என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.
    • ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு, மேற்கு அம்பேத்கர் வீதியில் 75 ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பன்னீர்செல்வம் பார்க் ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, துணை பொதுச்செயலாளர் கனி அமுதன், வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன், டி.எஸ்.பி. ஆறுமுகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு பகுதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அதையும் மீறி அவர்கள் உள்ளே சென்றனர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு எஸ்.பி. ஜவகரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடகா, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு தற்போது 400 ரூபாய் அதிகரித்து உள்ளது.

    இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதன் தாக்கம் ஏழை மக்கள் மட்டும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆண்டில் சராசரியாக தக்காளி, வெங்காயத்தின் விலை ஏற்றம் சந்தித்து வரும் நிலையில் தற்போது பூண்டு, இஞ்சி போன்ற சிறு பொருட்கள் விலை ஏற்றமும் மக்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் அத்தியாவசிய சமையல் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும் போது,

    தற்போது பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பூண்டின் விலை படிப்படியாக குறைந்து ரூ.150-க்குள் வந்துவிடும் என்றனர்.

    • கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    கோபி:

    தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் ஆகிய தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் நிறுவனங்கள் நாள்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹாலோ பிளாக் கற்களை உற்பத்தி செய்து ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுமான பணிக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹாலோ பிளாக் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு யூனிட் கிரஷர் மண் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஹாலோ பிளாக் கற்களின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.

    6 அங்குல அளவுள்ள ஒரு ஹாலோ பிளாக் கல் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக 40 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டால் மட்டுமே இழப்புகளை சமாளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு விலையை உயர்த்தினால் 3 மாவட்டங்களிலும் கட்டுமான தொழில் முழுமையாக பாதிக்கப்படும் என்பதோடு கட்டிடத்தின் மதிப்பீட்டில் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் செலவு அதிகரிக்கும். இதனால் கட்டிட உரிமையாளர்கள் முதல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளாக உள்ள கிரஷர் மண், ஜல்லி, சிமெண்டு போன்றவற்றின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர் தாலுகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.

    மேலும் இவர்கள் கோபியில் லாரிகளை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹலோ பிளாக்கல் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு கோடி மதிப்பிலான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி முடங்கிப் போய் உள்ளது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
    • இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    ஈரோடு:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இது கிறிஸ்தவர்களின் துக்க காலமாக உள்ளது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

    இந்த துக்க காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தவக்காலம் இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாம்பல் இன்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    தொடர்ந்து புனித வெள்ளி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதனை முன்னிட்டு இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்கு தந்தையுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ நினைவு தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கி வழிபாட்டை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், கொமரபாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 74.43 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 267 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடியாக நீர் அதிகரி க்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.68 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.49 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.46 அடியாகவும் குறைந்து உள்ளது.

    மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது.
    • பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இரவு முதல் காலை 6 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், பர்கூர், தாளவாடி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போதே வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.

    அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போன்று தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதில்லை. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் உள்ளது.

    மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், குளிர்பானங்களை விரும்பி பருகி வருகின்றனர். பின்னர் இரவு நேரத்தில் பனியன் தாக்கம் தொடங்கி விடுகிறது. இந்த மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

    • யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது.
    • யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிர் செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சதீஷ் தோட்டத்துக்குள் புகுந்து தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்ற விவசாயிகளை ஒன்று திரட்டி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.

    அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.

    சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • பவானி கூடுதுறை தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது.
    • பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

    பவானி:

    தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடு துறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கிவருகிறது. இந்த கோவில் பின்பகுதியில் இரட்டை விநாயகர் சன்னதி படித்துறை பகுதியில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிக்கிறது.

    இதனால் கூடுதுறை தென்னகத்தின் காசி என்றும் சிறந்த பரிகார தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் கூடுதுறைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.

    இதே போல் ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் எள்ளும் தண்ணியும் விடுவார்கள். மேலும் திருமண தடை தோஷம், செவ்வாய் தோஷம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தை அமாவாசையை யொட்டி இன்று ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலையிலேயே கூடுதுறையில் குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதையொ ட்டி கூடுதுறையில் உள்ள 2 பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக பரிகார மண்டபம் என பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பல வகையான தர்ப்பணங்கள் கொடுத்தனர். மேலும் பக்தர்கள் பலர் ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி பவானி போலீஸ் துணை சூப்பிரண்டு அமிர்தவர்ஷ்னி தலைமையில் பவானி, சித்தோடு, அந்தியர், அம்மாபேட்டை, பவானி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நகரின் முக்கிய 50 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிகரை பகுதியில் அதிகாலை முதலே பொது மக்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் மற்றும் திதி கொடுத்தனர். இதனால் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

     இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடினர். தொடர்ந்து பொதுமக்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். அதேபோல் திருமணமாகாத பெண்கள் மற்றும் ஆண்களும் ஏராளமானோர் வந்து புனித நீராடி பரிகாரம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் பலர் மகுடேஸ்வரர் மற்றும் வீர நாராயண பெருமாளை வழிபட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் காலை முதலே பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதி களில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநில பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபி சாரதா மாரியம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்திரகாளியம்மன், சென்னிமலை முருகன் கோவில் உள்பட மாவட்ட த்தின் அனைத்து பகுதிகளில் உள்ள கோவில்களில் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் இன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2,504 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு விழா நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.100 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நான் ஒவ்வொரு முறையும் ஈரோடு வரும்போது எல்லாம் எனது தாய் வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. என்னை உங்களின் மகனாக, சகோதரனாக, பேரனாக இப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இது மட்டும் இன்றி பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண் இது. ஈரோடு மண் திராவிட இயக்கத்தின் தொட்டில் ஆகும். பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் நோக்கமாகும். ஏனென்றால் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை தான் நான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். நான் மட்டும் இன்றி எனது தந்தையும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தான் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அவர்களின் தயாரிப்பு அவ்வளவு தரமாக இருக்கும். திராவிட அரசின் பிராண்ட் அம்பாசிஸ்டராக மகளிர் சுய குழுக்கள் உள்ளனர்.

    2016-ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி வரியாக செலுத்துகிறோம். ஆனால் 2.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டிற்கு திருப்பி வழங்குகிறது. 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருகிறது. இத்தகைய பொருளாதார சூழலில் தான் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் குழு பங்களிப்பு மிகப்பெரும் உதவியாக உள்ளது. காலை உணவு திட்டம், சுகாதாரம், கல்வி ஆகிய திட்டங்களில் மகளிர் குழு பங்களிப்பு பேருதவியாக உள்ளது. பெண்களின் முன்னேற்றம் தான் திராவிட மாடல் அரசின் முன்னேற்றம், நோக்கம் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.


    பெண்களுக்கு கல்வி பொருளாதார சுதந்திரம் அவசியம். உயர்கல்வி பயில புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தி வருகிறது. 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் ரூ.12 ஆயிரம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் மிச்சமாகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த அரசு பொறுப்பேற்ற பின் மகளிர் குழுவை சேர்ந்த 12 லட்சத்து 25 ஆயிரத்து 803 பேருக்கு ரூ.69 ஆயிரத்து 584 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 2023-24-ம் ஆண்டில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.25 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது. விரைவில் இலக்கை முடிப்போம். நான் தற்போது நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேரடியாக கோவையில் இருந்து மும்பை செல்கிறேன். விளையாட்டுத்துறை மேம்பாட்டு சார்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு இன்று விருது வழங்க உள்ளனர். அதற்காக செல்கிறேன். உங்கள் அனைவர் ஆசீர்வாதத்துடன் செல்கிறேன் நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.
    • மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று.

    சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேரிய ஒற்றை காட்டுயானை கரும்பு லாரி வருகிறதா என சாலையில் உலா வந்தது. அப்போது அங்கு பழுதாகி நின்ற மினி லாரியின் உள்ளே காய்கறி உள்ளதா என தேடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மினி லாரியில் ஏதும் இல்லாதால் மினி லாரியில் இருந்த தார்பாயை தனது துதிக்கையால் கீழே இழுத்து போட்டு சேதாரம் செய்தது. சுமார் 30 நிமிடம் வாகனங்கள வழிமறித்த ஒற்றையானை பின்னர் வனப்பகுதியில் சென்றது. கடந்த சில நாட்களாக காட்டு யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

    பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஈரோடு மாவட்ட தி.மு.க.வினர் திட்டமிட்டு உள்ளனர்.

    ×