என் மலர்
கடலூர்
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த முதணை கிராமம் தென்குந்தன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஊ.மங்களம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்தம்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சுரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுரேஷ் வயிற்று வலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:
சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.
அப்போது அங்கு வந்த உமாராணியின் அண்ணன் உமாசங்கர், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமராட்சி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, இறுதிசடங்கை தடுத்து நிறுத்தி உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனையில் உமாராணியின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். தொடர்ந்து இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் செல்வராஜ் மேலவன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் சரணடைந்தார். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் குமராட்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் உமாராணி, விவாகரத்து கேட்டு விருத்தாசலம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் எங்களிடம் சமரசம் செய்து குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். இதேபோல் குமராட்சி போலீஸ் நிலையத்திலும் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு உள்ளது.
உமாராணி பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தேன்.
விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த உமாராணியின் தலையில் கத்தியால் குத்தினேன். பின்னர் அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடலூர்:
லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். புதிய வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல், வாகனங்களை ஆய்வு செய்து சான்று வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
கூத்தக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது புதிய டூரிஸ்ட் வேனுக்கு தகுதி சான்றிதழ் பெற விண்ணப்பித்து இருந்தார். கள்ளக்குறிச்சியில் தனியார் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வரும் முத்துக் குமார் மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவை அணுகினார்.
அவர் வேனுக்கு தகுதி சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துக்குமார் இது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
பின்னர் ரூ.25 ஆயிரத்தை மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம் கொடுக்க முயன்றார். பணத்தை உதவியாளர் செந்தில் குமாரிடம் வழங்கும் படி கூறினார்.
இதைத் தொடர்ந்து ரூ.25 ஆயிரத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமாரையும், பாபு வையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
அவருக்கு கடலூரில் வீடு இருப்பது தெரியவந்தது. நேற்று மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது குடும்பத்தினர் யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. கதவுகளை மூடிக்கொண்டு வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற் கொண்டனர். இரவு 10 மணிவரை சோதனை நீடித்தது.
8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கட்டுகட்டாக ரூ.35 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி பொருட்கள், 200 பவுன் தங்க நகைகள், 45 வங்கி கணக்குகள், மேலும் 6 வங்கி லாக்கர்களுக்கான சாவிகள், 500-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் மற்றும் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பாபுவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்காக எந்திரம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பணம் எண்ணப்பட்டது. மேலும் கைப்பற்றப்பட்ட நகைகளின் உறுதிதண்மையை அறிய நகை மதிப் பீட்டாளர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் மதிப்பீடு செய்து போலீசாரிடம் தெரிவித்தனர்.
பாபுவுக்கு பல வங்கிகளில் 6 பெட்டகங்கள் இருப்பதும், அதில் 300 பவுனுக்கு மேல் நகைகளும், லட்சக்கணக்கான பணம் இருப்பதற்கான ஆதாரங்களும் சிக்கியது.
மேலும் பாபுவுக்கு சென்னையில் கோடிக் கணக்கான மதிப்புள்ள பங்களா வீடு, வணிக வளாகம் இருப்பது தெரிய வந்தது. கடலூர் நகரில் மட்டும் 6 வீடுகளும், சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான காலி மனைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றிவரும் பாபு பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்தது எப்படி என்பது குறித்து அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர்.

சோதனை முடிந்து இரவு 10 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியே வந்தனர். கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் பணங்களை மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டும், ஆவணங்களை சூட்கேசிலும் கொண்டு சென்றனர்.
அவற்றை இரவோடு இரவாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட வாகன ஆய்வாளர் பாபு, உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆய்வாளர் பாபு இதற்கு முன்பு சேலம் மற்றும் தூத்துக்குடியில் பணியாற்றி உள்ளார். அங்கு பணியாற்றிய போதும் அவர் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
பாபுவின் வங்கி கணக்குகள் மற்றும் கோடிக்கணக்கான சொத்துக்களை முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். #RTO #DVACRaid
ஸ்ரீமுஷ்ணம் தெற்கு செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 51). இவர் ஸ்ரீமுஷ்ணம் பழையபோலீஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் வெளிநாட்டு பணமாற்றம், செல்போன் விற்பனை செய்யும் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார்.
இரவு செல்வம் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் செல்வத்தின் கடைமுன்பு வந்தனர். கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கல்லா பெட்டியில் இருந்த ரூ.33 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு செல்வம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு போலீஸ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் பற்றி ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக சங்க செயலாளர் தங்க பன்னீர் செல்வம் கூறியதாவது:-
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடப்பது வியாபாரிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் வலியுறுத்தினோம். கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளை குறித்து வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அங்கு செட்டி பாளையம் இருளர்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அய்யனார். அதே பகுதியை சேர்ந்தவர் குமார், அவரது மனைவி லட்சுமி (வயது 40).
கடந்த மாதம் அய்யனார், குமார், லட்சுமி ஆகியோர் சென்னைக்கு செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது அங்கு அய்யனாருக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வேலைக்கு சென்ற 3 பேரும் சொந்த ஊர் திரும்பினர். நேற்று மாலை அய்யனார் தனது வீட்டில் தந்தை கிருஷ்ணன், தாய் ராணி, தாத்தா கலியபெருமாள் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது குமாரும், அவரது மனைவி லட்சுமியும் இரும்பு கம்பியுடன் அய்யனார் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அய்யனார், கிருஷ்ணன், ராணி, கலியபெருமாள் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசில் அய்யனார் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து வீடு புகுந்து தாக்கிய குமார், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை கைது செய்தார்.
பண்ருட்டி எலந்தம்பட்டில் உள்ள கெடிலம் ஆற்றில் அனுமதிபெறாமல் சிலர் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை கெடிலம் ஆற்றுப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு சிலர் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் மணல் அள்ளிய பெரிய எலந்தம்பட்டை சேர்ந்த வேலு (55), மணி (40), கந்தன், குமார், பத்மநாபன், ராஜேந்திரன் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சோழத்தரம் அருகே உள்ள வடக்கு பாளையங்கோட்டையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 39), கபில் (26), கலையரசன் (28) உள்ளிட்ட 6 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சூதாடிய சுந்தர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் மனு கொடுக்க வந்திருந்தனர். மனு கொடுக்க வந்திருந்தவர்களை போலீசார் சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில் திட்டக்குடியை அடுத்த இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சிவசக்தி (வயது 30) என்பவர் தனது மகன்கள் பிரக்கியன் (8), யாத்திரிகன் (4) ஆகியோருடன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை மீட்டனர். சிவசக்தி விஷம் குடித்து மயங்கி விழுந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. சிவசக்தியின் கணவர் ராஜா திட்டக்குடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். இதனால் சிவசக்தி தனது 2 மகன்களுடன் வறுமையில் வசித்து வந்துள்ளார்.
குடும்பம் வறுமையில் வாடியதால் சிவசக்தி அந்த பகுதியில் உள்ள சத்துணவு கூடத்தில் தனக்கு வேலை வழங்கும்படி பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு வேலை வழங்க வில்லை என தெரிகிறது. தனக்கு வேலை கிடைக்காததால் விரக்தியடைந்தார். இன்று காலை அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுக்க முடிவு செய்தார்.
அப்போது அவர் தனது 2 மகன்களையும் அழைத்து வந்தார். சிவசக்தி தான் மறைத்து கொண்டுவந்த விஷத்தை எடுத்து குடித்தது தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.வும்., தி.மு.க.தேர்தல் பணிக்குழு செயலாளருமான இள.புகழேந்தி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று கடலூர் அண்ணா பாலத்துக்கு முன்பு உள்ள கடலூர்-புதுவை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கடலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் தங்கராசு, நகர செயலாளர் கே.எஸ்.ராஜா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், வக்கீலுமான சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட ம.தி.மு.க.செயலாளர் என்.ராமலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், நகர தி.மு.க.துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, காங்கிரஸ் கட்சி மாநில ஊடக பிரிவு பொதுச்செயலாளர் மணிகண்டன், மீனவரணி தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ராம்ராஜ், தொ.மு.ச.தலைவர் பழனிவேல், நகர ம.தி.மு.க.செயலாளர் ராமசாமி, தி.மு.க. மாணவரணி அகஸ்டின் பிரபாகர் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சாலைமறியல் போராட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.இள. புகழேந்தி உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வேனில் ஏற்றிசென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், சிப்காட் செயலாளர் சிவானந்தம் உள்பட சுமார் 100 பேர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் அண்ணா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் 75 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் வட்ட பொருளாளர் வடிவேல், நிர்வாகிகள் முருகன், மகேஷ், அமாவாசை முன்னிலையில் மாநில குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் சுந்தர் ராஜா உள்பட 50 பேர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர்.
பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு கடலூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது கோஷங்களையும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படு கிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சதுர்த்தியையொட்டி இந்துக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் கடந்த ஒரு மாதமாக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விருத்தாசலம், மங்கலம்பேட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதன்படி சிவன், பார்வதியுடன் இருப்பது போன்ற விநாயகர், 3 தலையுடன் இருக்கும் விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர், மாட்டு வண்டிகளில் அமர்ந்தபடி செல்வது போன்ற விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், நந்தி விநாயகர், பாகுபலி விநாயகர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்வது போன்ற விநாயகர், வலம்புரி விநாயகர், 5 தலை நாகத்துடன் இருக்கும் விநாயகர் உள்ளிட்ட பலவிதமான வடிவங்களில் 2 அடி முதல் 13 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு வண்ணங்களில் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.
இதுகுறித்து மங்கலம்பேட்டையை சேர்ந்த விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், நாங்கள் களிமண், வண்டல்மண், ஆற்றுமணல், கிழங்கு மாவு கொண்டு இந்த விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். இதனை தண்ணீரில் கரைத்தால், நீர் நிலைகள் மாசுபடாது என்றார்.
கடலூர்:
வேளாங்கண்ணி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள சென்னையை சேர்ந்த வினோத்குமார் (வயது 32), ஜானகிராமன் (38), மஞ்சு (20) உள்பட 30 பேர் ஒரு ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
திருவிழா முடிந்து நள்ளிரவில் அவர்கள் அதே ஆம்னி பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டனர். அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக எதிரே சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி ஒரு வேன் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திடீரென ஆம்னிபஸ்சும், வேனும் பயங்கர சத்தத்துடன் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் நிலை தடுமாறிய ஆம்னிபஸ் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப் பட்டிருந்த மினிலாரி மீது மோதியது. இதில் ஆம்னிபஸ், வேன் மற்றும் மினிலாரி ஆகியவை பலத்த சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த வினோத்குமார், ஜானகிராமன், மஞ்சு உள்பட 9 பக்தர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை ரெட்டிச்சாவடி போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






