என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
    • ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆங்கிலோ இந்தியனான இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.

    பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் 2 பேரும், கடந்த 23-ந்தேதி மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதே நேரத்தில் ஓட்டல் அறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    இந்தநிலையில், ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

    போலீசாரை பார்த்ததும் தாங்கள் வந்த மோட்டர்சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததில் ரவுடிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார்.
    • ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42), லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறித்ததாக கவிதா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்று வந்த பின்னர் அவருக்கு பலருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சிவக்குமார் கண்டித்தும், கவிதா கேட்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று கவிதா, கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்த நிலையில் கவிதா வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 23-ந்தேதி கோவை கோர்ட்டுக்கு ஆஜராக வந்தார். இதனை அறிந்த சிவக்குமாரும் அங்கு வந்தார். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் கவிதாவை பார்த்த, சிவக்குமார் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து கவிதா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்த கவிதா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    திராவகம் வீச்சில் 85 சதவீதம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கவிதாவுக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சுமார் ஒரு மாதமாக கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

    திராவகம் வீச்சில் காயமடைந்த கவிதா இறந்துவிட்டதால், கொலை முயற்சி வழக்கை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.
    • கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    கோவை:

    கோவை பந்தய சாலையில் உள்ள மத்திய மண்டலம் அருகே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு இளநீர் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. அந்தளவு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. அமைதி பூங்கா என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம் தற்போது அந்த நிலைமையில் இருந்து மாறி சென்று வருகிறது.

    தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என மக்கள் நீதிமய்யம் கட்சியை ஆரம்பித்த கமல், அதனை விட்டு தற்போது விலகி செல்வது போல் தெரிகிறது.

    மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறிய அவர்கள் தற்போது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் திகழ்ந்து வருகிறார்.

    பா.ஜ.கவை பொறுத்தவரை கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். கர்நாடகாவில் பா.ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    பா.ஜ.கவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். இதனால் பாதிப்பு என்பது இல்லை.

    கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்து விட்டார். இனி இதுபற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2050-க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
    • கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு இன்று கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு தானியங்கி மஞ்சப்பை மற்றும் துணிப்பை விற்பனை எந்திரத்தை தொடங்கி வைத்து பைகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2050-க்குள் கார்பன் சமநிலை என்ற அடிப்படையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் மரங்களை நட, போக்குவரத்துகளில் ஏற்படக்கூடிய கார்பன் குறைப்பு, நீர் நிலைகளை பாதுகாப்பது ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கமானது கார்பன் நியூட்ரல் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.கோவையில் இதுவரை 10 லட்சம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு இதனை அதிகப்படுத்த உள்ளோம். கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 10 கோடி மரங்கள் நடவு செய்யப்படும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

    வெளிநாட்டு மரங்களை நடவு செய்வதால் எந்த பயனும் இல்லை. நாட்டு மரங்கள்தான் நடவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளோம். அதனை மீறி வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் அதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார். மரங்களை நடவு செய்வது மட்டும் முக்கியமில்லை. நட்ட மரங்களை தொடர்ந்து வளர்க்க வேண்டும். 2050-ம் ஆண்டுக்குள் கோவை கார்பன் இல்லாத மாவட்டமாக உருவாக்கப்படும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதலின் படி இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, வானதிசீனிவாசன் எம்.எல்.ஏ, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை,

    கோவை நகரில் ரவுடி கும்பலுக்குள் நடந்த மோதலில் சத்திய பாண்டி என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். கோர்ட்டு அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காமராஜர்புரம் கவுதம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

    போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்து ரவுடி கும்பல் வெளிமாநிலங்களுக்கு சென்று பதுங்கி உள்ளது. இதனையடுத்து அவர்களை பிடிப்பதற்கு கோவையிலிருந்து போலீஸ் உதவி கமிஷனர் கணேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூருக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது பெங்களூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது கோவையை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்புடைய சுஜிமோகன் என்பவர் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே ஓடினார். அந்த வீடியோவில் எனது கை, கால்கள் நன்றாக உள்ளது. ஆனால் போலீசார் இன்று என்னை பிடித்து விடுவார்கள் என வீடியோ பதிவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் அவரை விரட்டி சென்று பிடித்தனர்.

    இதையடுத்து மற்ற 3 பேரும் அங்கு இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்தபோது அவர்களும் ஓட முயற்சி செய்தனர்.

    இதனையடுத்து போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை அவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள் 3 பேரும் கோவை ரவுடிகள் கும்பலை சேர்ந்த புள்ளி பிரவீன், பிரசாந்த் மற்றும் அமர்நாத் என தெரியவந்தது.

    இதனை அடுத்து கைதான 4 பேரையும் போலீசார் பெங்களூரில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் அவர்களை கோவை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர்.
    • பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி விட்டது.

    கண்ணன் கேரள மாநிலம் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை கண்ணன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று விட்டார். இன்று காலை கண்ணனின் வீடு திறந்து கிடப்பதை அருகே வசித்து வருவர்கள் பார்த்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து உடனடியாக கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான கண்ணன், சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தததும் வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தன. இவர்கள் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும் போலீசின் விசாரணையில் கண்டுபிடிக்க ப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. கொள்ளையன் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இதனை தூவி சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராவில் ஏதாவது காட்சிகள் பதிவாகி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு அதற்கன சர்வரும் திருடப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை ஆய்வு செய்து, அதில் கொள்ளையன் உருவம் பதிவாகி இருக்கிறதா என்பதை பார்த்து வருகின்றனர்.

    மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் உள்ள தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சகாயமேரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்.

    கோவை துடியலூர் முத்துநகர் 5-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. பெயின்டர்.

    இவரது மனைவி சகாயமேரி (52). தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 3 பெண்கள் உள்ளனர். இவர்கள் அைனவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    சம்பவத்தன்று அந்தோணிசாமி தனது மனைவி சகாயமேரியுடன் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். இவர்களது மோட்டார் சைக்கிள் மேட்டுப்பாளையம் சாலை விசுவநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த சகாயமேரி தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சகாயமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

    சூலூர்,

    சூலூர் அருகே நீலாம்பூரில் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்க பாதுகாப்பு பேரமைப்பு, சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர் தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுதும் அங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு வாகனத்திற்கு இவ்வளவு என நிர்ணயித்து லஞ்சத் தொகை கேட்கின்றனர்.

    இந்த லஞ்ச நடவடிக்கையை ஒழிக்க வேண்டும். நீலம்பூர் எல்என்டி புறவழி சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்பட 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில், சமூக நீதி தொழிலாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த நந்தகுமார், ஓட்டுநர் உரிமைக்குரல் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிறுமியின் தாய் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போக்சோ சட்டத்தில் சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவை அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் இவர் தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்தார்.

    52 வயதான பெரியப்பாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், தனியார் மில்லில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த சிறுமியின் பெரியப்பா திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். சிறுமி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனால் அவர் தனது தம்பி மகள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். பின்னர் சிறுமியிடம், நடந்ததை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி அங்கிருந்து சென்றார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி அவரது வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அவரது தாயிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதார். அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் பெரியப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர் என தெரிவித்தனர்.
    • 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    கோவை,

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் ராமசாமி லே-அவுட் ரோடு வழியாக வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த 2 பெண்கள் அந்த வாலிபரிடம் எங்களிடம் அழகான இளம் பெண்கள் உள்ளனர். பணம் கொடுத்தால் நீங்கள் உல்லாசம் அனுபவிக்கலாம். போலீஸ் தொந்தரவு இருக்காது என்றனர்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 4 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார புரோக்கர்களான சூலூரை சேர்ந்த நிர்மலா (வயது 49), திருப்பூர் அருகே சோமனூரை சேர்ந்த சப்னா என்ற சத்யா (30) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என குறிப்பிட த்தக்கது.

    பின்னர் அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார்.
    • கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியான பா.ஜனதா, எதிர்கட்சியான காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    தேர்தலுக்கு 11 நாட்களே உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் கர்நாடகத்துக்கு சென்று தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றது, டெல்லியில் அவருடன் ஒரு மணி நேரம் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியது, ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தது என பல்வேறு செயல்கள் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும், கர்நாடக தலைவரும் கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கேட்டு கொண்டதாகவும், இதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

    இப்படிப்பட்ட சூழலில் தான் கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கமல்ஹசானை தொடர்பு கொண்டு கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதுதொடர்பாக கோவையில் நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், ராகுல்காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க காங்கிரசுக்கு ஆதரவாக தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது அவர் வருகிற மே முதல் வாரத்தில் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்வார். இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் அவர் எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது தெரியவரும் என தெரிவித்தனர்.

    காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதிமய்யம் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • காரை ஹானஸ்ட்ராஜின் உறவினரான சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
    • விபத்து குறித்து மேலூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலூர்:

    சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள பி.பி.நகரை சேர்ந்தவர் ஜான் தங்கராஜ். இவரது மகன் ஹானஸ்ட்ராஜ் (வயது29). இவரது மனைவி பவானி (27). இவர்களுக்கு பத்து மாதத்தில் மகிழ் என்ற பெண் குழந்தை உள்ளது. ஹானஸ்ட்ராஜ் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர்களது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக ஹானஸ்ட்ராஜ் தனது மனைவி, குழந்தை, தாய் ஜெயராணி (47) ஆகியோரை அழைத்து கொண்டு சமீபத்தில் வாங்கிய புதிய காரில் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு வந்துள்ளார்.

    காரை ஹானஸ்ட்ராஜின் உறவினரான சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர்களது கார் திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியில் இன்று காலை 7 மணியளவில் வந்து கொண்டிருந்தது.

    சூரக்குண்டு பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வாகனங்கள் அருகே உள்ள சாலை வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் பாலம் கட்டும் பணி நடக்கும் இடத்தில் முறையான அறிவிப்பு பலகை மற்றும் தடுப்புகள் எதுவும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஹானஸ்ட்ராஜ் குடும்பத்தினர் வந்த கார் அந்த வழியாக இன்று காலை வந்தது. அவர்களது கார் திடீரென சாலையின் பக்கவாட்டில் இருந்து தடுப்பு சுவரில் மோதி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பவானி மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்கள் இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் ஹானஸ்ட்ராஜ், அவரது 10 மாத குழந்தை மற்றும் அவருடைய தாய் ஆகிய 3 பேரும் காரின் பின் பகுதியில் இருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×