர்கள் பானிபூரி சாப்பிட்டதால் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும். மேலும் பானிபூரி எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    பானிபூரி சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோட்டில் இன்று அதிகாலை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ர ஹாரம் பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் சுழற்சி முறையில் நாள் தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த மில் குடோனில் நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேனல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் குடோனில் வைக்கப்பட்டிருந்த நூல் பண்டல்களில் இருந்து திடீரென கரும் புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    அப்போது பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை. இதையடுத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில், நிலைய அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும் மில்லில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேனல்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும் சேதம் மதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அதிகாலை விபத்து ஏற்பட்டதால் குறைந்த அளவே பணியாளர்கள் இருந்தனர். இதனால் பெரும் விபத்து, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    மேலும் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை சுமார் 30 வயது வாலிபர் ஒருவர் திடீரென பாலத்தின் மேலே ஏறி காவிரி ஆற்றில் குதித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இன்று காலை சுமார் 30 வயது வாலிபர் ஒருவர் திடீரென பாலத்தின் மேலே ஏறி காவிரி ஆற்றில் குதித்தார்.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி வாலிபரை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த வாலிபரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது31) என தெரியவந்தது. கார்மெண்ட்ஸ் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை கருங்கல்பாளையம் காவிரி பாலத்திற்கு சென்ற வேல் முருகன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
    ஈரோட்டில் பிளஸ்-1 படிக்கும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் தராசு வியாபாரி. இவரது மகள் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தராசு வியாபாரி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வியாபாரியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வியாபாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மீது கொலைவெறி தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து மனைவி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கூகலூர் ராஜா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). இவர் கூகலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு நிஷாந்த் குமார் (11) என்ற மகன் உள்ளார்.

    கிருத்திகா குள்ளம் பாளையத்தில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கிருத்திகா புதுப்பாளையம் என்ற பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் புதுப்பாளையம் பஜனை கோவில் வீதியில் உள்ள கிருத்திகா வீட்டிற்கு பாலகிருஷ்ணன் சென்றார்.

    அப்போது ஆப்பக்கூடலை சேர்ந்த கிருத்திகாவின் அத்தை மகன் குமார் என்கிற சரவணகுமார், பொம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்த முரளி, கிருத்திகா மற்றும் கூகலூரை சேர்ந்த பிரகலாதன் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

    அப்போது கிருத்திகாவுடன் இருந்த 3 பேரும் உன் கூட வாழ வரவில்லை என்றால் விட்டுட்டு போக வேண்டியது தானே என்று ஆபாசமாக பேசினர். அப்போது சரவணகுமார், கிருத்திகா ஆகியோர் பாலகிருஷ்ணனை கீழே பிடித்து தள்ளினர். மேலும் சரவணகுமார் முகம், வாய், முதுகு ஆகிய இடங்களில் தாக்கினார். மேலும் அவர்களுடன் சேர்ந்து முரளி, பிரகலாதன் ஆகியோரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து பாலகிருஷ்ணன் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா மற்றும் குமார் என்கிற சரவணகுமார், முரளி, பிரகலாதன் ஆகிய 4 பேர் மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×