என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெண்ணாடத்தில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் குடிநீர் வழங்கக்கோரி திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி 10-வது வார்டில் உள்ள இருளர் தெருவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த தெருவில் கடந்த 3 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் 1 வாரமாக முற்றிலும் தண்ணீர் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெண்ணாடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.

    அதற்கு அதிகாரிகள் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேரூராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

    இதை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் 1 மணிநேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×