என் மலர்
கடலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அந்த கல்லூரியில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் செல்வதற்கு வசதியாக விருத்தாசலத்தில் இருந்து பஸ் அனுப்பப்படுகிறது. அதன் மூலம் அந்த மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சென்றனர். பின்னர் மாலை கல்லூரி முடிந்தவுடன் பஸ்சில் வீட்டுக்கு வந்தனர். பின்னர் விருத்தாசலத்தில் டிரைவர் தினமும் நிறுத்தும் இடத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று அதிகாலை திடீரென புகை மூட்டத்துடன் பஸ் கொழுந்து விட்டு எரிந்தது. வெப்பம் தாங்காமல் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.
மேலும் பஸ்சின் என்ஜின் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் விருத்தாசலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பஸ்சில் பழுது ஏற்பட்டதன் காரணமாக தீ பிடித்ததா? அல்லது மர்ம நபர்கள் யாராவது பஸ்சில் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். இரவு நேரங்களிலும் காற்று இல்லாமல் புழுக்கமாக இருந்ததால் சிரமத்துக் குள்ளாகினர்.
இந்த நிலையில் கடலூரில் நேற்று இரவு 8 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது. இரவு 10 மணி முதல் லேசாக மழை தூறியது. அதன் பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் பலத்த மழை பெய்தது. ½ மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. மழை காரணமாக கடலூரில் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம், காவனூர், தேத்தம்பட்டு, குணமங்கலம், புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதைத்தொடர்ந்து இரவிலும் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது.
பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம், ஆவட்டி, ஆவினங்குடி, இறையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. 2½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக் கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது பெய்த இந்த மழையால் அந்த பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று விழுப்புரத்தில் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை 3 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 3.30 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் 15 நிமிடம் தூறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகு மாலை 6 மணிக்கு மேல் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதே போல் உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
கடும் வெயிலினால் அவதியடைந்த மக்கள் தற்போது பெய்த இந்த திடீர் மழையினால் குளிர்ந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி 10-வது வார்டில் உள்ள இருளர் தெருவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த தெருவில் கடந்த 3 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் 1 வாரமாக முற்றிலும் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெண்ணாடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
அதற்கு அதிகாரிகள் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேரூராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் 1 மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவிகளுக்கு இலவச மடிக்கணணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பள்ளியில் கடந்த 2016-17-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த மாணவிகள் 20 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் விழா நடந்த மேடைக்கு சென்று தலைமையாசிரியர் மற்றும் விழா குழுவினரை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் தங்களுக்கு லேப்-டாப்வழங்கிய பின்னரே மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் உங்களுக்கு லேப்-டாப் வழங்குவது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் உங்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும். தற்போது இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.
ஆனால் மாணவிகள் அதனை ஏற்க மறுத்து மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பள்ளிக்கு எதிரே உள்ள நெய்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லுமுடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமயிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் எங்களுக்கு உடனடியாக லேப்- டாப் வழங்கவேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு லேப்-டாப் கிடைக்கும்வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.
அதற்கு போலீசார் உங்களுக்கு லேப்-டாப் வழங்குவது தொடர்பாக சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தற்போது நீங்கள் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையேற்று மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்பு போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர். மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண்ணாடம்:
அரியலூர் மாவட்டம் கோட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 52). லாரி டிரைவர்.
இவர் இன்று அதிகாலை தனது மொபட்டில் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். பெண்ணாடத்தை அடுத்த பெரிய கொசப்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மொபட்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆதிமூலம் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆதிமூலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலத்துக்கு இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கமாகும். சுயநலத்தோடு வேறு கட்சிக்கு சென்றவர்களால் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு வந்து சிறப்பாக வழிநடத்திச் செல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்கனவே லெட்டர் பேட் கட்சி என்று கூறியவர்கள், தினகரனை தனி மரம் என்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரை குண்டர் சட்டத்தை பயன்படுத்தி மிரட்டி வருகின்றனர்.
நிறைய பேரை அவர்கள் மீது உள்ள பிரச்சனையை காரணம் காட்டி காவல்துறையை வைத்து மிரட்டி அ தி.மு.க. கட்சியில் இணைய அழைக்கின்றனர். மக்கள் பிரச்சனையை குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தண்ணீர் பஞ்சத்தை கையாள முடியாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சீர்குலைப்பதற்கான தோற்றத்தை உருவாக்குவதற்கான வேலையை செய்து வருகின்றனர்.

பதிவு செய்த கட்சியாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக, ஒரு புதிய சின்னத்தில், நிலையான சின்னத்தில் நிற்பது என முடிவு செய்துள்ளோம். இதனால் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் பயந்து விட்டோம் என கூறலாம். சொல்கின்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். தற்போது வேலூர் தேர்தலுக்கு பரிசு பெட்டி சின்னத்தை கேட்டால் கூட கிடைக்குமா? என தெரியவில்லை.
கட்சியை பதிவு செய்வதற்கு முன்பு விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வந்தால் ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு சின்னத்தில் நிற்க கூடிய நிலைமை ஏற்படும். தேர்தலுக்கு முன்பு நிலையான சின்னம் கிடைத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க கூடிய தேவை இருக்காது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் முதுநகரை அடுத்த மணக்குப்பம் வண்ணாங் குட்டை பகுதியில் தரிசுநிலம் உள்ளது. இங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தது.
இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொது மக்கள் ரத்தகாயங்களுடன் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த வாலிபரின் உடலை பார்த்தனர். அவர் கைலிமட்டும் அணிந்திருந்தார். கழுத்தில் வெட்டு காயங்கள் இருந்தன. அவரை யாரோ கடத்தி சென்று கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இறந்து கிடந்த வாலிபரை பற்றி விபரம் எதுவும் தெரியவில்லை என்று கூறினர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த வாலிபர் யார் என்றும், அவரை கொலை செய்த மர்ம மனிதர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.
வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அங்கிருந்து கீழ் அணையில் தேக்கப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரியில் சேமிக்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பலத்த மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பியது. சென்னைக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பின்னர் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்தது. சென்னைக்கு குடிநீர் அனுப்புவதற்காக கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது. பின்னர் கீழ் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.
தற்போது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
மழை பெய்யாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 41.70 அடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 40 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.
தற்போது வீராணம் ஏரியின் உள்ள நீர் இருப்பை கணக்கிட்டால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சரவணன் நேற்று இரவு அவரது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டார். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை பூட்டி விட்டு காற்றுக்காக வீட்டின் மாடியில் படுத்து தூங்கினர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் நேற்று நள்ளிரவில் சரவணன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இன்று காலை கண்விழித்த சரவணன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போயிருந்தது. மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற நகை- பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இது குறித்து பெண்ணாடம் போலீசில் சரவணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள் மாடியில் தூங்கி கொண்டிருக்கும் போதே மர்ம மனிதர்கள் வீடு புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சில டாக்டர்கள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
பிறமாநில அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், மருத்துவ கல்லூரிகளில் பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும், எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள் பின்னர் மருத்துவ மேற்படிப்பு முடித்தால் அவர்களுக்கு கலந்தாய்வு முறையில் பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து டாக்டர் ஸ்ரீதரன் கூறுகையில், பிறமாநில அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அரசிடம் இருந்து இதுவரை எந்தவித பதிலும் இல்லை. இது உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அதாவது நேற்று) டாக்டர்கள் தின விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். இந்த நாளை கருப்புநாளாக நாங்கள் அனுசரித்து அரசுக்கு எங்கள் எதிர்ப்பைதெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிகிறோம். மாவட்டம் முழுவதும் 350 டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என் றார்.டாக்டர்களின் இந்த போராட்டத்தினால் மருத்துவ சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. போராட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை மேற்கொண்டனர். டாக்டர்களின் போராட்டத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






