என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாழை மரங்கள் முறிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.
தாளவாடியில் சூறாவளி காற்றுடன் கனமழை- மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
- அண்ணாநகர் அருகே பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வாகனம் நிறுத்தும் இடம் சிமெண்ட் சீட் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது. அதேபோல் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்தது. மதியம் 2 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்து 20 நிமிடம் மிதமான மழை சூறாவளிக்காற்றுடன் பெய்தது.
தாளவாடி, ஓசூர், தொட்டகாஜனூர், திகனாரை சிக்கள்ளி, இக்கலூர், கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம் ஆகிய பகுதியில் மழை பெய்தது. சூறாவளிகாற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தபால் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து விழுந்தது.
அதேபோல தாளவாடி போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான 3 தைல மரங்களும் சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வேருடன் விழுந்தது. இதில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து சேதமானது.
அதேபோல தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் அண்ணாநகர் அருகே பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதேபோல வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்த வாகனம் நிறுத்தும் இடம் சிமெண்ட் சீட் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. வளாகத்தில் இருந்த 3 மரங்களும் குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்தது. இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஓசூர் கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா என்பவரின் வீட்டின் அருகில் இருந்த மரம் வீட்டின் மேல் முறிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
அதேபோல தாளவாடி அடுத்த ஓசூர் அருகே ரகு (55). என்ற விவசாயி 1 ஏக்கரில் நேந்திரம் வாழை பயிர் செய்துள்ளார். சூறாவளி காற்று காரணமாக 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.
சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதன் காரணமாக தாளவாடி பகுதியில் நேற்று மதியம் முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லை. இன்று மாலைக்குள் மின் துண்டிப்பு சரிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீர் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






