search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லேப்-டாப் வழங்ககோரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    லேப்-டாப் வழங்ககோரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வடலூர் அருகே லேப்-டாப் வழங்ககோரி மாணவிகள் சாலை மறியல்

    கடலூர் மாவட்டம் வடலூர் அருகே லேப்-டாப் வழங்கக்கோரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று காலை மாணவிகளுக்கு இலவச மடிக்கணணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழா தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த பள்ளியில் கடந்த 2016-17-ம் ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்த மாணவிகள் 20 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் விழா நடந்த மேடைக்கு சென்று தலைமையாசிரியர் மற்றும் விழா குழுவினரை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் தங்களுக்கு லேப்-டாப்வழங்கிய பின்னரே மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் உங்களுக்கு லேப்-டாப் வழங்குவது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் உங்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும். தற்போது இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.

    ஆனால் மாணவிகள் அதனை ஏற்க மறுத்து மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பள்ளிக்கு எதிரே உள்ள நெய்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லுமுடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமயிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் எங்களுக்கு உடனடியாக லேப்- டாப் வழங்கவேண்டும். இல்லையென்றால் எங்களுக்கு லேப்-டாப் கிடைக்கும்வரை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர்.

    அதற்கு போலீசார் உங்களுக்கு லேப்-டாப் வழங்குவது தொடர்பாக சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவே தற்போது நீங்கள் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதையேற்று மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்பு போக்குவரத்தை போலீசார் சரிசெய்தனர். மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×