என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கணேச மூர்த்தி துணிச்சலானவர், மன உறுதி கொண்டவர்.
    • கணேச மூர்த்தி இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

    கோவை :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கணேசமூர்த்தியும், நானும் உயிருக்கு உயிராக பழகினோம். அவர் கொள்கை பிடிப்புடன் பணியாற்றியவர். கொங்கு மண்டலத்தின் சிங்கமாக இருந்தவர். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவார் என்று நினைக்கவில்லை. எனக்கு இடி விழுந்தது போல் இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் 2 சீட்டுகள் கிடைத்தால் நானும், துரையும் போட்டியிடுகிறோம் என்றார். ஒரு சீட் கிடைத்தால் துரையே நிற்கட்டும் என்றார். அதன்பிறகும் அவர் மகிழ்ச்சியாக தான் இருந்தார்.

    எம்.பி. சீட் கிடைக்காததால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்று கூறப்படுவதில் துளி கூட உண்மை இல்லை. என்னை அவர் நட்டாற்றில் விட்டு விட்டு போவது போல செல்வார் என நினைக்கவில்லை. அவர் மறைந்த செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனஉறுதி கொண்டவர் மருந்து குடித்தார் என்பதை நம்ப முடியவில்லை. அவரது மன உளைச்சலுக்கு காரணம் அவரது குடும்பத்தினரிடம் கேட்டால் தான் தெரியும். கணேசமூர்த்தி என்றும் திராவிட இயக்கத்தின் அழியா நட்சத்திரமாக இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க கூட்டத்திற்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • கோவை மக்கள் எனக்காக தாமரை சின்னத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பார்கள் என நம்புகிறேன்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மாற்றம் வருவதற்கு மக்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க கூட்டத்திற்கு பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக வந்து பா.ஜ.கவுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 60 சதவீத வாக்குகளை பெற்று பா.ஜ.க வெற்றி பெறும்.

    நான் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டாலும் மாநில தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

    வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 11-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளேன்.

    இதனால் என்னால் கோவை பாராளுமன்ற தொகுதியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இருந்தாலும் கோவை மக்கள் எனக்காக தாமரை சின்னத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்கு சேகரிப்பார்கள் என நம்புகிறேன்.


    கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.

    இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி தான் பொறுப்பேற்க வேண்டும்.

    மேலும் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் அவர்கள், மத்திய அரசு கொடுத்த நிதிகளையும் சரியாக கையாளவில்லை.

    இது தொடர்பாக அவர்களிடம் 10 கேள்விகளை நான் தருகிறேன். அதுகுறித்து விவாதம் செய்ய தயார் என்றால் அவர்களை என்னுடன் உட்கார வையுங்கள். ஸ்மார்ட் சிட்டிக்காக எத்தனை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. யாருக்கெல்லாம் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது என அவர்கள் சொல்லட்டும்.

    தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தற்போது 2 கட்சியினரும் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர்.

    வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் தி.மு.க.வினர் மூட்டை, மூட்டையாக பணத்துடன் இறங்கி உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.
    • 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.

    பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,

    * கோவை மக்களின் அன்போடு, வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

    * 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.

    * தொகுதி மக்களின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன்.

    * எங்களுடைய போட்டி, வேட்பாளர்களுடன் கிடையாது, தமிழக வளர்ச்சியை தடுப்பவர்களுடன் தான் என்று கூறினார்.

    • நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.
    • கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.

    இதனையொட்டி அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா என மும்முனை போட்டி நிலவுகிறது.

    பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நகர்புறங்கள், கிராம பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்கிறார்.

    முக்கிய இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசனையும் மேற்கொள்கிறார். நேற்று தொகுதிக்குட்பட்ட பல்லடம், சூலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், இன்று பா.ஜ.க மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக பா.ஜனதா நிர்வாகிகள், தொண்டர்களுடன் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    • சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார்
    • எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது

    கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.

    சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

    மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்

    இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது. 

    நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்.

    அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன்.

    அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம்.

    காரை விற்று கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர்.

    இதற்கு அண்ணாமலை மறைந்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
    • அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது

    பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.

    இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.

    மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர்.
    • மேலும், அகமதாபாத் ஐஐஎம்-வில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர்.

    கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அண்ணாமலை கோவை தொகுதி வேட்பாளராக அறிவித்ததும், அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன், அண்ணாமலைக்காக காத்திருக்கிறேன். எந்தமொழியிலும் பதில் அளிக்க தயார் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் எல்லா அடையாளம் கொடுத்த கோவைக்கு, சேவை செய்ய பா.ஜனதா வாய்ப்பு அளித்துள்ளது என அண்ணாலை தெரிவித்தார்.

    அண்ணாலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.

    சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

    மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்

    நீங்களாவது கேக்கலாம்ல. கம்முன்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கீங்க... என வானதி ஸ்ரீனிவாசன் நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

    அண்ணாமலை அடிக்கடி தான் மட்டும்தான் கஷ்டப்பட்டு படித்து வருவதாக பேசி வருகிறார். மேலும் மைக் பிடித்து பேசும்போது இல்லாதையெல்லாம் பேசி வருகிறார் என விமர்சனம் வைக்கப்பட்டு வரும் நிலையில்,  பலரும் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே வானதி ஸ்ரீனிவாசன் மகனும் பிஎஸ்ஜி கல்லூரியில்தான் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
    • சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட், பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சயான், மனோஜிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து சந்தோஷ் சாமி இன்று காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் கொடநாடு எஸ்டேட்டில் சம்பவத்தன்று என்ன நடந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரெல்லாம் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது? யார் சொல்லி அங்கு சென்றனர்? என பல கேள்விகளை கேட்டு விசாரித்தனர். 

    • பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
    • பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நடுபாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக பஸ் ஒன்று சென்றது.

    பஸ்சை கார்த்திக் என்பவர் ஓட்டினார். நடுப்பாளையம், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி பகுதிகளில் உள்ள மாணவர்களை ஏற்றி விட்டு, பட்டணம் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றுவதற்காக கார்த்திக் பஸ்சை அங்கு ஓட்டி சென்றார்.

    அப்போது ஜே.ஜே.நகர் பகுதி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் இருந்ததால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், வேனில் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.

    இதனை பார்த்ததும் அதிர்ச்சியான பஸ் டிரைவர் கார்த்திக், மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் ஒரத்தில் இருந்த 12 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் கார்த்திக் மற்றும் பஸ்சில் இருந்த மாணவர்களில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    பஸ் விபத்துக்குள்ளானதை அறிந்ததும், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பள்ளத்தில் இருந்த பஸ்சை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். தொடர்ந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கடந்த 9 வருடமாகவே இந்த சாலை இப்படி தான் உள்ளது. இதனை சீரமைத்து தருமாறு கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலத்தில் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சாலையை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.

    அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என பலரும் அந்தந்த பகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உடுமலையை சேர்ந்த பெஞ்சமின் பிரபாகரன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் நேற்று பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யாவிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

    அப்போது அவர் டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து நூதன முறையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. இந்த நாணயங்களை அனைவரும்வாங்க வேண்டும். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நாணயங்களாக கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து சப்-கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நாணயங்களை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். நாணயங்களுடன் வேட்பாளர் வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார்.
    • மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.

    கோவை:

    தமிழக பா.ஜனதா தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் அங்குள்ள கோவிலில் வழிபாடும் நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

    எனவே இந்த விஷயத்தில் அரசு மெத்தனபோக்கு காட்டாமல் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அரசியலை தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு, கேரள அரசுடன் பேசி, தண்ணீரை கொண்டு வர தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டும்.

    குளங்களுக்கு நீர் வரும் பாதையை தூர்வாருவதற்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும், தமிழக அரசு அதனை சரியான முறையில் கையாளுவது இல்லை.

    தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார். இதற்காக தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதியை ஆளும் அரசு சரியாக பயன்படுத்துவதில்லை.

    அதே போல பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக குடி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.

    ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், அதில் முறைகேடும் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.

    எப்பவுமே அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தையும், அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது. எப்பொழுது எல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அந்த சமயத்தில் அவர்கள், ஆதீனங்கள், குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று, அதனை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

    கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×