என் மலர்
ஈரோடு
- சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர்.
- சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கே.ஆர்.பாளையம் முத்து கவுண்டர் வீதியை சேர்ந்த கந்தசாமி(47), அதேபகுதியை சேர்ந்த செல்லதுரை (45), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (49), பள்ளிபாளையம் எக்கட்டூர் செந்தில்குமார் (43) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
- பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
- கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
பவானி:
பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
பவானி, காவேரி மற்றும் அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம் தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம், கூடுதுறை என பலர் பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் தினசரி உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவேரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நலன் கருதி வெப்பத்தை தணிக்கும் வகையில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நீர் மோர் வழங்கும் திட்டத்தை சங்கமேஸ்வரர் கோவில் ஆணையாளர் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் சங்கமேஸ்வரர் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
- தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
டி.என்.பாளையம்:
கோபிசெட்டிபாளையம் அடுத்த காசிபாளையம் மணியகாரன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜெகதீஸ் (28) டி.ஜி.புதூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதே போன்று டி.என்.பாளையம் குமரன் கோவில் ரோட்டை சேர்ந்த சதீஸ் (46). டி.என்.பாளையத்தில் வைத்துள்ள போட்டோ ஸ்டுடியோ கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கேமரா, கம்ப்யூட்டர் மானி ட்டர் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பங்களாப்புதூர் போலீசார் கொடிவேரி அணை அருகே சதுமுகை பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்திய போது அவர்கள் தப்பியோட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததும், அவர்கள் சிறுமுகையை சேர்ந்த 17 வயது சிறுவன் கோவை மாவட்டம் சிறுமுகை வடபகதூரை சேர்ந்த நித்தீஸ் (21), கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பாசரை புதுக்காலனியை சேர்ந்த விஜய் (23) என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரும் கோபி நீதிமன்றத்திலும், 17 வயது சிறுவன் கோவை சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
- மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து குறைகளை கேட்டு அறிந்தார்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ரூ4.54 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ரூ.3 கோடியே 95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் குருவரெட்டியூர் ஊராட்சியில் பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் கோணார்பாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் குருவரெட்டியூரில் ரேஷன் கடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவல் குறித்தும் அதனை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ள அரசு விடுதிகளையும் ஆய்வு செய்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.
குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டியில் குளோரி நேட்டர் பொருத்தப்பட்டு உள்ளதையும், ஒலகடம் பேரூராட்சி நாகிரெட்டிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளி கட்டிடங்களையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.குகானந்தன், பஷீர் அகமது, குருவரெட்டியூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.அசோக்குமார் மற்றும் துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.
- ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ளது ஈங்கூர். இங்குள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் இருந்து புலவனூர் செல்லும் ரோடு வேலை கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் பாலம் அமைப்பதற்கான குழி தோண்டிய நிலையில் வேலை நடைபெறாமல் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக இருந்தது.
பல்வேறு முறை துறை சார்ந்த அதிகாரிகளிடம் , பஞ்சாயத்து நிர்வாகத்தில் தகவல் தெரிவித்தும் தகுந்த நடவடிக்கை இல்லாமல் இருந்தது.
இதனையடுத்து பொதுமக்கள் அந்த வழியாக சென்ற டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர்.
பின்னர் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வுக்கு இது பற்றி தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக எம்.எல்.ஏ. விரைந்து சென்றார்.
அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விரைவில் நடவடிக்கை எடுத்து ரோடு வேலை மற்றும் பாலம் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானிசாகர், எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
- மழை காரணமாக வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
கோபி:
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. இதனால் காலை 11 மணி முதல் மதியம் 4 மணி வரை பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இரவு நேரத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று அனல் காற்று வீசியது. ஒரு சில இடங்களில் வெயில் இல்லாமல் புழுக்கமாக காணப்பட்டது.
இந்த நிலையில் மாலை நேரத்தில் மாவட்டம் முழுவதும் திடீரென காற்று வீசியது. இதனால் மழை வருவது போல் மேககூட்டங்கள் திரண்டு இருந்தது.
கோபி செட்டிபாளையம் பகுதியில் இரவு 9 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. பின்னர் திடீரென பயங்கர மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 9.50 மணி வரை இடைவிடாமல் கொட்டியது. இதே போல் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான நாயக்கன் கரடு, காட்டூர், நல்லகவுண்டன் பாளையம், மொடச்சூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
இதே போல் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10 மணி வரை பெய்தது. இதே போல் கொடிவேரி, கவுந்தப்பாடி, பவானிசாகர், எலந்தகுட்டை மேடு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
ஈரோட்டில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-
கோபிசெட்டிபாளையம்-32.20, சத்தியமங்கலம்-12, கவுந்தப்பாடி-11.6, எலந்தகுட்டைமேடு-1.80, கொடிவேரி அணை-35 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 100 மி.மீட்டர் மழை பெய்தது.
- விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
- எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எம்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
அ.தி.மு.க.வின் மக்கள் சக்தியாக மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்தனர். அவர்கள் வழியில் மக்கள் சக்தியாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை போலீசார் தடுத்து நிறுத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க. சார்பில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது.
ஒரு அரசு மக்களின் சாதனை அரசாக தான் இருக்கணும். ஆனால் தி.மு.க. வேதனை அரசாக உள்ளது. விலைவாசி உயர்வு, பால், மின் கட்டணம், குப்பை வரி உயர்வால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் 4½ ஆண்டு ஆட்சி காலம் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே தட்டிக் கேட்க முடியும். காற்றை சுவர் எழுப்பி தடுக்க முடியாது. கடலை அணை கட்டி தடுக்க முடியாது. அதேப்போல் எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். அதனைத் தொடர்ந்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம் என்றார்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அவருக்கு பாதுகாப்பு அளிப்பதை விட்டு வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றோம்.
முன்னாள் முதல்-அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதுபோன்று செயலில் இனி ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அதிமு.வில் உள்ள அத்தனை பேரும் எந்த தியாகத்தையும் செய்வோம்.
உச்சநீதிமன்றமே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர் சார்பில் நீக்கப்பட்டது அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது.
எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி வரப்போகிறார். மிக விரைவில் அவர் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழைய குற்றவாளிகள் 2 பேர் சுற்றி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார்அவர்கள்2 பேரையும் கைது செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடுமாவட்டம் அந்தியூர் பிரம்மதேசம் பாலம் அருகே பழைய குற்றவாளிகள் 2 பேர் சுற்றி கொண்டு இருப்பதாக அந்தியூர்போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தனபால் அந்த பகுதியில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல் ஆத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபு என்கிற சிவலிங்கம் (38),
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எலந்த கோட்டை காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற சுள்ளான் சுரேஷ் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் மீது பல்ேவறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார்அவர்கள்2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்க ளிடம் இருந்து 16 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
- 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது.
- செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும்.
கோபி:
கோபிசெட்டி பாளை யத்தில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பாரியூர் கோவில் அருகே பிறந்து சில நாட்களே ஆன 4 பெண் நாய்க்குட்டிகளை அடையாளம் தெரியாத நபர்கள் சாலையோரமாக விட்டு சென்றுள்ளனர்.
அப்போது பசியில் தவித்த அந்த 4 நாய்க்குட்டிகள் சாலையில் குறுக்கே அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தது. இந்த நாய்க்குட்டிகளுக்கு அந்த வழியாக சாலையில் செல்லும் சில வாகன ஓட்டிகள் பால் ஊற்றி சென்று வந்தனர்.
இந்த நிலையில் கோபியில் இருந்து அத்தாணி சாலையில் செல்லும் பாரியூர் அருகே சாலையோரம் கைவிடப்பட்ட நாய்க்குட்டி களின் பரிதாப நிலை கண்டு ஆப்பக்கூடல் நர்சிங் கல்லூரி முதல்வர் கலை வாணி என்பவர் நாய்க்குட்டி களை மீட்டு சென்று உள்ளனர்.
அப்போது கூகலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கட் கொடுத்து நாய்க்குட்டிகளை மீட்க உடன் இருந்து உதவினார்.
இதனையடுத்து 4 நாய்க் குட்டிகளையும் தாய் அன்புடன் மீட்டு சென்ற சம்பவத்தை நேரில் பார்த்த சாலையோர வாகன ஓட்டிகள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் சிலர் நாய்க்குட்டிகளை மீட்டு சென்ற நபருக்கு உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்து சென்றதையும் காண முடிந்தது.
பூனைக்குட்டி மற்றும் நாய்க்குட்டி உள்ளிட்ட வீட்டு செல்ல பிராணிகளை சாலையில் விடாமல் பாதுகாக்க முன்வர வேண்டும். அல்லது பிராணிகள் நல அமைப்பு தொடர்பு கொண்டு பாதுகாக்க வேண்டும் என்பதே பிராணிகள் நல ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
- 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார்.
- ஏழுமலை ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
ஈரோடு:
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (21). இவர் ஈரோட்டில் உணவு சப்ளை செய்யும் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.
அப்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனை லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் ஏழுமலைக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென்று மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் ஏழுமலை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ஏழுமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் 2 பேரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஏழுமலை கைது செய்யப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப் பட்டார்.
- தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
- விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் அந்தியூர் அடுத்த புதுக்காடு கோட்டை மலையான் கோவில் தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்த யானை சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் முகாமிட்டு ள்ள யானையை கட்டுப்ப டுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
- மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த குடக்கரை கே. செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (82).
சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த குப்பை குழியில் குப்பைகளை கூட்டி வைத்துவிட்டு மாராத்தாள் தீ வைத்துள்ளார்.
அப்போது திடீரென மாராத்தாளுக்கு மயக்கம் ஏற்பட்டு குப்பை குழியில் விழுந்து விட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாராத்தாளை குப்பை குழியில் இருந்து வெளியே மீட்டனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாராத்தாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






