என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாச்சலம்:

    விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி செல்வி (வயது 45).

    இவர்களது மகன் அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரது மகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்கேயோ சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு வீட்டின் முன்பு செல்வி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கொளஞ்சி, ஏன் என் மகளை உன் மகன் இன்னும் வீட்டுக்கு அழைத்து வந்து விடவில்லை? எனக் கேட்டு செல்வியை தகாதவார்த்தைகளால் திட்டினார். பின்னர் அங்கு இருந்த மின்கம்பத்தில் அவரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கொளஞ்சியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம் அருகே அரசு டாஸ்மாக் கடை விற்பனையார்களை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் அரசு டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையின் விற்பனையாளர்களான வீராசாமி, சுந்தர் (வயது 45) ஆகிய இருவரும் நேற்று இரவு 12 மணிக்கு பணி முடிந்ததும் விற்பனையான ரூ. 3 லட்சத்தை ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு கடையில் இருந்து புறப்பட்டனர்.

    விவசாய நிலங்களைக் கடந்து சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மர்ம கும்பல் திடீரென விற்பனையாளர்களை சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் கையில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட விற்பனையாளர்கள் அந்த பணத்துடன் இருந்த பேக்கை வயலில் தூக்கி எரிந்துவிட்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதுகுறித்து விற்பனையாளர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று மர்ம நபர்களை வலைவீசி தேடினர். ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. இதுகுறித்து விற்பனையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கொண்டு மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் தாக்கி ரூபாய் 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு 9 மணியளவில் திடீரென்று இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. கடலூர் பஸ்நிலையம் பகுதி, திருப்பாதிரிப்புலியூர் பத்திரபதிவு அலுவலக சாலை, தலைமை தபால் அலுவலகம் பகுதி, பாரதி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடலூரில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கடலூர் நகரம் இருளில் முழ்கியது.

    இரவு 11 மணிக்கு பிறகு மழை தூறிக்கொண்டிருந்தது.

    பெண்ணாடம், திட்டக்குடி, சவுந்தரசோழபுரம், செம்பேரி, குடிகாடு, கூடலூர் போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதலே மழைபெய்தது.

    அதுபோல் கடலூர் மாட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணிமுதல் பல்வேறு இடங்களில் பலத்த மழைபெய்தது. விழுப்புரம், பிடாகம், பேரங்கியூர், கோலியனூர், பெரும்பாக்கம், சாலை, வளவனூர், திருநாவலூர் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்ததது. அதுபோல் மரக்காணம் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைபெய்ததது.

    பரங்கிப்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    பரங்கிப்பேட்டை:

    பண்ருட்டி அருகே உள்ள அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை மகன் ஜெயசூர்யா (வயது 21). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அன்னங்கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின்னர், திரும்பி வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம மனிதர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு சிறுவன் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தான். இதனால் சந்தேகத்தின் பேரில், அந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அதில், அவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தான். இதையடுத்து அவனை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்த போது, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவனிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஜெயசூர்யாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    மேலும் பரங்கிப்பேட்டை பகுதியில் 5 மோட்டார் சைக்கிளை திருடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே கருணாகரநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இருப்பினும் குடிநீர் வழங்க மாற்று நடவடிக்கை எடுக்கவில்லை. 

    இந்த நிலையில் கருணாகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலிகுடங்களுடன் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

    இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகுமார், ராமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து பெண்கள் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள், புதிய ஆழ்துளை கிணறு அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
    விருத்தாசலம் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 25). எம்.எஸ்.சி பட்டதாரி.

    இவர் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார். இந்நிலையில் இவரும் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் கோவிந்தராஜ் (30), என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இது குறித்து அறிந்ததும் அர்ச்சனாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அர்ச்சனா கோவிந்தராஜை தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா காவனூர் கிராமத்தில் உள்ள ஆசிரியர் கோவிந்தராஜ் வீட்டின் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது கோவிந்தராஜ் வீட்டில் இருந்தவர்கள் வீட்டைப்பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.

    அப்போது அர்ச்சனா எனக்கு வாழ்வு கிடைக்கும் வரை நான் இங்கு தான் இருப்பேன். கோவிந்தராஜ் என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். இச்சம்பவம் குறித்து அறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் அர்ச்சனாவை அழைத்துச் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். கோவிந்தராஜ் தலைமறைவாக இருந்ததால் போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த கோவிந்தராஜை விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் பிடித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவிந்தராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் மழை பெய்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை விருத்தாசலம் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. இதையடுத்து திடீரென 7.30 மணி முதல் 8.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதியிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையினால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    புவனகிரி, கீரப்பாளையம், எருமாத்தூர் பகுதிகளில் நேற்று இரவு 7.15 மணிமுதல் 8.15 மணி வரை லேசான சாரல் மழைபெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

    நெய்வேலி, செருத்தான்குப்பம், திடீர்குப்பம், இந்திரா நகர், வடக்கு மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இதனையடுத்து 7 மணிக்கு சாரல் மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் குளிர்ச்சியான நிலை உருவானது.

    பென்னாடம், திட்டக்குடி, ஆவினங்குடி, எறையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையின் பள்ளமான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

    மழை பெய்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.



    ஆணவ படுகொலையை தடுக்க அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மெயின் ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊராட்சி தோறும் பள்ளிகளை திறந்து ஏழை மக்களுக்கு காமராஜர் கல்வி கொடுத்தார். தற்பொழுது காவி மயத்திலிருந்து கல்வியை காக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் மதவாத அரசியலை தூண்டும் விதமாக பாரதிய ஜனதா ஆட்சி செயல்படுகிறது. கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து விலக்கி மாநில அரசு அதிகாரத்தில் உள்ள பட்டியலில் வைக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் ஆணவ படுகொலையைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை முழுமையாக விலக்க வேண்டும். இதுகுறித்து 2 மசோதாக்கள் நிறைவேற்றியும் அது குறித்து மத்திய அரசு எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது தமிழக அரசு நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டம் கொண்டு வர வேண்டும்.

    தமிழக குடிநீர் பிரச்சினையை போக்க மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    வாணியம்பாடி:

    வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி வாணியம்பாடியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 3 குழுக்கள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி தலைமையில் பறக்கும்படை அதிகாரி முருகதாஸ் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் 3 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, அவர் நகை செய்பவர் என்பதும், நகைகளை செய்வதற்காக தங்கம் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் ஆகும்.
    நெல்லிக்குப்பம் அருகே இன்று காலை பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இன்று காலை அவர் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.

    நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு கஸ்டம்ஸ் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ரமேஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அந்த பகுதியில் இருந்தவர்கள் இந்த விபத்து குறித்து மருதாடு சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்தனர்.

    கார் கவிழ்ந்தது கிடப்பதை படத்தில் காணலாம்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரமேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரமேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை அடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி எனது மகனை அடித்து கொன்று விட்டனர் என அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்துக்கு போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்ற வினோத் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வினோத்தின் இறப்பு குறித்து அவரது தந்தை மூர்த்தி கூறியதாவது:-

    எனது மகன் வினோத்தை விசாரணை என்ற பெயரில் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் அடித்து கொன்று விட்டனர். போலீஸ் நிலையத்தில் வினோத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தற்போது நாடகமாடுகின்றனர்.

    இந்த பிரச்சினை தொடர்பாக கடலூர் மாவட்ட நீதிபதியை சந்தித்து நான் முறையிட்டேன். அப்போது எனது மகனை அடித்து கொலை செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளேன்.

    எனது மகனின் சாவுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை நான் தொடர்ந்து போராடுவேன். எனது மகனை பிரிந்து எங்களது குடும்பம் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உருத்திர சோலை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30). நேற்று இவரது வீட்டுக்கு காட்டுமன்னார்கோவில் போலீசார் வந்தனர். அவர்கள் வினோத்திடம் ஏ.டி.எம். மெஷினில் பணம் திருட்டுபோன வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனகூறி வினோத்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை வினோத்துக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தில் இருந்து வினோத்தை காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதை அறிந்ததும் வினோத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். போலீசார் தாக்கியதால் வினோத் இறந்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    ×