என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததால் கல்லூரி மாணவி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி ஜோதி.

    இவர்களுக்கு தமிழரசி, தாரணி (18) ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களும் சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    மாணவி தாரணி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தாரணி கடந்த 5 நாட்களாக சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து அவரது தந்தை தாரணியை அழைத்து ஏன் சோர்வாக இருக்கிறாய் என்று கேட்டு உள்ளார். அதற்கு தாரணி தனக்கு ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு எதுவும் சாப்பிடாமல் இரவு தூங்க சென்று விட்டார்.

    இந்நிலையில் காலையில் மாணவி தனது தந்தையிடம் தனக்கு காய்ச்சல் அடிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பழனிச்சாமி அவரது மனைவி ஜோதி ஆகியோர் தாரணியை அழைத்து கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அப்போது தாரணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆக்சிஜன் அளவு மிக குறைவாக இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறினர்.

    இதையடுத்து தாரணியை அழைத்து கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் மாணவி தாரணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மாணவி திடீரென இறந்ததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தீ பிடித்து எரிந்த மஞ்சள் குடோன்களின் பக்கவாட்டு சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருந்த மஞ்சள் மூட்டைகள் வெளியே எடுக்கப்பட்டது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தயிர்பாளையம் காமராஜர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் கடந்த 15 வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 4 குடோன்களில் ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் இந்தப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் மழை பெய்து வந்தது. நள்ளிரவில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் மஞ்சள் குடோன் பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் ஒரு மஞ்சள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    குடோனில் இருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்து அங்கு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    முதலில் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ மற்ற 2 குடோன்களுக்கும் பரவியது. இதையடுத்து ஈரோடு, கோபி, பெருந்துறை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

    மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காந்தி, நவீந்திரன், ஆறுமுகம், முத்துசாமி ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ மளமளவென மஞ்சள் மூட்டைகளில் பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். நான்கு குடோன்களில் மூன்று குடோன்கள் முற்றிலுமாக தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அந்த குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது.

    தீ பிடித்து எரிந்த குடோன்களின் பக்கவாட்டு சுவர் பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருந்த மஞ்சள் மூட்டைகள் வெளியே எடுக்கப்பட்டது. அதில் இருந்து வெளியேறிய புகையை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் ஒரு குடோன் மட்டும் தப்பியது. இதனால் அந்த குடோனில் இருந்த நூற்றுக்கணக்கான மூட்டைகளை தொழிலாளர்களை கொண்டு அவசர அவசரமாக வெளியேற்றினர். தீ விபத்து பற்றி தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர்.

    பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். கோபி டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடோனில் இருந்து இன்னமும் கரும்புகை வெளியேறி வருவதால் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நள்ளிரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மாநகர் பகுதியில் மாலை 3.40 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து நள்ளிரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. பல்வேறு இடங்களில் ரோடுகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள ரோடுகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. ஒரு சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    இதனால் மக்கள் அவதி அடைந்தனர். பலத்த இடி காரணமாக ஒரு சில வீடுகளில் மின் சாதன பொருட்கள் பழுது ஆனது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 53 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேப்போல் பவானிசாகர், கோபி, குண்டேரிப்பள்ளம், கொடிவேரி, நம்பியூர், கொடுமுடி, பவானி, பெருந்துறை, அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம், கவுந்தபாடி, மொடக்குறிச்சி, போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    சத்தியமங்கலம்-53, பவானிசாகர்-38.6, எலந்த குட்டைமேடு-38.2, கோபி-35.2, குண்டேரிபள்ளம்-34.2, ஈரோடு-34, கொடிவேரி-31.2, நம்பியூர்-29, கொடுமுடி-27.4, பவானி-27, பெருந்துறை-17, அம்மாபேட்டை-16, வரட்டுப்பள்ளம்-16, கவுந்தப்பாடி-12, மொடக்குறிச்சி-11, சென்னிமலை-4.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்து வருகிறது. பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து படிபடியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று இரவு நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து பவானி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் இன்று அதிகாலை முதல் பவானிசாகர் அணைக்கு வர தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7648 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக 100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக 2300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது.

    பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் விரைவில் டீசல் விலையும் 100 ரூபாயை தொடும் நிலைக்கு வந்துள்ளதால், அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 102.49 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 94.39 ரூபாயாகவும் இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதால், 99.49 ரூபாயாக குறைந்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.

    கடந்த மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் 99.39 ரூபாயாக இருந்த பெட்ரோல் 29-ந் தேதி 18 காசுகள் உயர்ந்து 99.57 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் கடந்த 27-ந் தேதி 94.39 ரூபாயில் இருந்து 29-ந்தேதி 24 காசுகள் உயர்ந்து 94.62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 30-ந்தேதி 50 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 100.07 ரூபாயானது. டீசல் லிட்டருக்கு 62 காசுகள் உயர்ந்து 95.24 ரூபாயானது.

    இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 100.28 ரூபாய்க்கும், டீசல் 28 காசுகள் உயர்ந்து 95.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் விரைவில் டீசல் விலையும் 100 ரூபாயை தொடும் நிலைக்கு வந்துள்ளதால், அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.
    பவானிசாகர், கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், குண்டேரி ப்பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக நேற்று முன்தினம் ஈரோடு மாநகர் பகுதியில் 5 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் பெரும்பாலான பகுதியில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்து. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

    குறிப்பாக பவானி, கொடுமுடி அப்பகுதியில் பலத்த மழையும், கவுந்தப்பாடி பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 3-வது நாளாக புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. குறிப் பாக கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 44.4 மி. மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது.

    இதேப்போல் பவானிசாகர், கொடிவேரி, பெருந்துறை, சென்னிமலை, கோபி, நம்பியூர், குண்டேரி ப்பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தப்பாடி-44.4, பவானிசாகர்-29.8, கொடிவேரி-27.4, பெருந் துறை-27, சென்னிமலை-21, கோபி-16.4, நம்பியூர்-14, குண்டேரிபள்ளம்-10.2, தாளவாடி-4, சத்திய மங்கலம்-4, ஈரோடு-2, வரட்டுப்பள்ளம்-1.6, மொடக்குறிச்சி-1.

    கவுந்தப்பாடியில் மழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் 14 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கவுந்தபாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் புகுந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 2-வது நாளாகவும் கவுந்தப் பாடியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 44.4 மில்லிமீட்டர் மழை கவுந்தப்பாடியில் பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை கவுந்தப்பாடியில் மழைக்கு மாட்டு கொட்டகை இடிந்து விழுந்து முதியவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு:-

    கவுந்தப்பாடி பச்சப்பாளி, ஆவாரங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 68).விவசாயி. இவர் தனது மனைவியுடன் வசித்து கொண்டு விவசாயம் செய்து வந்தார்.

    தனது வீட்டின் முன்பு சிமெண்ட் சீட்டுகளால் வேயப்பட்ட கொட்டகை 30 அடி நீள செட்டில் 10 ஆடுகள், 2 எருமை மாடுகள் மற்றும் 1 எருமை கன்று ஆகியவற்றை வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததால் கொட்டகை ஈரத்தன்மையுடன் இருந்தது. இன்று காலை 7.30 மணியளவில் பழனியப்பன் கொட்டகையை சுத்தம் செய்து கொண்டிருக்கையில், தொழுவத்தின் ஒருபுறம் மட்டும் கட்டப்பட்டிருந்த சுவர் திடீரென இடிந்து பழனியப்பன் மற்றும் ஆடு, எருமை மாடுகள் மீது விழுந்தது.

    இதில் பழனியப்பனுக்கு தலை மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பழனியப்பனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பழனியப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 ஆடுகளும் இறந்தன. 1 எருமை கன்று மற்றும் 2 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூர் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

    நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆசனூர், அரேபாளையம், குளியாட, தேவர்நத்தம், கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவள்ளம் என 50 மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இரவு முழுவதும் இருளில் மூழ்கியது.

    இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டபோது வனப்பகுதியில் மின்பழுது ஏற்பட்டுள்ளதால் பகல் நேரத்தில் தான் பழுது நீக்கம் செய்ய முடியும் என்று மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இதனால் விடிய விடிய பொதுமக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். சத்திய மங்கலத்தில் இருந்து ஆசனூர் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழமையானதாக இருப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறினர்.

    எனவே மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள சோலார் கொள்ளுக்காட்டு மேட்டில் ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு புதிய வாகனங்களுக்கு எண் பதிவு செய்தல், ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்குதல், பழைய வாகனங்களை புதுப்பித்தல், பழைய வாகனங்களுக்கு எப்.சி. காட்டுதல், எல்.எல்.ஆர்., விபத்து இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிக அளவில் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணியளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா ஆகியோர் தலைமையிலான போலீசார் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்தனர்.

    பின்னர் அலுவலகத்தில் உள்ள 2 இரும்பு கதவுகளையும் பூட்டி உள்ளே சென்றனர். உள்ளே இருந்து யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. அதேப்போல் வெளியே இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அலுவலக ஊழியர்கள் வைத்திருந்த செல்போன்களும் வாங்கி ஆய்வு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை தொடங்கினார்கள். அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உள்ளே இருந்த அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பணத்தை ஜன்னல் பின்புறமாக வீசினர். அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இரவு 10.30 மணி வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து கிழக்கு வட்டார போக்குவரத்து பெண் அலுவலர் பிரதீபா, உதவியாளர் சுரேஷ்பாபு, மோட்டார் போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் இடைத்தரகர்கள் 6 பேர் என மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு சங்குநகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர் குமலன்குட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் ஷோரூமில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை பெருந்துறை ரோடு குமலன்குட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஈரோடு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள், பழனியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வங்காளதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஈங்கூர் பகுதியில் உள்ளது செங்குளம். இங்கு கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 45) என்பவர் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று உள்ளார். அப்போது கோவில் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உண்டியலில் இருந்த காணிக்கையும் திருட்டு போய் இருந்ததையும் கண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈங்கூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த முகமத் அப்துல் ஷாகித் காஜி என்பவரின் மகன் முஹமத் கலாம் ஹுசைன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து வங்காளதேச நாட்டை சேர்ந்த அடையாள அட்டை, மேற்கு வங்காள மாநிலத்தின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் மும்முரமாக நடைபெறும். இதில் பட்டாசு கடை அமைக்க பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டும். எனவே உரிய அனுமதி பெற்ற பிறகே தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசனுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அவர் கள ஆய்வுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட தீயணைப்பு அதிகாரிக்கு அனுப்பி வைத்து பாதுகாப்பு அம்சம் குறித்து உறுதி செய்யப்படும். அதன்பிறகு மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்குவார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 50 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், கூட்டு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் களஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

    கடந்த ஆண்டு 110 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் சற்று குறைவாக காணப்படுகிறது. பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பற்ற நிலை இருந்தால், உடனடியாக கடைக்கான உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×