search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் மே முதல் வாரம் பிரசாரம்
    X

    ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் மே முதல் வாரம் பிரசாரம்

    • அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார்.
    • கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை:

    224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கட்சியான பா.ஜனதா, எதிர்கட்சியான காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    தேர்தலுக்கு 11 நாட்களே உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

    இதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மாநிலம் முழுவதும் சென்று காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் உள்ள பா.ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களும் கர்நாடகத்துக்கு சென்று தங்கள் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மைக்காலங்களாகவே மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியுடன் மிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றது, டெல்லியில் அவருடன் ஒரு மணி நேரம் இந்திய மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியது, ஈரோடு கிழக்கு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்தது என பல்வேறு செயல்கள் மூலம் அவர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்திருப்பது தெரிய வருகிறது.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் ஆதரவு அளித்தது மட்டுமல்லாமல், அந்த கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும், கர்நாடக தலைவரும் கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கேட்டு கொண்டதாகவும், இதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

    இப்படிப்பட்ட சூழலில் தான் கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக மே முதல் வாரத்தில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஆகியோர் கமல்ஹசானை தொடர்பு கொண்டு கர்நாடக தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதுதொடர்பாக கோவையில் நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், ராகுல்காந்தி கேட்டு கொண்டதற்கு இணங்க காங்கிரசுக்கு ஆதரவாக தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

    தற்போது அவர் வருகிற மே முதல் வாரத்தில் கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்வார். இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, கமல்ஹாசனின் சுற்றுப்பயண விவரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன்பின்னர் அவர் எந்த தேதியில் பிரசாரம் மேற்கொள்வார் என்பது தெரியவரும் என தெரிவித்தனர்.

    காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதன் மூலம் மக்கள் நீதிமய்யம் பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் இணைந்து பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×