என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியில் உள்ளது. அணைக்கு 2,814 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் இருந்து வருகிறது. அணையின் விதிப்படி 102 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திருப்பி விடப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று 7-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் உள்ளது. அணைக்கு 2,814 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 500 கன அடி என மொத்தம் 2 ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    சென்னிமலை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    சென்னிமலை பகுதியில் ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவதுக்கு இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அச்த பகுதியில் சிலர் அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர். அவர்களை பேலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னிமலையை சேர்ந்த சரவணன் (45), மணி (67), ஜோதி சுப்பிரமணியம் (46), தாஸ் (40), ராசு (51), கனகராஜ் (43) என தெரிய வந்தது. அவர்கள் 6 பேரை பேலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரத்து 620 பறிமுதல் செய்தனர்.

    சித்தோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி படுகாயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம், மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (35) பந்தல் போடும் கூலி தொழிலாளி. இவர் மூலப்பாளையம் விநாயகர் கோவில் அருகே வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல காலிங்கராயன் பாளையம்- பெருந்தலையூர் ரோட்டை கடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று தங்கதுரை மீது மோதி விட்டு நிறுத்தாமல் சென்று விட்டது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு துடித்தார்.

    பலத்த காயம் அடைந்த தங்க துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தின் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொடுமுடியில் அதிகபட்சமாக 38.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கடம்பூர் வனப்பகுதி, சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அம்மாபேட்டை அப்பகுதி ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்திருந்தன.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொடுமுடியில் அதிகபட்சமாக 38.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. இதேபோல் சென்னிமலை, தாளவாடி, ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் அணை பகுதிகளான குண்டேரி ப்பள்ளம், கொடிவேரி, வரட்டுப்பள்ளம், பவானிசாகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீ.வருமாறு:-

    கொடுமுடி-38.2, சென்னிமலை-31, தாள வாடி-23.4, ஈரோடு-23, குண்டேரிப்பள்ளம்-14.6, கோபி-13.6, பெருந்துறை-9, கொடிவேரி-9, வரட்டுப்பள்ளம்-4, சத்தியமங்கலம்-2, பவானிசாகர்-1.2.

    சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையம் நால் ரோட்டில் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் அவினாசி நீலிபாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 37), புஞ்சைபுளியம்பட்டி அண்ணாநகரை சேர்ந்த குமார் என்கிற சித்திரைகுமார் (42) ஆகியோர் என்பதும், இவர்கள் ஈரோட்டில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி சென்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
    சத்தியமங்கலம் அருகே இன்று தோட்டத்தில் பூ பறிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சத்யமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த சிவியார் பாளையத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). விவசாயி. இவரது மகன் கவின் பிரகாஷ் (24). இவர் கல்லூரி படிப்பை முடித்து தந்தையுடன் இணைந்து விவசாயம் செய்து வந்தார். மகேந்திரனுக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. அங்கு சம்பங்கி பூ உள்ளிட்டவை பயிரிடப்பட்டு இருந்தது. நேற்றிரவு சத்தியமங்கலம் பகுதியில் லேசான மழை பெய்திருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மகேந்திரன் தனது தோட்டத்திற்கு சென்று சம்பங்கி பூ பறிக்க சென்றார். தோட்டத்தின் நடுவே மின் கம்பி ஒன்று இருந்தது. நேற்று இரவு அந்த மின் கம்பியில் இருந்து வயர் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதைக் கவனிக்காமல் சென்ற மகேந்திரன் கீழே கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார்.

    இதில் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். நீண்ட நேரமாக தந்தை வீட்டுக்கு வராததால் தந்தையை தேடி கவின் பிரகாஷ் காலை 8.30 மணியளவில் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கவின் பிரகாஷ் தந்தையை தொட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கவின் பிரகாசம் இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்களில் 1700 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1200 பேர் ஒப்பந்தப்ப அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 1200 தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் டிரைவர்கள் உள்ளிட்ட பணி இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், பொதுச்செயலாளர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் இன்று வேலைக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு நிரந்தர பணியாளர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக மாநகரின் பல்வேறு இடங்களில் தூய்மை பணி மற்றும் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. 

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
    ஈரோடு:

    பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

    இதனால் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

    தமிழக அரசு பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்ததன் காரணமாக, கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 75 காசுக்கு விற்பனையானது. இது நேற்று மேலும் 26 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 1 காசுக்கு விற்பனையானது.

    இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாய் 43 காசுக்கு விற்பனையானது. நேற்று மேலும் 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 97 ரூபாய் 76 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர தொடங்கி உள்ளது.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மொடக்குறிச்சி அருகே டிப்பர் லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள குமாரவலசு பகுதியை சேர்ந்தவர் ஆரான் . இவரது மனைவி மாரத்தாள் (வயது 65). இவர்களுக்கு 3 மகளும், 1 மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் மூதாட்டி மாரத்தாளுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் மொடக்குறிச்சி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தேசியமய மாக்கப்பட்ட வங்கியில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகின்றது.

    இந்நிலையில் முதியோர் உதவி தொகை பணத்தை எடுக்க மூதாட்டி மாரத்தாள் மொடக்குறிச்சி நான்கு சாலையை கடந்து வங்கிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது முத்தூர் சாலையில் இருந்து பூந்துறை சாலைக்கு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது மாரத்தாள் சாலையை கடப்பதை கவனிக்காமல் டிப்பர் லாரி இடது புறமாக திருப்பியது. டிப்பர் லாரியின் முன் பகுதி மாரத்தாள் மீது மோதிய போது அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் மாரத்தாள் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த மாரத்தாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மூதாட்டியின் மீது டிப்பர் லாரி மோதியதை கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் கூச்சலிட்டு ஓடிவந்ததை கண்டு டிப்பர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் லாரியை சாலையில் விட்டு தப்பி ஓடினார்.

    இந்த விபத்து தொடர்பாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாரத்தாள் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லாரியை பறிமுதல் செய்த மொடக்குறிச்சி போலீசார் தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    நிலுவை தொகையை வழங்கக்கோரி சத்தியமங்கலம், தாளவாடியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்பட்ட 15 ஊராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நேற்று பகல் 11 மணி அளவில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாவட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.கே.முருகன் தலைமை தாங்கினார். தங்களுக்கு பல வாரங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள ரூ.273-ஐ முழுமையாக வழங்க வேண்டும். முழுமையாக 100 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை கோஷங்களாக முழங்கினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்தியமங்கலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், கடம்பூர் வட்டார செயலாளர் கே.ராமசாமி, சத்தியமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.சுரேந்தர், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், மாவட்ட குழு உறுப்பினர் சரத்குமார், விவசாய சங்க நிர்வாகி சேகர் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் கொடுத்தார்கள்.

    இதேபோல் தாளவாடி ஒன்றியத்தில் உள்ள மல்லன்குழி, பையனாபுரம், திகனாரை, ஆசனூர், கேர்மாளம், தலமலை, தாளவாடி, திங்களூர், நெய்தாளபுரம், இக்களூர் ஆகிய ஊராட்சிகளில் சுமார் 13 ஆயிரத்து 239 பேர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிரேம்குமார், ஆனந்தன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    மனைவி பிரிந்து சென்றதால் சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள கங்கியம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). இவர் சலூன் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி கண்மணி (28). இவர்களுக்கு பரணி என்ற மகன் இருந்தார். மகேந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கண்மணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதன் காரணமாக மகேந்திரன் தனியாக வசித்து வந்தார்.

    மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மின்விசிறி மாட்டும் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே மகேந்திரன் இறந்தார்.

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    வெள்ளோடு அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள வாய்ப்பாடி இளையாம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 20). இவருக்கும், பெருந்துறை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் காதலித்து வந்துள்ளனர்.

    இதுபற்றி தெரிய வரவே மாணவியின் தாய் சக்திவேலை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியை அவரது தாய் வெள்ளோடு பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி பாட்டி வீட்டில் இருந்த மாணவியை காணவில்லை. இதுபற்றி அவர் தனது மகளிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவியின் தாய் தனது மகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டபோது சக்திவேலுடன் சென்னையில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக மாணவியை சென்னையில் இருந்து வரவழைத்து அவரது தாய் விசாரித்தார். அப்போது அவர் சக்திவேல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சென்னைக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மாணவியின் தாய் வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×