என் மலர்tooltip icon

    கடலூர்

    சோழத்தரம் அருகே ஓடும் பஸ்சில் பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் 2 பேர் காயம் அடைந்தனர். சக பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.



    ஸ்ரீமுஷ்ணம்:

    விருத்தாசலத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். சோழத்தரம் அருகே மாமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் பஸ்சில் உள்ள தகடு பெயர்ந்து பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த 2 பயணிகள் மீது விழுந்தது. அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.

    தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த பண்டாரக்கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 63), விவசாயி. இவர் தனது வயலில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கண்ணன் இறந்தார்.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் கண்ணனுக்கு வயிற்று வலி இருந்தது இதன் காரணமாக அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    புவனகிரி அருகே விபத்தில் தம்பி சிக்கியதில் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவரது தம்பி மணிவேல். இவர் விபத்து ஒன்றில் சிக்கி மயக்கநிலையில் வீட்டில் இருந்து வருகிறார்.

    ராஜலட்சுமி சாத்தப்பாடியில் உள்ள தனது தம்பி வீட்டுக்கு சென்று அவரை பார்த்தார். அதன் பின்பு அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் யாரிடமும் பேசாமல் மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ராஜலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடலில் தீ பிடித்ததும் கூச்சல்போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை ராஜலட்சுமி இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவரது அண்ணன் மகன் ஹேமன் (15). அதே பகுதியை சேர்ந்தவர் கவுதமன் (20). முன்விரோதம் காரணமாக ஹேமனை, கவுதமன் தாக்கியதாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கவுதமனிடம் சென்று ஏன் எனது அண்ணன் மகனை தாக்கினாய் என விஜய் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கவுதமன் அவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விஜய் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்னுபிரியா வழக்குபதிவு செய்து கவுதமனை கைது செய்தார். #tamilnews
    பண்ருட்டி அருகே மணல் கடத்தியதாக லாரி மற்றும் 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுமதிபெறாமல் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த மேல்குமாரமங்களத்தை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    பண்ருட்டி திருவதிகை பாலூர்ரோட்டில் இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கெடிலம் ஆற்றில் இருந்து அனுமதியில்லாமல் மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். மாட்டுவண்டியை ஓட்டிவந்த ரமேஷ் (35), சக்திவேல் (70) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    வீராணம் ஏரியில் இருந்து இன்று சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்றும் தொடர்ந்து அதே அளவான 1,100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த சிலநாட்களாக தொடர்ந்து 47 அடியாக வைக்கப்பட்டுள்ளது.

    விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு நேற்று 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்படுகிறது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இது நேற்றைய அளவை விட 2 கனஅடி குறைவாகும். #VeeranamLake
    மாணவர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் எழுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக அனுசுயா பணியாற்றினார். அவர் சாதி பாகுபாடு பார்த்து ஒரு பிரிவு மாணவ-மாணவிகளை தனியாக அமர வைத்ததாக புகார் எழுந்தது.

    இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒரு பெண் அனுசுயாவை செருப்பால் தாக்கினார். பதிலுக்கு அவரும் தன்னுடைய செருப்பால் அவர்களை தாக்கினார். இவை அனைத்தும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி அனுசுயாவை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் அனுசுயா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனுசுயா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் இன்று 3-வது நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சியில் உளுந்தாம்பட்டில் ஊராட்சி ஒன்றி தொடக்க பள்ளி ஒன்று உள்ளது.

    இந்த பள்ளியில் உளுந்தாம்பட்டு, கீழ்காவனூர், மேல் காவனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதற்கிடையில் மேல்காவனூரில் இருந்து உளுந்தாம்பட்டு கிராமத்திற்கு பள்ளி செல்லும் குழந்தைகள் நடந்தே செல்ல வேண்டி இருப்பதால் மேல்காவனூரில் புதியதாக பள்ளி தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி வந்தனர். பொது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று புதிதாக மேல் காவனூரில் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்த கல்வி ஆண்டு முதல் மேல் காவனூரில் பள்ளிக்கூடம் திறக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி மேல் காவனூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து மேல் காவனூரில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் மேல் காவனூரில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தங்க வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் ஆகியோர் இந்த கிராமத்திற்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட பெற்றோர்களை அழைத்து பேசி விரைவில் உரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவனூரில் இணைப்பு பள்ளி கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது.காவனூரில் உள்ள இந்த இணைப்பு பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அனுப்பப்பட்டனர்.

    ஆனால் உளுந்தாம்பட்டு பள்ளியிலிருந்து ஆசிரியர்களை இந்த இணைப்பு பள்ளிக்கு ஆசிரியர்களை அனுப்ப மறுத்து உளுந்தாம்பட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தஇரு கிராம மக்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. காவனூர் இணைப்பு பள்ளியில் காவனூர் மாணவர்களுக்கு காவனூர்கிராமத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் முன்னால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பாடம் நடத்துகின்றனர். மதிய உணவு கிராம மக்களே தயார் செய்து பிள்ளைகளுக்கு வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் போராட்டம் 3-வது நாளாக இன்று தொடர்வதால் இங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஓரின சேர்க்கை பற்றிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன் வலியுறுத்தியுள்ளார். #KaderMohideen
    ஸ்ரீமுஷ்ணம்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர்மொகிதீன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஓரின சேர்க்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பண்பாட்டுக்கு எதிரானது.

    இந்த தீர்ப்பை இந்திய மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த தீர்ப்பை மற்ற 31 அமர்வு நீதிபதிகள் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்க வேண்டும்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    தி.மு.க.வில் பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் பராம்பரிய தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

    மு.க.அழகிரி தன் தந்தைக்கு கடமை செய்வதற்காக அமைதி பேரணி நடத்தியுள்ளார். இதனால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

    சுதந்திர இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளையும் தனி மனிதன் விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய வி‌ஷயமாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாணவி சோபியாவை கைது செய்ததை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KaderMohideen
    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மாட்டு கொட்டகையில் பதுக்கி வைத்து சாராயத்தை விற்ற வியாபாரியை தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கீழ் அருங்குணம் நத்தம் புளியந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள மாட்டு கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 120 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக நத்தம் புளியந்தோப்பைச்சேர்ந்த சக்திவேல்(வயது42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர் மீது ஏற்கனவே நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவில் 6 சாராய வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார்(பொறுப்பு) பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சக்திவேலை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார். அதன்படி சக்திவேல் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல், கடலூர் மத்திய சிறையில் உள்ள சக்திவேலிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    அதே நிறுவனத்தில் முருகன் (39) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு சம்பளம் வழங்கும் பணியை முருகன் மேற்கொண்டு வருகிறார். சுப்பிரமணியனுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை திருவதிகை பகுதியில் யூனியன் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் முருகன் டீ குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சுப்பிரமணி தனக்கு உடனடியாக சம்பளம் தருமாறு முருகனிடம் கேட்டார்.

    தற்போது சம்பளம் தர முடியாது என முருகன் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த முருகன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சுப்பிரமணியனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தார்.

    இதில் காயம் அடைந்த சுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து பண்ருட்டி போலீசில் சுப்பிரமணியனின் சகோதரர் அசோக் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்ரியா வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தார்.
    ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    கடலூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் நேதாஜி(வயது21). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார்.

    ஆனால் அவரது அழைப்பு தவறுதலாக கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சென்றது. அவரிடம் சிறுமி ஒருவர் பேசினார். இதில் மகிழ்ச்சியடைந்த நேதாஜி அடிக்கடி அந்த சிறுமியுடன் பேசி வந்தார்.

    இதையடுத்து அந்த சிறுமியை பார்ப்பதற்காக நேதாஜி கடலூர் வந்தார். சிறுமியின் வீட்டுக்கு சென்று அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அதனை தனது செல்போன் மூலம் வீடியோவில் பதிவு செய்தார். அந்த ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுபற்றி தனது தந்தையிடம் கூறினார். சிறுமியின் தந்தை கடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் கடலூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அகஸ்டின் ஜோசுவா லாமேக் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேதாஜியை போலீசார் கைது செய்தனர்.

    ×