என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மொபட்டும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.
    • இதில் தலையில் அடிப்பட்டு நஞ்சப்பன் படுகாயம் அடைந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள அனியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (60).

    இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பு.புளியம்பட்டி- சத்தியமங்கலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அந்த வழியாக எதிரே ஒரு மொபட் வந்தது. அப்போது மொபட்டும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டது.

    இதில் தலையில் அடிப்பட்டு நஞ்சப்பன் படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 19.9 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகரில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இங்கு இருந்து தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதோடு மினி பஸ்களும் இங்கு இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கிறது. தினமும் சுமார் 4,100 முறை பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் எப்போது பார்த்தாலும் பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, சத்திரோடு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் சோலார் பகுதியில் வந்து செல்லும் வகையில் புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதே போல் சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையமும் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி காணொலி காட்சி மூலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அப்போது 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    அதன் படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந் தேதி ஈரோட்டுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சோலார் புஞ்சை லக்காபுரத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து 24 ஏக்கர் பரப்பளவில் ரூ.63.50கோடியில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது. அதன்படி 79 ஆயிரத்து 666 சதுரமீட்டர் பரப்பளவில் பஸ்நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    தரைதளம் 7,746 சதுரமீட்டர் பரப்பிலும், முதல் தளம் 4,260 சதுரமீட்டர் பரப்பிலும், நடைமேடை பரப்பளவு 5,378 சதுரமீட்டர் மற்றும் சுழற்சி பகுதி 3,317 சதுரமீட்டர் பரப்பளவிலும் கட்டப்படுகிறது.

    இது தவிர பஸ் நிலையத்தில் 134 கடைகள், 63 பஸ் ரேக்குகள், டவுன் பஸ்களுக்கு 9 பிரத்யேக ரேக்குகள், 883 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம், 100 வாகனங்கள் நிற்கும் வகையில் ஆட்டோ பார்க்கிங் ஸ்டேண்டு, முன்பதிவு செய்யும் இடம், கழிப்பறைகள், ஓட்டல்கள், நேரம் காப்பாளர் அறை மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளும் பயணிகளுக்காக செய்யப்படுகிறது.

    மாநகராட்சிக்கு சொந்தமான 51.4 ஏக்கர் நிலத்தில் 19.9 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
    • இதில்14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    சத்தியமங்கலம்:

    ஊட்டியில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநில தனியார் சொகுசு பஸ் பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பேர் பயணம் செய்தனர். பஸ்சை பெங்களூருவை சேர்ந்த ரவி (42) என்பவர் ஓட்டி சென்றார்.

    அந்த பஸ் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள பெரிய கள்ளிப்பட்டி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அந்த பஸ் சத்தியமங்கலம்- ஊட்டி மெயின் ரோடு பெரிய கள்ளிபட்டி சோதனை சாவடி அருகே நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது,.

    அப்போது அந்த சொகுசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் என்ன என்று தெரியாமல் அலறினர்.

    இதில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர் உள்பட 14 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதை பற்றி தகவல் அறிந்ததும் பவானி சாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    இதை தொடர்ந்து காயம் அடைந்த வர்களை ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டி ற்கான ஆண்டுத்தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2023-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, வழக்கு பதிவேடு, நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடு களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள், முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நில அளவைத்துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது.

    தொடர்ந்து, குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நில அளவை பிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும், ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். நில சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, அலுவலக மேலாளர் (பொது) பூபதி, தாசில்தார்கள் கார்த்தி, ரவிசங்கர் (கலால்) (பொ), வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான வரும் 22-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடை பெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராம சபைக் கூட்டங்க ளில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 28.2.2023 வரை) குறித்து விவாதித்தல்,

    கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோ கத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 2021-22-ம் ஆண்டு மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் கிராம ஊராட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட ஊரக நீர்நிலை களில் மேற் கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் 2023-24-ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம்-2-ன் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊரக நீர்நிலைகளின் விவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்தும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் சார்ந்த அனைத்து கட்டிடங்க ளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்து வதற்கான பயன் மற்றும் விழிப்புணர்வு குறித்து விவாதித்தல்.

    கிராம வளர்ச்சி திட்டம் இறுதி செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதார திட்டத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை முழுமையாக தடை செய்தல்,

    பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல், அனைத்து வீடுகளிலும் இருந்து தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவு களை மட்டுமே தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரம் செய்தல்,

    நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் நிலைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுதல்.

    அனைத்து வீடுகளிலும் இரு உறிஞ்சுக்குழி கழிப்பறை முறையினை பயன்படுத்த வலியுறுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தொடர்ந்து தக்க வைத்தல்,

    வீடுகளில் வெளியேறும் சாம்பல் நீரினை முறையே தனி நபர் உறிஞ்சுக்குழி அமைத்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல்,

    பொது இடங்களில் எச்சில் துப்பு வது சுகாதாரத்திற்கு கேடானது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட கிராம ஊராட்சியினை 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என கிராம சபையில் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டு கிராம ஊராட்சித் தலை வரால் சான்றிதழ் வழங்குதல்,

    ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் உட்கட்ட மைப்பு பணிகளுக்கு 10 சதவீத சமூக பங்களிப்பினை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் விநியோக பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல், கிராம குடிநீர் விநியோக செயல்திட்டத்தினை கிராம சபை உறுப்பினர்களிடம் கலந்தாய்வு செய்து கிராம சபையின் ஒப்புதல் வழங்குதல்,

    கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல் படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமை யான விவரத்தினை கிராம சபையில் விரிவாக எடுத்து ரைத்து இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

    பயிற்சி பெற்ற கிராம மகளிர் சுய உதவி குழுப் பெண்களை கொண்டு, ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள கள ஆய்வு கருவிகளை பயன்ப டுத்தி 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்வ தை உறுதி செய்தல்,

    கிராம ஊராட்சியினை 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ளப் பட வேண்டிய அனைத்து பணிகளும் கட்டாயம் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தில் இடம் பெறுவதை உறுதி செய்தல், கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்,

    அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல், குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணி களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் நிர்ண யம் செய்யப் பட்டுள்ள மாதாந்திர கட்டணம் ரூ.30-க்கு குறையாமல் குடிநீர் கட்டணம் செலுத்த ப்படு வதை உறுதி செய்தல்,

    அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் குளோரின் கலப்பான் கருவிகளை பொருத்தி குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறை யாக நடைபெறு வதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் அலுவ லர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான அலுவ லர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • சித்தோட்டில் நடத்த கொள்ளையில் தொடர்புடைய கார்த்திக் என்கிற செந்தில்குமார் என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.
    • திருட்டு வழக்கில் போலீசார் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு தொடர்ச்சியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

    பெருந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வழக்கில் நெல்லை மாவட்டம் திசையன்விளை மாததேவன்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற செந்தில்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சந்தேகப்படும்படி சிலர் நடமாட்டம் இருப்பதாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மற்றும் போலீசார் மளிகை கடைக்கு சென்று ரகசிய விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த மளிகை கடை ஈரோடு ஆயுதப்படையில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜீவ்காந்தி என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் ராஜீவ்காந்தி பற்றி ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    திருட்டு வழக்கில் கைதான செந்தில்குமாரை வழக்கு தொடர்பாக கோவை சிறையில் இருந்து பெருந்துறை நீதிமன்றத்திற்கு பெருந்துறை போலீசார் அழைத்து வந்தனர். அந்த விசாரணை அதிகாரிகளில் போலீஸ்காரர் ராஜீவ்காந்தியும் ஒருவராக இருந்துள்ளார். அப்போது ராஜீவ்காந்தி பெருந்துறை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

    அப்போது போலீஸ்காரர் ராஜீவ்காந்திக்கும், கைதான செந்தில்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி போலீசாரிடம் சிக்காமல் திருடுவது எப்படி? என்று நான் சொல்லித்தருகிறேன். சிறை தண்டனை முடிந்ததும் என்னை வந்து பார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சிறை தண்டனை முடிந்து செந்தில்குமார் வெளியே வந்தார்.

    அப்போது ராஜீவ்காந்தி ஈரோடு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் செந்தில்குமார் வெளியே வந்து போலீஸ்காரர் ராஜீவ்காந்தியை சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி பெருந்துறையில் தனக்கும் மளிகை கடை இருப்பதாகவும் அங்கு தங்கியிருந்து திருட்டில் ஈடுபடலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.

    அப்போது செந்தில்குமாருடன் மதுரையை சேர்ந்த கருப்பசாமி, பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேரும் சேர்ந்து கொண்டனர். இதனையடுத்து போலீஸ்காரர் ராஜீவ்காந்தி எந்த பகுதியில் திருட வேண்டும். எந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா இருக்காது, எந்த பகுதியில் போலீஸ் ரோந்து வராது என்று ஐடியா கொடுத்து உள்ளார். அதன்படி செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் பல்வேறு இடங்களில் திருடுவதற்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளார்.

    இதன்படி சித்தோடு, பெருந்துறை, பெருமாநல்லூரில் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

    இதனையடுத்து பெருந்துறையில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற பாலசுப்பிரமணி (42), நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்த கருப்புசாமி (31), திருட்டுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் ராஜீவ்காந்தி ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சித்தோட்டில் நடத்த கொள்ளையில் தொடர்புடைய கார்த்திக் என்கிற செந்தில்குமார் (30) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகள், 2 பட்டா கத்தி, ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் ராஜீவ்காந்தி 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    இதன் பின்னர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை குற்றப்பிரிவில் முதல் நிலை காவலராகவும், அதன் பின்னர் தற்போது ஆயுதப்படையில் காவலராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருட்டு வழக்கில் போலீசார் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பால் உற்பத்தியாளர்கள் தளவாய்பேட்டை பால் சொசைட்டி முன்பாக பசு மாட்டுடன் வருகை தந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பவானி:

    பால் கொள்முதல் விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் அரசுடன் பேசிய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நேற்று முதல் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், பால் வழங்குவதை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் 2-வது நாளான இன்று காலை பவானி அருகில் உள்ள தளவாய்பேட்டையில் ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜ் கவுண்டர் தலைமையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருவது உள்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் தளவாய்பேட்டை பால் சொசைட்டி முன்பாக பசு மாட்டுடன் வருகை தந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை தொடர்கிறது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

    வெயிலுடன் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வீடுகளிலும் இரவு நேரங்களில் வெப்ப காற்று வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது இனி மே மாதம் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என மக்கள் இப்பவே அச்சப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி 100 டிகிரி வரை வாட்டி வதைத்து வருகிறது. புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் புறநகர் பகுதியில் லேசாக மழை பெய்து வருகிறது.

    எனினும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் கரும்பு பால், இளநீர், தர்பூசணி பழம் ஆகியவற்றை விரும்பி பருகி வருகின்றனர்.

    • அண்ணாநகர் அருகே பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வாகனம் நிறுத்தும் இடம் சிமெண்ட் சீட் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது. அதேபோல் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்தது. மதியம் 2 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்து 20 நிமிடம் மிதமான மழை சூறாவளிக்காற்றுடன் பெய்தது.

    தாளவாடி, ஓசூர், தொட்டகாஜனூர், திகனாரை சிக்கள்ளி, இக்கலூர், கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம் ஆகிய பகுதியில் மழை பெய்தது. சூறாவளிகாற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தபால் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது.

    அதேபோல தாளவாடி போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான 3 தைல மரங்களும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேருடன் விழுந்தது. இதில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து சேதமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் அண்ணாநகர் அருகே பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அதேபோல வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வாகனம் நிறுத்தும் இடம் சிமெண்ட் சீட் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. வளாகத்தில் இருந்த 3 மரங்களும் குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஓசூர் கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா என்பவரின் வீட்டின் அருகில் இருந்த மரம் வீட்டின் மேல் முறிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    அதேபோல தாளவாடி அடுத்த ஓசூர் அருகே ரகு (55). என்ற விவசாயி 1 ஏக்கரில் நேந்திரம் வாழை பயிர் செய்துள்ளார். சூறாவளி காற்று காரணமாக 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.

    சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக தாளவாடி பகுதியில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லை. இன்று மாலைக்குள் மின் துண்டிப்பு சரிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீர் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வேகத்தடை மீது சுண்ணாம்பு அடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
    • வாகனங்களை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

     சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி, தாளவாடி வழியாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகா மாநிலத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக திம்பம் மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வரை தார் சாலை சீர் செய்யப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து ரோட்டின் பல்வேறு பகுதிகளில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் நேற்று மாலை பண்ணாரி அருகே உள்ள குய்யனூர் பிரிவு என்னும் இடத்தில் பணியாளர்கள் வேகத்தடை அமைத்தனர்.

    ஆனால் வேகத்தடை அமைத்ததற்கு எந்த ஒரு முன் அறிவிப்பு பலகைகள், வேகத்தடை மீது சுண்ணாம்பு அடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கணவன்- மனைவி 2 பேர் மோட்டார் சைக்கிளில் பண்ணாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகத்தடை இருந்தது.

    இதையடுத்து வேகத்தடையை கண்டதும் திடீரென பிரேக் போட்டார். இதில் அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த வேகத்தடை உடனே அங்கிருந்து அகற்ற வேண்டும்.

    இல்லையென்றால் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வாகனங்களை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து இந்த இடத்தில் உடனடியாக எச்சரிக்கை பலகை வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும்.
    • புதுப்பித்தலின் மூலம் ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அனைவருக்கும் யூ.ஐ.டீ.ஏ.ஐ. என்ற ஆதார் எண் வழங்கி ஆதார் அட்டை ஆவணம் மூலம் நலத்திட்ட உதவிகள், வங்கி சேவை, பத்திர பதிவுக்கு ஆவணமாக்கப்படுகிறது.

    மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பங்களுக்கான அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்தவர்கள் தங்கள் அடையாள போட்டோ, முகவரி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம், முகவரிக்காக அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும்.

    புதுப்பித்தலின் மூலம் ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யலாம். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவி கள், சேவைகளை சிரமம் இன்றி பெறலாம்.

    இதற்காக 'மை ஆதார்' என்ற https://www.myaadhaar.uidai.gov.in/ இணைய தளத்தில், மை ஆதார் செயலியிலும் 'அப்டேட் டாக்குமென்ட்' என்ற பிரிவையும் பயன்படுத்தலாம்.

    பொதுமக்கள் இத்தளத்தில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம். அல்லது ஆதார் மையம் சென்று ரூ.50 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.

    தொலைபேசி, குறுந்தகவல் மூலம் ஆதார் குறித்து வரும் தகவல்களுக்கு ஆதார் விபரத்தை தர வேண்டாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன் (74). இவரது மனைவி ஆகி சர்ஜாத். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் இளைய மகன் சித்திக் அலி (35). இவர் அதே பகுதியில் இருசக்கர மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு வருடமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அனுப்பர்பாளையம் பரிசல் துறையில் உள்ள ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்திக் அலியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சித்திக் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்திக் அலி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×