என் மலர்tooltip icon

    கடலூர்

    பெண் ஊழியர் பாலியல் புகார் தொடர்பாக கடலூர் மாவட்ட கல்வி அலுவலர், சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
    மந்தாரகுப்பம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பகுதியில் அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நெய்வேலி அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செந்தமிழ்செல்வி (வயது 33). இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் கொடுத்த புகார் மனுவில், இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் பெலிக்ஸ் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன் ஆகியோர் அரசு பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆசிரியரிடம் இதுதொடர்பாக தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அதோடு தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும் படி கடிதம் பெற்று சென்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெறப்பட்ட கடிதங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் கடிதத்தில் உள்ள விபரங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடன் தொல்லையால் தாய் மற்றும் மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆண்டாள் (வயது 57). இவர்களது மகன்கள் செல்வகுமார் (30), ராஜ்குமார் (28).

    கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணேசன் இறந்து விட்டார். எனவே ஆண்டாள் தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

    ராஜ்குமார் ஆட்டோ டிரைவராக உள்ளார். தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்த செல்வகுமார் தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் உள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதோடு இறந்து போன கணேசன் இருக்கும் சமயத்தில் கடன் தொல்லை இருந்தது.

    இளைய மகன் ராஜ்குமார் தன்னை விட்டு பிரிந்து சென்றதாலும், கடன் தொல்லை இருந்ததாலும் ஆண்டாள் மனவிரக்தியில் இருந்து வந்தார்.

    கடன் கொடுத்தவர்கள் கடந்த சில நாட்களாக அடிக்கடி வீட்டுக்கு வந்து நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆண்டாள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

    இன்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சிதம்பரம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஆண்டாள் தனது மூத்த மகன் செல்வகுமாருடன் இறந்து கிடந்தார். இவர்கள் 2 பேரும் உத்திரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    நள்ளிரவில் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திட்டக்குடி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 8 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி பகுதியில் நகை கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

    அவர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் இரும்பு பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடை திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கடையின் உரிமையாளர் சங்கருக்கு செல்போன் மூலம் பக்கத்து கடை உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த சங்கர் பதறியபடி கடைக்கு விரைந்து வந்தார்.

    கடைக்குள் சென்று பார்த்தபோது இரும்பு பெட்டகத்தில் வைத்திருந்த 40 பவுன் நகை, 8 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். கொள்ளை நடந்த நகை கடையை பார்வையிட்டனர். அதோடு அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    நகை கடையில் இருந்து சிறிது தூரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறி கிடந்தன. இது கொள்ளை போன நகை கடையில் உள்ளதுதான் என்று சங்கர் போலீசாரிடம் கூறினார். அதனை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

    கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 11 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது ஆதியூர். இந்த ஊரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி தீபிகா (வயது 25).

    சின்னத்துரை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தீபிகா ஆதியூரில் உள்ள தனது மாமியார் கருப்பாயியுடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு தீபிகா, கருப்பாயி ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். காற்றுக்காக கதவை பூட்டாமல் திறந்து வைத்திருந்தனர்.

    நேற்று நள்ளிரவு மர்ம மனிதர்கள் 2 பேர் தீபிகாவின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கி கொண்டிருந்த தீபிகாவை தாக்கி கழுத்தை நெரித்தனர். திடுக்கிட்டு எழுந்த அவர் கூச்சலிட்டார்.

    அப்போது அந்த மர்ம மனிதர்கள் தீபிகாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் தீபிகா காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டியில் வி‌ஷ வண்டு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி பாரதி நகர் சேர்ந்தவர் மணி (60). இவரது மனைவி மல்லிகா (52). இவரது வீட்டின் தோட்டத்தை சுத்தப்படுத்தம்போது அங்கிருந்த வி‌ஷ வண்டு மல்லிகாவை கடித்தது. அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்து விட்டார்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது சிறுகிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(வயது 72).விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்கள் குடும்பியான் குப்பத்தில் பண்ருட்டி- சேலம் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

    கடந்த 19-ந்தேதி கணவனும் மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனை அறிந்த மர்ம மனிதர்கள் இரவில் ராமமூர்த்தியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை- பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர்.

    இன்று காலை வெளியூர் சென்று இருந்த ராமமூர்த்தி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு பீரோ திறந்து கிடப்பதையும் பொருட்கள் சிதறி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவை பார்த்தபோது அதில் இருந்த நகை- பணம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து அவர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகையை பதிவு செய்தனர். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு தெரியவில்லை. வீடு பூகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    விருத்தாசலம் இளமங்கலம் சாலையில் பலத்த மழையால் சேற்றில் அரசு பஸ் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் இரவு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து தாழநல்லூர் கிராமத்துக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.

    அங்கு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் விருத்தாசலம் நோக்கி பஸ் புறப்பட்டது. அப்போது விருத்தாசலம் பகுதியில் கனமழை பெய்தது. ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணி நடந்ததால் பல்வேறு பணிகளுக்காக டிராக்டரில் மண் ஏற்றி செல்லப்பட்டது. இந்த டிராக்டர்களில் இருந்து கிழே விழுந்த மண் சாலையில் நிரம்பி இருந்தது.

    மழை பெய்தவுடன் சாலையில் படிந்திருந்த மண், சேறும் சகதியுமாக மாறியது. அந்தசாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

    இந்நிலையில் தாழநல்லூர் கிராமத்திலிருந்து புறப்பட்ட பஸ் இளம்மங்கலம் அருகே வந்த போது சாலையில் இருந்த சேற்றில் சிக்கியது சாலையில் பஸ்சை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பஸ்சை அங்கேயே நிறுத்தினர். மழை விட்டவுடன் செல்லலாம் என பஸ்சில் அமர்ந்திருந்தனர்.

    சாலையில் பஸ்நின்றதால் அந்த பகுதி வழியாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை.

    சிறுது நேரத்தில் மழை விட்ட உடன் பஸ் டிரைவர் பஸ்சை இயக்கினார். ரோடு சேறும் சகதியுமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சென்றது. எனவே பஸ்சை டிரைவர் சாலையிலேயே நிறுத்தி விட்டார்.

    இதனால் பஸ்சில் வந்த 4 பயணிகளும் பஸ்சைவிட்டு இறங்கி தங்களுடைய ஊர்களுக்கு நடந்தே சென்றனர்.

    பஸ் செல்ல முடியாததால் டிரைவரும், கண்டக்டரும் இரவு முழுவதும் பஸ்சிலேயே இருந்தனர். இதனால் இரவு முழுவதும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இன்றுகாலை சாலையில் இருந்த மண்னை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சேறும் சகதியுமாக உள்ள இளமங்கலம் சாலை

    சேற்றில் சிக்கி இருந்த பஸ் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. மீண்டும் ஆலிச்சிக்குடியில் இருந்து பஸ் காலை 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இன்று காலையிலும் இளமங்கலம் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் அந்த வழியாக பஸ் மற்றும் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை, இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குடிபோதையில் முகத்தில் தலையணையால் அமுக்கி மனைவியை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மாளிகைமேடு. இந்த பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35) கூலிதொழிலாளி. இவருக்கும் சேத்தியாதோப்பு அருகே உள்ள கந்தகுமாரம் பகுதியை சேர்ந்த அமலா (27) என்பவருக்கும் கடந்த 1 ½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஆண்குழந்தை ஒன்று உள்ளது. சுரேசுக்கு குடிபழக்கம் இருந்தது. அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று இரவு சுரேஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் அவரது மனைவி அமலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவி அமலாவின் முகத்தில் தலையணையால் அமுக்கினார். இதில் அமலா மூச்சி திணறி பரிதாபமாக இறந்தார். மனைவி இறந்ததை அறிந்ததும் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இன்று காலை சுரேஷ் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வெகுநேரம் ஆகியும் அமலா வெளியில் வராததால். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு அமலா பிணமாக கிடந்தார். இதைபார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே மனைவியை கொலை செய்த சுரேஷ் இன்று காலை காட்டுமன்னார் கோவில் போலீஸ்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    தமிழகத்தில் டெல்டா மாவட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்த திட்டத்தை காவிரி டெல்டா பகுதியில் அமல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழிந்து பாலைவனமாகிவிடும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தொண்டு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் இன்று பெருந்திரள் பேரணி மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை தபால் நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுநல கூட்டமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டனர்.

    தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குலோப், தி.க. மாநில துணை பொது செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பின்பு காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். உடனே அங்குநின்ற போலீசார் பேரணி செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். இதைத்தொடர்ந்து விவசாய சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன்பின்பு சாலையின் ஓரம் அமைதியாக பேரணி செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டகாரர்கள் அமைதியாக சாலையின் ஓரத்தில் பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்றனர்.

    அங்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கோ‌ஷம் எழுப்பினர்.

    அதன்பின்பு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க முயன்றனர். ஆனால் அங்கு நின்ற போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசாருக்கும், காவிரிபாதுகாப்பு கூட்டு இயக்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின்பு ஒருசிலரை மட்டும் உள்ளே சென்று மனு கொடுக்க அனுமதித்தனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இரு குடும்பத்தாருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி செல்வி (வயது 45). இவர்களது மகன் பெரியசாமி.

    இவர், அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரது மகள் பவுலியை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பெரியசாமியும், பவுலியும் வீட்டைவிட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி செல்வியை மின்கம்பத்தில் கட்டி வைத்து கொளஞ்சி தாக்கினார். இதில் செல்வி படுகாயம் அடைந்தார்.

    விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரை படத்தில் காணலாம்.

    இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று செல்வியை மீட்டு, சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மின் கம்பத்தில் கட்டி வைத்து செல்வியை தாக்கிய கொளஞ்சியை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, திடீரென வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது உடலில் உள்ள காயம் சரியாவதற்குள் வெளியேற்றப்பட்டதால் மனவேதனை அடைந்தார்.

    அதன் பின்பு அவர் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே தரையில் படுத்திருந்தார். இது பற்றிய தகவல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அசோகனுக்கு தெரிய வந்தது. உடனே அவரும், மாதர் சங்கத்தினர் மற்றும் செல்வியின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்தும், செல்வியை தாக்கிய கொளஞ்சியை விடுவித்த போலீசாரை கண்டித்தும், ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் செல்விக்கு தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தினர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது டாக்டர்கள், செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக கூறி அவரை ஆஸ்பத்திரிக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

    முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் செல்வியை தாக்கிய கொளஞ்சி கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதையடுத்து போராட்டதை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கொளஞ்சியை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
    வேப்பூர் கூட்டுரோடு அருகே சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மினிலாரி மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வேப்பூர்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பைத்தல்துரை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 24). மினிலாரி டிரைவர்.

    நேற்று இரவு இவர் சின்னசேலத்தில் இருந்து விருத்தாசலத்துக்கு நெல் அறுவடை எந்திரத்தை மினிலாரியில் ஏற்றி சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் ராஜவேல் (28), மணிகன்டன் (25) ஆகியோர் சென்றனர். மினிலாரி கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோடு அருகே விருத்தாசலம் சாலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் டிரைவர் பாண்டிதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். 

    மினிலாரியில் வந்த ராஜவேல், மணிகன்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாண்டிதுரை உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம், பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆரோக்கியராஜ்.

    இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    தற்போது ஆரோக்கிய ராஜ் மதுராந்தகம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் லஞ்சம் வாங்குவதாக புகார் கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்பின்ராஜாசிங் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், சண்முகம் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ஆரோக்கியராஜ் வீட்டுக்கு வந்தனர்.

    அங்கு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். உடனே வீட்டின் கதவை பூட்டி கொண்டு அங்கு சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ×