என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில், விஜயகுமாருக்கு இடத்தை விற்ற பாக்கியம் என்பவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் என்பவரின் மகன் விஜயகுமார் (50).

    இவர் கடந்த 2006-ம் ஆண்டு பாக்கியம் என்பவரிடமிருந்து 2.4 சென்ட் இடத்தை வாங்கினார்.

    தொடர்ந்து அந்த இடத்தில் அவர் என்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை கட்டி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தில் அவரது சகோதரர் வேணுகோபால் இருந்தார்.

    அந்த சமயத்தில் அங்கு முபாரக் அலி என்பவர் வந்தார். அவர் தான் ரியல் எஸ்டேட் அதிபர் என்றும், விஜயகுமாரின் நிறுவனம் உள்ள இந்த இடத்தை தான் வாங்கி இருப்பதாகவும், அதனால் நீங்கள் இடத்தை காலி செய்யும்படியும் கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியான வேணுகோபால் இதுகுறித்து தனது சகோதரரிடம் தெரிவித்தார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, விஜயகுமாருக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய நபர், தற்போதைய மார்க்கெட் விலை எவ்வளவோ, அதன்படி நீங்கள் பணத்தை கொடுத்தால், அந்த இடத்தை உங்களுக்கே கிரையம் செய்து கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியான விஜயகுமார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் சான்றிதழை வாங்கி பார்த்தார்.

    அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி பாக்கியம் என்பவரிடமிருந்து முபாரக் அலி அந்த இடத்தை கிரையம் பெற்றிருப்பதாக இருந்தது.

    இதையடுத்து அவர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விஜயகுமாருக்கு இடத்தை விற்ற பாக்கியம் என்பவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.

    அதன்பிறகு இறந்து போன பாக்கியத்திற்கு பதில் சிவபாக்கியம் என்ற பெண்ணின் பெயரில் போலி ஆதார், வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, விஜயகுமாரின் நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த முபாரக் அலி( 50), பாப்பநாயக்கன்பா ளையத்தை சேர்ந்த பாக்கியம் (66), கணபதி கே.ஆர்.ஜி நகர் கவுதமன்(29) கோவை தெற்கு உக்கடம் நிஷார் அகமது(34) கோவை காந்திபுரம் 7-வது வீதியை சேர்ந்த சாந்தி(44 ) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் தொழில் அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

    அவர் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபரில் கோவை, சென்னையில் உள்ள மார்ட்டின், அவருடைய மருமகன், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று சென்னை மற்றும் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் இருக்கும் மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் நடத்தி வரும் ஹோமியோபதி கல்லூரி உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனையானது இரவு தாண்டியும் நீடித்தது.

    இன்று காலை 2-வது நாளாக, வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையையொட்டி அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பூட்டப்பட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.

    இதேபோல் வீட்டின் அருகே உள்ள அலுவலகம் மற்றும் மார்ட்டின் நடத்தி வரக்கூடிய ஹோமியோபதி கல்லூரியிலும் 2-வது நாளாக சோதனை நடந்தது.

    கல்லூரியில் உள்ள அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே சரவணம்பட்டி மற்றும் சாய்பாபாகாலனியில் உள்ள மார்ட்டினின் உறவினர்கள் 2 பேர் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தது என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த வழக்கு தொடர்பான சோதனைகள் முழுமை அடைந்த பின்னர் என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்ற அதிகாரபூர்வ தகவலை அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

    சோதனையையொட்டி, சோதனை நடைபெற்று வரும் 3 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
    • ஓம்கார் பாலாஜியை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் கைதான அர்ஜுன் சம்பத்தின் மகனும் இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவு

    கோவையில் உள்ள ஈஷா மையம் மற்றும் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து நக்கீரன் இதழ் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக கூறி அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

     இதற்கிடையே தன் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இதனிடையே இந்த வழக்கில் நேரில் ஆஜராக சென்னை வந்திருந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜி கோவைக்கு செல்லப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நவம்பர் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை 3ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கோவை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இன்று காலை டாக்டர்கள், பணிக்கு செல்லாமல் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு திரண்டனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    கோவை:

    சென்னை கிண்டி அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டரை, வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

    இதில் படுகாயம் அடைந்த டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டரை கத்தியால் குத்திய வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று கோவை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் இன்று காலை டாக்டர்கள், பணிக்கு செல்லாமல் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு திரண்டனர்.

    பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அவர்களுக்கு ஆதரவாக ரேடியேஷன் துறை, மருந்தாளுனர்கள், செவிலியர் சங்கங்கள், ஆகியோரும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசும்போது, அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி பேசினர். அதன் பிறகு தமிழக அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நர்சுகள் மூலம் பிற நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். 

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • லாட்டரி மார்ட்டினின் இல்லம், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். மருத்துவ கல்லூரியும் நடத்தி வருகிறார். துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாத படி பூட்டினர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.

    தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தெரிகிறது. மார்ட்டின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள அறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.

    சோதனையின் போது அலுவலகத்தின் நுழைவு வாயில், மற்றும் அலுவலக அறைகளின் கதவுகளையும் அடைத்திருந்தனர்.

    இதேபோல் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

    சோதனையொட்டி கல்லூரிக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர்.

    கோவையில் மார்ட்டின் வீடு, அலுவலகம், மருத்துவக்கல்லூரி என மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடந்தது.

    அமலாக்கத்துறை சோதனையையொட்டி சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனை முடிவுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

    கோவையில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீட்டுக்குள் இருந்த கழிவறைக்கு சென்று உள்பக்கமாக இளம்பெண் பூட்டிக் கொண்டார்.
    • போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று கழிவறையில் பதுங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம் முருகன் நகர் நேரு வீதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 45). கோவையில் உள்ள சில கல்லூரிகளில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    ஆராய்ச்சி பட்டம் பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்கள் இவரிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அதேபோல் திருப்பூர் மாவட்டம் கணியம்பூண்டி வச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 25 வயது பெண், பேராசிரியர் சிவப்பிரகாசத்தை தொடர்பு கொண்டார்.

    அந்த பெண் எம்.எஸ்.சி. பட்டதாரி ஆவார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு வெளிநாட்டில் போய் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக அவர் சிவப்பிரகாசத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு தனது வீட்டுக்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறி இருக்கிறார். இளம்பெண்ணிடம் சிவப்பிரகாசம் சில சான்றிதழ்களை வாங்கி வைத்து இருக்கிறார். வீட்டுக்கு வரும்போது அந்த சான்றிதழ்களை தருவதாகவும் சொல்லி உள்ளார்.

    சிவப்பிரகாசம் கூறியதை நம்பி கல்வீரம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அந்த பெண் மதிய நேரம் சென்றார். அங்கு வீட்டில் சிவப்பிரகாசம் மட்டும் இருந்தார். பெண்ணை ஹாலில் அமர வைத்து பேசிக் கொண்டு இருந்தார். திடீரென பெண்ணின் தோளில் சிவப்பிரகாசம் கையை போட்டார். இதனால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த பெண் சுதாரிப்பதற்குள் சிவப்பிரகாசம் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இளம்பெண்ணை அவர் கற்பழிக்கவும் முயன்று இருக்கிறார். சிவப்பிரகாசத்திடம் இருந்து தப்பிக்க வழிதேடிய பெண், சமயோகிதமாக திட்டமிட்டார். தான் அவசரமாக கழிவறைக்கு செல்ல வேண்டும் என சிவப்பிரகாசத்திடம் இளம்பெண் கூறி உள்ளார்.

    வீட்டுக்குள் இருந்த கழிவறைக்கு சென்று உள்பக்கமாக இளம்பெண் பூட்டிக் கொண்டார். பின்னர் அங்கிருந்தே தனது தோழியை செல்போனில் அழைத்து விவரத்தை கூறி இருக்கிறார். போலீசுக்கு தகவல் தெரிவித்து தன்னை காப்பாற்றுமாறு சொல்லி கெஞ்சி உள்ளார்.

    அடுத்த கணமே பெண்ணின் தோழி போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் பேராசிரியரின் வீட்டுக்கு விரைந்து சென்று கதவை தட்டினர். கதவை திறந்து பார்த்த பேராசிரியர் அதிர்ச்சி அடைந்தார். போலீசை பார்த்ததும் அவருக்கு வியர்த்து கொட்டியது.

    போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் சென்று கழிவறையில் பதுங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர். போலீசாரை கண்டதும் இளம்பெண் கண்ணீர் விட்டு கதறி அழுது நடந்த விவரங்களை கூறினார்.

    இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக கோவை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், விசாரணை நடத்தி பெண்ணை கற்பழிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

    ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் பெண்ணை தனியாக அழைத்து பேராசிரியர் கற்பழிக்க முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறது.
    • அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர்.

    கோவை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி பல விமர்சனங்களை அண்மை காலங்களாக தெரிவித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியாகிய நான் அவரை பற்றி விமர்சனம் செய்வதாக, அவரது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் தெரிவித்துள்ளார்.

    ஏதோ நான் முதலமைச்சரை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், எதிர்கட்சி தலைவர் என்ற நிலையில் இருந்து நான் தவறுதலாக பேசுவதாக விமர்சனம் செய்திருக்கிறார்.

    மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், எப்படியெல்லாம் பேசினார் என்பது உங்களுக்கு தெரியும். குறிப்பாக என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக வர ஊர்ந்து பறந்து சென்றார் என விமர்சனம் செய்தார்.

    இப்படி முதலமைச்சர் தன்னுடைய பதவியை, நிலையை மறந்து தன்னை விமர்சிக்கிறார்.

    ஆனால் என்னை பொறுத்தவரைக்கும், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை எந்த ஒரு எதிர்கட்சியினரையும் தவறுதலாக விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் எங்களை பற்றி ஆளுங்கட்சியினரின் தவறுதலான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி அவ்வப்போது கொடுப்போம். அ.தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்ற தவறான கருத்தை முதலமைச்சர் தெரிவிக்கிறார். கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவே தி.மு.க. பல திட்டங்களை ஆமை வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர்.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று தெரிவிக்கிறார். எப்படியாவது இந்த ஆட்சியாளர்கள் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களை கோவைக்கு கொண்டு வந்தார். திட்டங்களை அறிவிக்கிறார். எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை. பணி தொடங்கவில்லை. பல மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு போகிறேன் என்கிறார். தி.மு.க ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. எந்த பணியும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில் எப்படி போய் ஆய்வு பணி மேற்கொள்ள முடியும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை அறிவித்து, பணி முடிந்ததும் நாங்கள் அதனை திறந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை தான் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதுதான் நிலைமை.

    2021 தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள் என நான் முதலமைச்சரிடம் கேள்வி கேட்டேன். அதற்கு முதலமைச்சர் பதில் சொல்லாமல், உதயநிதி பதில் சொல்கிறார். முதலமைச்சர் எங்கே போனார்.

    ஏற்கனவே நான் சொன்னபடி எல்லா மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் உதயநிதி பதில் சொல்லி கொண்டிருக்கிறார். முதலமைச்சர் சொல்ல வேண்டிய பதில் முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும். அதிகார மையங்கள் 4 இருக்கிறது. அது யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. அப்படி ஒரு முதலமைச்சர் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பிரச்சனை என்று சொன்னால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடையாது.

    அ.தி.மு.க. கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தல் வர ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது. அப்போது தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும். ஏற்கனவே ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என தெரிவித்துள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பதை நாங்கள் பலமுறை தெரிவித்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு முதலமைச்சர் தன்னுடைய பதவியை மறந்து, நிலையை மறந்து விமர்சனம் செய்யலாமா?
    • 6 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.

    கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்தவர் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    * முதல்வர் பதவி கிடைப்பதற்காக இபிஎஸ் ஊர்ந்து சென்றார். பறந்து சென்றார் என்றெல்லாம் என்னை கூறி உள்ளார்.

    * ஒரு முதலமைச்சர் தன்னுடைய பதவியை மறந்து, நிலையை மறந்து விமர்சனம் செய்யலாமா?

    * கொச்சைப்படுத்தி பேசியதாக முதலமைச்சர் விமர்சனம் செய்கிறார்.

    * தவறாக விமர்சனம் செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

    * அதிமுகவை பொறுத்தவரையில் எந்த எதிர்க்கட்சியினரையும் தவறுதலாக பேசியதில்லை. எங்களை பேசினால் தக்க பதிலடி தருவோம்.

    * 6 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.

    * அதிமுக ஆட்சியில் 85% நிறைவடைந்த அத்திக்கடவு-அவிநாசி பணி திமுக ஆட்சியில் கிடப்பில் போடப்படுகிறது.

    * அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே முடக்கி வைத்துள்ளது.

    * அதிமுக ஆட்சியின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது திமுக அரசு என்று அவர் கூறினார்.

    • சாரல் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
    • கடும் குளிர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் வெயில் வறுத்தெடுத்தாலும், மாலைக்கு பிறகு இதமான காலநிலைக்கு மாறி விடுகிறது.

    இன்று காலை முதலே கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன்பாளையம், அவினாசி சாலை, ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால், காந்திபுரம், காந்திபார்க், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மேக மூட்டம் நிலவியது.

    மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது. காலையில் வெயில் தெரியாத அளவுக்கு மேகமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

    கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சூலூர், சுல்தான்பேட்டை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இதமான காலநிலை நிலவுகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலும், இரவில் கடும் நீர் பனிப்பொழிவு பொழிவும் காணப்பட்டது.

    இந்நிலையில் குன்னூர், அருவங்காடு, வெல்லிங்டன், காட்டேரி,சேலாஸ், எடப்பள்ளி, வண்டிச்சோலை, சிம்ஸ் பூங்கா, கொலகம்பை, குன்னக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு நீர் பனி காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே மேகமூட்டம் அதிகரித்துடன் பரவலான சாரல் மழையும் பெய்தது.

    இந்த திடீர் சாரல் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடும் குளிர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

    அத்தியாவசிய தேவைகளுக்கு வருபவர்கள் சுவர்ட்டர் அணிந்தபடியே வெளியில் வந்தனர். கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடும் மேகமூட்டம் நிலவுவதால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனத்தில் பயணிக்கிறார்கள்.

    • பணத்துக்கு ஆசைப்பட்டு தாயாரும் தனது மகளை விபசாரத்தில் தள்ளினார்.
    • விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டை ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்து இருந்தனர். எப்போதும் அவர்கள் அந்த வீட்டில் தங்கியிருப்பது இல்லை. சுற்றுலாவுக்கு வருவது போல் அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து சென்றனர்.

    அப்படி வரும்போதும் பெண்களுடன் புது, புது ஆண்கள் வந்து சென்றனர். இதனால் அக்கம்பக்கத்தினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவத்தன்று அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அங்கு 2 பெண்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் தாயும், மகளும் என தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.

    இவர்கள் சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் வசித்து வந்துள்ளனர். தாயாருக்கு 42 வயதாகிறது. கணவரை பிரிந்த அவர் வேறு ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள், தனது கணவரை பிரிந்து தாயாரின் தயவை தேடி வந்தார். தாயார், அவரது 2-வது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது கணவரை பிரிந்து வந்த மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கலாம் என அவரது தாயாரிடம் 2-வது கணவர் ஆசைவார்த்தை கூறி உள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு தாயாரும் தனது மகளை விபசாரத்தில் தள்ளினார்.

    ஊரில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீடு எடுத்து அங்கு விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 2-வது கணவர் புரோக்கராக இருந்து ஆள்பிடித்து வந்துள்ளார். அப்படி வாடிக்கையாளர் யாராவது சிக்கினால் தாயுக்கும், மகளுக்கும் தகவல் தெரிவித்து அவர்களை கிருஷ்ணாபுரம் வீட்டுக்கு வரச் செய்வாராம். அங்கு குடும்ப பெண்கள் போல் தாயும், மகளும் சென்றுள்ளனர். பின்னர் அந்த வீட்டில் மகளை அந்த பெண் விபசாரத்தில் தள்ளியுள்ளார். அதில் அதிக பணம் கிடைக்கவே அதனையே அவர்கள் தொழிலாக மாற்றி செய்து வந்துள்ளனர்.

    தற்போது அக்கம் பக்கத்தினர் புகாரால் போலீசில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் தாயாரையும், அவரது 2-வது கணவரையும் போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
    • சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

    Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

    அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகள், ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

    • நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நோயாளிகளிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை வழங்குமாறும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும் படியும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து, கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திப்பதாக கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அப்போது மேஜையில் தமிழக வெற்றிக்கழகத்தின் வண்ணத்திலான போர்வை போர்த்தப்பட்டு இருந்தது.

    இதனை அடுத்து அப்போர்வை அகற்றப்பட்டு மாற்று போர்வை மேஜை மீது போர்த்தப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

    ×