என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் நள்ளிரவில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் ஓடை பகுதியில் சக்தி மாரியம்மன், மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    நேற்று கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு இரவு வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின்னர் அம்மன் சன்னதி முன்பு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் பூசாரி கோவில் நடையைத் திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் தெரிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் எவ்வளவு கொள்ளை போனது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 8 மாதத்துக்கு முன்பும் இந்த கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் தற்போது 2-வது முறையாக மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆசனூர் அருகே புலி மற்றும் சிறுத்தை அருகே உள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்பட பல வன விலங்குகள் உள்ளன.

    வனப்பகுதிக்கு உட்பட்ட ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் இருந்து வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெளியேறி சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து சென்று வருகிறது.

    மேலும் புலி மற்றும் சிறுத்தை அருகே உள்ள கிராமங்களில் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை வெளியேறி ஆசனூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அந்த சிறுத்தை அங்கும், இங்கும் நடந்து சென்று கொண்டே இருந்தது. அப்போது அந்த பகுதியில் இருந்த ஒரு கோழியை துரத்தியது.

    தொடர்ந்து சிறுத்தை ஒரு நாயை அடித்து இழுத்து சென்றது.

    இந்த காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அந்த சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது காண்காணிப்பு கேமிரா மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சிறுத்தை கால்தடங்கள் இருப்பதும் பதிவாகி உள்ளது. வன ஊழியர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள். கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம்.

    இவ்வாறு வனத்துறையினர் கூறி உள்ளனர்.

    ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 51). இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளி சிகிச்சை பிரிவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் பிரகாஷ் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பிரகாஷ் அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்து கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது அதே பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நோயாளி கழிவறைக்கு சென்றபோது பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை தலைமை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஈரோடு பெரியசேமூர், ஈ.பி.பி. நகர், தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 39). இவரது மனைவி நந்தினி. செந்திலுக்கு கடன் பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே செந்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். இருப்பினும் செந்திலால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தான் வாழ்வதைவிட இறந்து விடுவதே மேல் என்று கூறி வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த செந்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக செங்கோட்டையன் நகர் பகுதியில் முறையாக சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகள் முன்பு தேங்கி உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதியில் நேற்று மதியம் 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. மேலும் கோபி சுற்றுவட்டார பகுதிகளான பாரியூர், கரட்டூர், கொளப்பலூர், கெட்டி சேவியூர், காசிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    கனமழை காரணமாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆயுத பூஜை என்பதால் பூஜை பொருட்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றதால் பூஜை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

    பலத்த மழை காரணமாக கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் நகர் என்ற பகுதியில் உள்ள சுமார் 50 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக செங்கோட்டையன் நகர் பகுதியில் முறையாக சாக்கடை வசதி இல்லாததால் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகள் முன்பு தேங்கி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வி‌ஷ ஜந்துக்கள் ஊர்ந்து வரும் அபாயம் உள்ளது.

    வீடுகளின் முன்பு தேங்கி உள்ள மழை நீரில் கழிவு நீரும் கலந்து உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் குழாயை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் தண்ணீர் பிடிக்கவும் முடியவில்லை. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இது போன்று மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது.

    எனவே எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி செய்து கொடுத்து மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதே போல் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை பலத்த மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடி பகுதியில் 80 மி.மீ. மழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான இடங்கள் மற்றும் வயல் வெளிகளில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. மழையின் காரணமாக ஆயுத பூஜை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தப்பாடி-80, கோபி-34. பவானி-18, குண்டேரிபள்ளம்-12, நம்பியூர்-4, ஈரோடு-4.

    கோவை ரெயிலில் கல்லூரி பேராசிரியையிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் தசரா விடுமுறைக்காக பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு கோவை வழியாக செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். முன்பதிவு பெட்டியில் அவர் பயணம் செய்தார்.

    அதே ரெயிலில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படையில் அவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரை சேர்ந்த பிரப்ஜோட் சிங் (வயது 28) என்பவரும் பயணம் செய்தார்.

    அப்போது தனியாக பயணம் செய்த பேராசிரியையிடம் பிரப்ஜோட் சிங் சில்மி‌ஷத்தில் ஈடுபட தொடங்கினார். நள்ளிரவு நேரம் என்பதால் ரெயிலில் மற்ற அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் பிரப்ஜோட் சிங் மட்டும் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து கல்லூரி பேராசிரியை விமானப்படை அதிகாரியை பலமுறை எச்சரித்தார். இருந்தாலும் அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

    ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்து சேர்ந்தது.

    இதையடுத்து கல்லூரி பேராசிரியை ஈரோடு ரெயில்வே பொலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்று விமானப்படை அதிகாரி பிரப்ஜோட்சிங்கை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    விசாரணையில் அவர் கல்லூரி பேராசிரியையிடம் ஓடும் ரெயிலில் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விமானப்படை அதிகாரி பிரட்ஜோட்சிங்கை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    நம்பியூர் அருகே வாகனம் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி என்கிற கருப்புசாமி (வயது 70). விவசாயி. இந்நிலையில் கருப்புசாமி நம்பியூர்-கோவை மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு சென்று விட்டு மீண்டும் தனது மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ரோட்டை கடந்தார். அப்போது பின்னால் வந்த பனியன் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன் கருப்புசாமி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த அடிபட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் கருப்புசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். எனினும்சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் வேன் ஓட்டுனர் நம்பியூர் அருகேயுள்ள குருமந்தூர் ஜலில் (35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 81 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 678 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 928 பேர் பல்வேறு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்கு வங்க வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    மேற்கு வங்க மாநிலம் குக்கிளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அமல்பால் (வயது 34). ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்டாபாளையம் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் கடந்த 2-ந் தேதி முதல் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு வந்த அமல்பால் சோகமாக இருந்துள்ளார். அப்போது அவரது மனைவியிடம் செல்போனில் கோபமாக பேசி உள்ளார். பின்னர் மாலை வேலை முடிந்ததும் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அமல்பாலுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் அமல்பால் போனை எடுக்கவில்லை. இது குறித்து அவர் தங்கி வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் அமல்பாலின் உறவினர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அமல்பால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்ற விவசாயியை ஒற்றை யானை துரத்திய சம்பவம் பீதியை கிளப்பியுள்ளது.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் நோக்கி விவசாயி நாகராஜ் என்பவர் வனப்பாதையில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு ஆண் யானை ரோட்டுக்கு வந்தது. எதிர்திசையில் யானை நிற்பதை பார்த்ததும் நாகராஜ் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது யானை ஆவேசத்துடன் நாகராஜை நோக்கி ஓடிவந்தது. உடனே மோட்டார்சைக்கிளை இயக்க முடியாததால், வண்டியை ரோட்டிலேயே போட்டுவிட்டு நாகராஜ் வந்த வழியே திரும்பி ஓடினார். யானையும் விடாமல் துரத்தியது.

    அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அந்த வேனை நிறுத்தச்சொல்லி அதில் ஏறி நாகராஜ் உயிர் தப்பினார். சுமார் 15 நிமிடங்கள் ரோட்டிலேயே நடமாடிய யானை பின்னர் காட்டுக்குள் சென்றது.
    ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி தலைமையில் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய துரைமுருகன் என்பவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

    இதேபோல் மேலூர் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையில் சில அவதூறு கருத்துக்களை பேசியுள்ளார்.

    தொடர்ந்து சீமான் வன்முறை பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசி வருவதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொது அமைதியைக்காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர். 

    ஈரோட்டில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்லாபுரி 3-வது வீதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 59). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி மோகனா (55). சுந்தரேசன் ஜவுளி வாங்குவதற்காக தனது மனைவி மோகனாவுடன் ஈரோட்டுக்கு நேற்று ஸ்கூட்டரில் வந்தார். அவர் ஈரோடு பார்க் ரோட்டில் சென்றபோது பின்னால் வந்து கொண்டு இருந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரின் மீது மோதியது.

    இதில் சுந்தரேசனும், மோகனாவும் நிலைத்தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார்கள். அப்போது மோகனாவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மோகனா பரிதாபமாக இறந்தார். சுந்தரேசன் காயங்களுடன் உயிர் தப்பினார்.

    இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் இறந்த மோகனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா ஆட்டையானூரை சேர்ந்த சங்கர் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் கணவன் கண் முன்னே மனைவி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
    ×