search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மாட்டோம்- தினகரன்

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலத்துக்கு இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்களால் வழிநடத்தப்படும் இயக்கமாகும். சுயநலத்தோடு வேறு கட்சிக்கு சென்றவர்களால் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

    ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் ஒன்று திரண்டு வந்து சிறப்பாக வழிநடத்திச் செல்வார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்கனவே லெட்டர் பேட் கட்சி என்று கூறியவர்கள், தினகரனை தனி மரம் என்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரை குண்டர் சட்டத்தை பயன்படுத்தி மிரட்டி வருகின்றனர்.

    நிறைய பேரை அவர்கள் மீது உள்ள பிரச்சனையை காரணம் காட்டி காவல்துறையை வைத்து மிரட்டி அ தி.மு.க. கட்சியில் இணைய அழைக்கின்றனர். மக்கள் பிரச்சனையை குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தண்ணீர் பஞ்சத்தை கையாள முடியாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சீர்குலைப்பதற்கான தோற்றத்தை உருவாக்குவதற்கான வேலையை செய்து வருகின்றனர்.

    கட்சியைப் பதிவு செய்கின்ற வேலையில் இருக்கின்றோம். இன்னும் பதிவு வேலைகள் முடிவடையவில்லை. அடுத்து இடைத்தேர்தல் வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வேறுவேறு சின்னத்தில் சுயேட்சையாக, நிற்க வேண்டாம் என எங்கள் நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளோம். கட்சியைப் பதிவு செய்து அதற்குப் பிறகு தேர்தலில் நிற்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதனால் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை.

    வேலூர் தொகுதி


    பதிவு செய்த கட்சியாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக, ஒரு புதிய சின்னத்தில், நிலையான சின்னத்தில் நிற்பது என முடிவு செய்துள்ளோம். இதனால் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததால் பயந்து விட்டோம் என கூறலாம். சொல்கின்றவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். தற்போது வேலூர் தேர்தலுக்கு பரிசு பெட்டி சின்னத்தை கேட்டால் கூட கிடைக்குமா? என தெரியவில்லை.

    கட்சியை பதிவு செய்வதற்கு முன்பு விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் வந்தால் ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு சின்னத்தில் நிற்க கூடிய நிலைமை ஏற்படும். தேர்தலுக்கு முன்பு நிலையான சின்னம் கிடைத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடுவோம். ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க கூடிய தேவை இருக்காது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×