என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகரில் காரில் மது பாட்டில்கள் கடத்திய வனத்துறை அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராக பணியாற்றி வருபவர் பெருமாள் (43). சம்பவத்தன்று இவர் ஒரு காரில் பவானிசாகர் நோக்கி சென்றார். அவருடன் பவானிசாகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பணியாற்றும் விற்பனையாளர் மூர்த்தி (46) என்பவரும் சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இவர்கள் சென்ற காரையும் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது வனவர் பெருமாள் வந்த காரில் 97 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வனவர் பெருமாள் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி தமிழக-கர்நாடக எல்லையில் வாங்கி தெங்குமரஹடா பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    வனவர் பெருமாள் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மலை கிராமங்களில் தொடர்ந்து மது விற்பனையை தொழிலாகவே செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வனவர் பெருமாள் டாஸ்மாக் விற்பனையாளர் மூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    பெருமாள் கைது குறித்து முதல் தகவல் அறிக்கையை போலீசார் சத்தியமங்கலம் மாவட்ட வன அதிகாரி கிருபா சங்கருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வனவர் பெருமாளை சஸ்பெண்டு செய்து கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
    டி.என்.பாளையம் அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய பிரியா (45). இவருக்கும் அருள் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு சாம் (10) என்ற மகனும், துதி (4) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கோவை பேரூர் பகுதியில் வசித்து வந்தனர்.

    விஜயபிரியா கடந்த 6 மாதமாக டி.என்.பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

    அதிகாலையில் விஜய பிரியா மற்றும் அவரது 4 வயது மகள் துதி இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இதையடுத்து அவர்களை காணாததால் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை தேடினர்.

    இந்நிலையில் டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் அருகேயுள்ள கிணற்றில் விஜய பிரியா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கோபி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விஜய பிரியாவின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விஜய பிரியாவின் 4 வயது மகளையும் காணவில்லை. ஒருவேளை விஜயபிரியா தனது மகள் துதியையும் கிணற்றில் வீசி விட்டு பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் தொடர்ந்து குழந்தையை தேடிவருகின்றனர். மேலும் விஜயபிரியா தற்கொலைக்கான காரணம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாக பகுதியில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் விலை உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ள காரணத்தால் தக்காளி வரத்து குறைந்து விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    தற்போது நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 1,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடு என உயர தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மளிகை கடைகளில் சில்லரை விற்பனையாக ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்கப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாட்களிலும் இதே நிலைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    அந்தியூரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 7 போலீசாருக்கு கொரோனோ தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அந்தியூர்:

    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் 4 கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதில் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 6 போலீசாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டும் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு ஆய்வுக்கு சென்று வந்தார். இதனால் அவரும் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 7 பேரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் வசித்த பகுதியில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தும், பிளிச்சீங் பவுடர் தெளித்தும் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சங்க தேர்தலை நடத்த வேண்டும், சுங்க கட்டணம் வசூல் முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றது. வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் உருவாக்கி அதில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    ஆனால் பல ஆண்டுகளாக சங்க தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாகவும், உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வியாபாரிகளில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சங்க நிர்வாகிகளுக்கு வீட்டுமனை நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வியாபாரியிடமும் ரூ.70 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் வழங்கப்படாமல் உள்ளதால் நிலம் வழங்கும் வரை தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று ஒரு பிரிவு வியாபாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனால் வியாபாரிகளிடையே குழப்பமான நிலை இருந்து வருகின்றது. இந்நிலையில் சங்க தேர்தலை நடத்த வேண்டும், சுங்க கட்டணம் வசூல் முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் மொத்தமுள்ள 807 கடைகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இரு பிரிவுகளாக வியாபாரிகள் உள்ளதால் கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மார்க்கெட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்த வலியுறுத்தி காய்கறி மார்க்கெட் வியாபார சங்கத்தின் ஒரு தரப்பினர் இன்று மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் எதிரொலியாக காய்கறிகளின் விளைச்சல் குறைந்து அதன் விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் வ. உ. சி. பூங்கா பகுதியில் நேதாஜி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம், சில்லரை வியாபாரம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து ஈரோடு வ.உ.சி. பூங்கா நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தது.

    இதனால் 1 கிலோ தக்காளி ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 1,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வருகிறது.

    இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட்டது. கடைகளில் சில்லரை விலையில் கிலோவுக்கு ரூ.60 வரை விற்கப்படுகிறது. தக்காளி திடீர் உயர்வால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இதே நிலைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஈரோட்டில் ஊசி மூலமாக மதுவை உடலில் செலுத்திய வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியசேமூர் கள்ளன்காடு விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மகன் நாகராஜ் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. மேலும், போதை பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்தபோது நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், போதைக்காக நாகராஜ் ஊசி மூலமாக மதுவை தனது உடலில் செலுத்தி கொண்டதாலும், போதை பொருட்களை பயன்படுத்தியதாலும் சம்பவத்தன்று மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட டி.எஸ்.பி உள்பட 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மற்ற போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தாக்கியது.

    குறிப்பாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், போலீசார் உள்பட பலர் பாதிக்கப்பட்டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளனர். பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது.

    இதையடுத்து மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 68 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட டி.எஸ்.பி உள்பட 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அந்தியூர் போலீஸ் நிலையத்தில் 1 இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 15 ஏட்டுகள், 10 முதன்மை காவலர்கள், 2 போலீசார் என மொத்தம் 33 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    இந்நிலையில் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் வேன் டிரைவராக பணிபுரியும் செல்வம் என்பவருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதன்மை காவலர் ரமேஷ் சந்திரன், பெண் தலைமை காவலர் சகுந்தலா, முதல்நிலை பெண் காவலர் உதயகுமாரி, தனிப்பிரிவு தலைமை காவலர் மெய்யழகன், காவலர் சிவகுமார் உள்பட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதேபோல் பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தியூர் போலீஸ் நிலையத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் அங்கு கிருமி நாசினி தெளித்தனர்.

    இதையடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மற்ற போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணை 102 அடியை தொட்டதும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். இவ்வாறு பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கும்போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,607 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 300 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    102 அடியை எட்டி உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு இரண்டாவது முறையாக பவானிசாகர் அணை 102 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வனப்பகுதி கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்க காரில் மது பாட்டில்களை கடத்திய வனத்துறை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 97 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. காருக்குள் 2 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறை வனவர் பெருமாள் (வயது 43) என தெரிய வந்தது. மற்றொருவர் பவானி சாகர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றும் மூர்த்தி (46) என தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்காக பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் 2 பேரும் பவானிசாகர் டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி அதை தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்க கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து மது பாட்டில்கள், காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனஅதிகாரி பெருமாள் மற்றும் மூர்த்தியை கைது செய்தனர்.

    பவானிசாகர் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்கக்கூடாது என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி வனவர் பெருமாள் மொத்தமாக மது வாங்கி உள்ளார்.

    தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். தற்போது வாகன சோதனையில் சிக்கி உள்ளார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட வன அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். பெருமாள், மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.
    ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே திடீர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோட்டில் செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 123 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாக 1,926 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து சென்றதாக 1,626 வழக்குகள் உள்பட கடந்த மாதத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 786 வழக்குகளை ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் பதிவு செய்தனர். இதன் மூலம் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ஆசனூர் அடுத்த அரேபாளையம் பிரிவில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் இன்று காலை ஒற்றை யானை வனத்தை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி,கேர்மாளம் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.

    இந்த அடர்ந்த வனப்பகுதியில் திண்டுகல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

    ஆசனூர் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மலைப்பாதையில் உள்ள சாலையை கடந்து செல்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் மழை பெய்து பசுமையாக இருக்கிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த அரேபாளையம் பிரிவில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் இன்று காலை ஒற்றை யானை வனத்தை விட்டு வெளியேறி சாலையில் உலா வந்தது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றது.

    ×