என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார்.
    • சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை சேர்ந்த 29 வயது மருத்துவ பிரதிநிதிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 வயது சிறுமி நீண்டநேரமாக அழுதுகொண்டே இருந்து உள்ளது. இதை பார்த்த தாய் அந்த குழந்தையிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்று கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த குழந்தை இல்லை என்று தலையை ஆட்டியுள்ளது. ஆனாலும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். இதையடுத்து அந்த தாய், குழந்தையை பரிசோதனை செய்த போது காயம் இருந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் அந்த குழந்தை வலிதாங்க முடியாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது தந்தையே தனது 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியின் தந்தையான மருத்துவ பிரதிநிதி மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். கோவையில் 2 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது.
    • தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள விவசாயிகள் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடியில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக வடக்கிபாளையம், புரவிபாளையம், ஜமீன்காளியாபுரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூார்புதூர் ஆகிய பகுதிகளில் தக்காளி செடிகள் பெருமளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் தற்போது தக்காளி பழத்தின் விலை பெருமளவு அதிகரித்து உள்ளது. எனவே பொள்ளாச்சி தாலுகா விவசாயிகள் தக்காளி சாகுபடியில் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கோடை மழை தொடங்கியதை முன்னிட்டு விவசாயிகள் கடந்த மே மாதம் முதல் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். அவை தற்போது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

    இந்நிலையில் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன்காரணமாக அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    பொள்ளாச்சி பகுதியில் பருவமழை பெய்து வருவதால் அங்கு உள்ள தோட்டங்களில் தக்காளி செடிகள் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் கீழே சாய்ந்து வருகின்றன. தக்காளி பழங்களும் செடியில் இருந்து உதிர்ந்து கீழே விழுந்து அழுகி நாசமாகி வருகின்றன.

    எனவே பொள்ளாச்சி தோட்டங்களில் விளையும் தக்காளி பயிர்களை பாது காப்பது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்கு உள்ள தோட்ட ங்களில் செடிகளு க்கு இடையே நீண்ட கம்பிகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் அங்கு வளரும் செடிகள் மழையில் சரிந்து விழுவதை தடுக்க முடியும். தக்காளி பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்து அழுகி வீணாவதையும் தடுக்க இயலும்.

    பொள்ளாச்சி தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தக்காளி தோட்டங்களில் செடிக ளுக்கு கம்பி கட்டும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் தற்போது நாட்டு தக்காளி சாகுபடி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அங்கு செடிகள் முளைத்து காய் காய்க்க தொடங்கி உள்ளன. அவை பழங்களாக கனிவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.

    எனவே பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நாட்டு தக்காளிவரத்து மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் அங்கு உள்ள காய்கறி சந்தைகளில் தற்போது தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 ஆக அதிகரித்து உள்ளது. அங்கு 14 கிலோ அடங்கிய பெட்டி, ரூ.1400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சியில் தக்காளி சாகுபடி பெரியளவில் தொடங்கவில்லை. எனவே மார்க்கெட்டுக்கு வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால் காய்கறி சந்தைகளில் நாட்டு தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடை பணிகள் தொடங்கினால் மார்க்கெட்டுக்கு வரத்து கூடுதலாக இருக்கும். அப்போது தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று காய்கறி சந்தை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சரவணம்பட்டி:

    கோவை சரவணம்பட்டியில் தனியார் பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த சுகிர்தா (35) என்பவர் வார்டனாக பணியாற்றி வந்தார். கடந்த 2020-ல் கொரோனா ஊரடங்கால் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். சுகிர்தாவும் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

    அதன்பின்னர் சில மாதங்கள் கழித்து சுகிர்தா விடுதிக்கு வந்து மீண்டும் பணியில் சேர்ந்து கொண்டார். அப்போது உரிமையாளர் அவரிடம் முந்தைய வரவு, செலவு கணக்குகளை கூறுமாறு தெரிவித்தார். அதற்கு அவர் எதுவும் கூறவில்லை.

    பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே சுகிர்தா, தனது சித்தி இறந்துவிட்டதாகவும், ஊருக்கு சென்று வருவதாகவும் கூறி விட்டு சென்றார்.

    தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி ஹாஸ்டல் உரிமையாளர் ஒரு விடுதியில் உள்ள அறைகளை சுத்தம் செய்வதற்காக திறந்து பார்த்த போது பெரும்பாலான அறைகள் காலியாக இருந்துள்ளது. மேலும் ஊரடங்கு சமயத்தில் தங்கி இருந்த பெண்கள் விட்டுச் சென்ற உடைமைகள் அனைத்தும் காணாமல் போய் இருந்தது. சுகிர்தாவை, உரிமையாளர் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பை துண்டித்து வந்துள்ளார். சில நாட்கள் கழித்து சுகிர்தாவின் கள்ளக்காதலன் பிரபு என்பவர் விடுதி உரிமையாளருக்கு செல்போன் மூலம் அழைத்து விடுதியின் வரவு செலவு கணக்குகளை கேட்டால் ஆள் வைத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

    இதை தொடர்ந்து விடுதி உரிமையாளர் தங்கியிருந்த பெண்களின் விண்ணப்ப படிவங்களை எடுத்து பார்த்த போது அதில் இருந்த செல்போன் எண்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விடுதி உரிமையாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஏராளமான பெண்களை தங்க வைத்து கட்டணம் அதிகம் பெற்றுள்ளதும், பெற்ற தொகைக்கு ரசீது ஏதும் வழங்காமல் ஜி பே மூலம் சுகிர்தா கட்டணத்தை முழுமையாக தனது வங்கி கணக்கிற்கு செலுத்தி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ.31 லட்சம் மோசடி செய்யப்பட்டிருந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிலிருந்து காட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது தெரிய வந்தது.

    தொடர்ந்து விடுதி உரிமையாளர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலர்களான பிரபு, ஜெயகுமார் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலன் பிரபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுகிர்தா மற்றும் ஜெயகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று பதுங்கி இருந்த சுகிர்தா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட சுகிர்தா குறித்த திருக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுகிர்தாவுக்கு ஏற்கனவே நெல்லையை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சுகிர்தா தனது கணவருடன் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்தார்.

    அப்போது அவர்களது வீட்டின் அருகில் வசித்து வந்த பிரபுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. தனது கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் சுகிர்தா, பிரபுவை அழைத்து தனிமையில் ஜாலியாக இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து நகை மற்றும் பணத்துடன் வெளியேறினர். அப்போது சுகிர்தா தனது 5 வயது மகனையும் அழைத்து சென்றார்.

    இதை பார்த்த கள்ளக்காதலன் பிரபு மகனை எதற்கு அழைத்து வந்தாய் என கேட்கவே மகனின் சட்டை பாக்கெட்டில் கணவரின் பெயர் மற்றும் முகவரியை எழுதி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சுகிர்தா தலைமறைவானார்.

    கள்ளக்காதலனுடன் வெளியேறிய சுகிர்தா பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றிவிட்டு மீண்டும் கோவை சரவணம்பட்டி பகுதிக்கு வந்து விடுதியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு ஜெயக்குமாருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுகிர்தா பணிபுரிந்த மகளிர் விடுதியில் ரூ.31 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு கள்ளக்காதலர்களுடன் தலைமறைவானதும் தெரியவந்தது. தற்போது போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாமிநாதன் முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தி அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார்.
    • ஏமாற்றமடைந்த சாமிநாதன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை சின்னியம்பா ளையம் பி.எல்.எஸ் நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(30).

    இவருக்கு சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இதனையடுத்து அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சாமிநாதன் தனது விவரங்களை பதிவு செய்தார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட ஒருவர் தன்னை கார்த்திகா என அறிமுகம் செய்து கொண்டார்.

    மேலும் தங்களது நிறுவனத்தில் இணையதளத்தை பின்பற்றி அதில் உணவு சம்பந்தமாக ரிவ்யூ கொடுத்தால் அதிக கமிஷன் கிடைக்கும் எனவும் சிறிது முதலீடு செய்தால் போதும் எனவும் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய சாமிநாதன் முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் செலுத்தி அவர்கள் கொடுத்த பணிகளை முடித்து கொடுத்தார். அதற்கு அவருக்கு சிறிதளவு கமிஷன் தொகை கிடைத்தது.

    பின்னர் சாமிநாதனை தொடர்பு கொண்ட கார்த்திகா அதிகளவில் முதலீடு செய்தால் அதிகமான தொகை லாபமாக கிடைக்கும் என தெரிவித்தார். இதனையடுத்து சாமிநாதன் சிறிது, சிறிதாக அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ. 10,65,118 அனுப்பினார். ஆனால் அதன்பின்னர் சாமிநாதனுக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை.

    அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மொத்தமாக ரூ. 10.65 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த சாமிநாதன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரும்புகை-மூச்சுத்திணறலால் மக்கள் அவதி அடைந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஏராளமான பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அங்கு சேகரமாகும் குப்பைகள் சிறுமுகை மின்வாரிய பவர் ஹவுஸ் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அந்த குப்பை தொட்டியில் நேற்று காலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். கார் உதிரிபாக கழிவு என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்து பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் சிறுமுகை ரோட்டில் கார் உதிரி பாகங்களின் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதால் தீ எளிதில் பரவி புகை மூட்டம் ஏற்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்சென்று அதனை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
    • யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார்.

    சூலூர்,

    கோவையில் போலீசாருக்கு கடும் பணிச்சுமை உள்ளது. இதனால் அவர்களுக்கு சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே கோவை மாவட்டத்தில் போலீசாருக்கு வாரம் ஒரு நாளில் யோகா பயிற்சி வழங்குவது என்று போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் முடிவு செய்தார்.

    இதன் ஒரு பகுதியாக சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அப்போது யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார். இதனை போலீசார் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்த நிலையில் எங்களுக்கு இந்த யோகா பயிற்சி மனதுடன் உடலையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது என்று தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் போலீசார் மத்தியில் யோகா பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் யோகா பயிற்சி அளிப்பது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு, கருமத்தம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
    • குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

    கருமத்தம்பட்டி,

    கோவை கணியூர் கரவளி மாதப்பூர் ரோடு குருலட்சுமி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜ். இவரது மனைவி ஜெனிமா (வயது23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது ஜெனிமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரது குடும்பத்தினர் அவரை கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு கடந்த 21-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் கழித்து, ஜெனிமா தனது குழந்தையுடன் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று காலை குழந்தைக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு, கருமத்தம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து பெற்றோர் குழந்தையை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்தனர்.ஏற்கனவே ஒருமுறை ஜெனிமாவுக்கு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும், தற்போது மீண்டும் பெண் குழந்தை பிறந்து, பிறந்த 8 நாட்களிலேயே இறந்து விட்டது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
    • தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது.

    கோவை,

    கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆடி வெள்ளியை முன்னிட்டு இந்து அன்னையர் முன்னணி சார்பில் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி 1008 பெண்கள் பங்கேற்கும் அம்மன் மஞ்சள் நீர் அபிஷேக ஊர்வலம் பிரமாண்டமாக நடக்க உள்ளது. மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 10,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

    அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜைகள் ஆகியவை நடத்தப்படும். கோவை மாநகரில் நடக்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. இதில் இந்துமுன்னணியினரோடு பொதுமக்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொதுசெயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன், ஆனந்த், ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெகதீஷ்வரியை நகைக்கு ஆசைப்பட்டு யாராவது கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
    • அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் முழுவதையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர்.

    இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40). இவர்களுக்கு கார்த்திகா(16) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கார்த்திகா பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தார். அப்போது அறையில் ஜெகதீஷ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணவர் சக்கரவர்த்தியும் வீட்டிற்கு வந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்ட போது, அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது.

    மேலும் வீட்டில் இருந்த 5 முக்கால் பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அவரை நகைக்கு ஆசைப்பட்டு யாராவது கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர், ஜெகதீஷ்வரியை நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக ஜெகதீஷ்வரியை கொன்று விட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக இதனை அரங்கேற்றினரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.

    மேலும் கொலை நடப்பதற்கு முன்பு சக்கரவர்த்தியின் வீட்டிற்கு யாராவது வந்து சென்றனரா? என்பதை அறிய அவரது வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் முழுவதையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது சக்கரவர்த்தியின் வீட்டிற்குள் ஒரு நபர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. வீட்டிற்குள் சென்று 2 மணி நேரத்திற்கு பிறகே அந்த நபர் வீட்டை விட்டு வெளியில் வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

    இதனால் அந்த நபர் தான் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அவர்களுக்கு தெரிந்த நபராக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு நிலவுகிறது.

    இதையடுத்து அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜெகதீஷ்வரி கொலை தொடர்பாக அவரது கணவர் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றே சொல்கிறார். மேலும் ஜெகதீஷ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது அவரது மகள் தான் முதலில் பார்த்துள்ளார்.

    அவரிடம் விசாரணை நடத்தலாம் என்றால் அவர், தாய் பிணமாக கிடந்ததை பார்த்ததில் இருந்து அச்சத்திலேயே உள்ளார். அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளோம்.

    கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடையதாக ஒரு நபரை சந்தேகிக்கிறோம். அந்த நபரை நெருங்கி விட்டோம். இன்று மாலைக்குள் அவரை கைது செய்து விடுவோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த கொலையானது கள்ளக்காதல் விவகாரத்தில் முடிந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இருப்பினும் கொலையாளி பிடிபட்ட பின்னரே கொலைக்கான காரணம் என்னவென்பது தெரியவரும்.

    • வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.
    • ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    மேட்டுப்பாளையம்,

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29ந்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்லார் புதூர் உண்டு,உறை விடப்பள்ளியில் வனத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

    மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக ஜோசப் ஸ்டாலின் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனவர் முனியாண்டி, பள்ளி நிர்வாகி ஷ்யாம் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் 23 வயது வாலிபர்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டதாக தெரிகிறது. அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வாலிபர் சிறுமியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி வாலிபர், சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் அங்குள் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    அப்போது வாலிபர் பலமுறை சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி என்பதால் சம்பவம் குறித்து பொள்ளாச்சி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாலிபர் சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் சென்ற ஒரு பஸ்சில் 21 பேர் பயணித்தனர்.
    • சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.

    கோவை,

    கோவை ஆர்.டி.ஓ அலுவலக பிரதான சாலையில் ஒரு பஸ் வேகமாக வந்தது. அதில் 21 பேர் பயணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. எனவே அந்த பஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பயணிகள் காயம் அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் மின்னல் வேகத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இதன்ஒருபகுதியாக படுகாயத்துடன் இருந்த 12 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.

    கோவை ஆர்.டி.ஓ பிரதான சாலையில் விபத்து பற்றி தெரிய வந்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு சாலை விபத்து ஒத்திகை பயிற்சி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் நிம்மதி பெருமூச்சுடன் கலைந்து சென்றனர்.

    ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய விபத்து ஒத்திகை சோதனையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட பலர் நேரடியாக பங்கேற்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் சாலைவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்தோம். இதற்காக 21 பேர் பயணிகள் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் ஒரு பஸ்சில் அமர வைக்கப்பட்டு மின்கம்பத்தில் மோதுவது போல ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது.

    கோவையில் விபத்து ஏற்படும்போது பொது மக்கள் எப்படி செயல்பட வேண்டும், படுகாயம் அடைந்த வருக்கான முதலுதவி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் ஆகியவை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் போலீசார் அறியும்வகையில் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டதாக தெரி வித்தனர்.

    ×