என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்காக ரூ.13.75 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    கோவை, ஜூலை.31-

    கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் இன்று மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 வார்டு பகுதியில் உள்ள அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத குடிசை பகுதிகள் தவிர்த்து, சில பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு தற்போது பொது குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

    இந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வருவாய் அல்லாத குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. ஆகையால் பொது குழாய்கள் மற்றும் லாரி மூலம் வழங்கப்படும் குடிநீரை பெருமளவு குறைக்க இப்பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புதாரர்கள் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கினால் இதனால் பெறப்படும் குடிநீர் கட்டணத் தொகை மூலம் மாநகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.

    எனவே கோவை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்பிருந்த பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத குடிசைப்பகுதிகளில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புரணமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கான வைப்பு தொகை விலக்கு அளிக்கப்பட்டு, குறைந்தபட்ச சேவை கட்டணமாக ரூ.250 மட்டும் செலுத்தினால் வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதே போல் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியை ரூ.4.84 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றுவதற்காக ரூ.13.75 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் பல்வேறு சாலை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 86-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 50 ஆயிரத்து க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மரணம் அடையக்கூடிய இஸ்லாமி யர்களை அடக்கம் செய்வத ற்கென்று ஒரு பொதுவான இஸ்லாமிய அடக்கஸ்தலம் இதுவரையிலும் இல்லை.

    இப்பகுதியில் மரணிப்பவர்களை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பொது அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு 86-வது வார்டுக்கு உட்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்களில் இஸ்லாமியர்களுக்கு பொது அடக்கஸ்தலம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    கோவை மாநகரில் நாள்தோறும் உருவாகும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்படுவதாலும், பொதுமக்கள் மற்றும் பொது சுகாதார நலன் கருதி திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த நகராட்சி நிர்வாக இயக்குனர் கடிதத்தில் குறிப்பிடபட்டது போல் உத்தரவுகள் இப்பணிக்காக மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கடந்த கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு மேயர் அவர்களால் முன் அனுமதி பெறப்பட்டு பணி உத்தரவு வழங்க ப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ரூ.170 கோடி தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்ப ட்டது.இதுபோன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் கண்டிப்பாக தினமும் காலை மற்றும் மதியம் என 2 முறை குடிநீர் விநியோகம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பொது குழாய்கள் அகற்றப்படாது. தெரு விளக்குகள் பராமரிப்பில் அதிகம் கவனம் செலுத்தப்படும்," என்றார்.

    • கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
    • பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர்.

    கோவை, ஜூலை.31-

    கோவை செல்வபுரம் திருநகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது50). நகைக்கடை அதிபர்.

    இவர் பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை செல்வ புரம் அசோக்நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக்கடை நடத்தி வருகிறேன்.

    நானும் கோவை வைசியாள் வீதியில் தங்க நகை சீட்டு ஏல கம்பெனி நடத்தி வரும் மகேஷ்பாபு(55) என்பவரும் 30 ஆண்டுகளாக நண்பர்களாக பழகிவந்தோம்.

    இதனை தொடர்ந்து அவரது மகளுக்கு கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது மகேஷ்பாபு என்னிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். ரூ.100 க்கு 1 ரூபாய் வட்டி செலுத்தி வந்தார்.

    இதற்கிடையே மகேஷ்பாபு என்னிடம், நான் நடத்தி வரும் தங்க நகை ஏல சீட்டில் நல்ல லாபம் வருவதாகவும், நீயும் அதில் சேருமாறு கூறினார். இதனை உண்மை என நம்பி நான் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021-ம் ஆண்டு வரை அவரது ஏல சீட்டு கம்பெனியில் தங்கம் கொடுத்து வந்தேன்.

    மாத, மாதம் 80 கிராம், 85 கிராம் வீதம் 1756 கிராம் சொக்க தங்கத்தை கொடுத்தேன். அதன் பின்னர் மகேஷ்பாபு லாபத்துடன் சேர்த்து 1900 கிராம் தங்கம் தருவதாக உறுதியளித்தார்.

    ஆனால் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும், கடனாக பெற்ற ரூ.15 லட்சம் மற்றும் 1900 கிராம் தங்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் தங்கத்தை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில், பெரிய கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேஷ்பாபு ரூ. 1.30 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் பணத்தை சிவக்குமாரிடம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேஷ்பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே உள்ளனர்.

    கோவை,

    கோவையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவையில் உள்ள குளங்கள் எல்லாம் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

    விடுமுைற நாட்களில் பூங்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் தற்போது மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளுக்கும் சென்று வருகின்றனர். அந்தளவுக்கு மாநகரில் உள்ள உக்கடம் குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய குளங்கள் மின் விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு, அழகுபட காட்சியளிப்பதால் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழ்கிறது.

    விடுமுறை தினங்களில் இந்த குளங்களில் பொதுமக்க ளின் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் காணப்படும். குறிப்பாக முத்தண்ணன் குளத்தின் பொலிவை காண பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வார த்தின் இறுதி நாட்களில் குவிந்து வருகிறார்கள்.

    பகல் முழுவதும் வேலை வேலை என்று தனது தொழிலில் கவனம் செலுத்தி விட்டு , மாலையில் வீடு திரும்பும் குடும்பத் தலைவ ர்கள், மாலை நேரத்தில் தனது குடும்ப த்தோடு எங்காவது சென்று பொழுதை கழிக்க விரும்புவது வழக்கம் தான். அப்படி தினமும் முத்தண்ணன் குளக்கரையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்தண்ணன் குளக்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்கு என ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இங்கு குடும்பத்தோடு வரும் குழந்தைகள் அதில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தரைகள் பச்சை பசேர் என்று புல்வெளியுடன் காட்சி அளிக்கிறது. மாலைநேரத்தில் இங்கு குவியும் பொதுமக்கள் அங்கு தங்கள் குடும்பத்தினருடன் புல்தரையில் அமர்ந்து பேசி தங்கள் மாலைபொழுதை அழகாக கழித்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் பொதுமக்களுக்கு என்று முறையான பார்க்கிங் வசதி கிடையாது. இதனால் இங்கு வருபர்கள் தங்கள் வாகனங்கள் குளத்தின் முன்பாக நிறுத்தி விட்டு செல்லும் நிலைமையை காணப்படுகிறது.

    அப்படி நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே செல்பவர்கள் திரும்பி வெளியே வந்து பார்க்கும்போது, இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு என பார்கிங் பெருகி விடுகிறது.

    இதனால் வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் அவர்கள் அவதியடைந்து வருகி ன்றனர். ஒரு சிலர் தனது இருசக்கர வாகனத்தை எப்படியாவது எடுத்திட வேண்டும் என்று கருதி, பின்னால் இருக்கும் வாகனத்தை உருட்டி தாறுமாறாக நடுரோட்டில் விட்டு விடுகின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் தினமும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக உள்ளே செல்போர்களுக்கும் இது இடையூறாக உள்ளது.

    இதுகுறித்து குளக்கரைக்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி இந்த குளக்கரையை மிகவும் அழகுபடுத்தி பொலிவு பெற செய்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எங்களுக்கு இந்த குளக்கரை மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனாலும் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே இந்த பகுதியில் பார்க்கிங் வசதி செய்து கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுக்கும்போது, வாகனத்தை நிறுத்தும் போதும் அல்லது வாகனத்தை எடுக்கும் போதும் ஏற்படும் கூச்சல் குழப்பத்தை தவிர்க்க முடியும்.மேலும் இங்கு வரும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே ஓரமாக உட்கார்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இது இங்கு குழந்தைகளுடன் வரக்கூடிய பொதுமக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

    பரந்து விரிந்த முத்தண்ணன் குளத்தின் ஒரு பகுதியானது கோவை தடாகம் ரோட்டிலும், மற்றொரு பகுதியானது சொக்கம்புதூர் செல்லும் சாலையிலும் உள்ளது. தடாகம் சாலையில் உள்ள குளக்கரையின் பகுதியில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி வழியும். பெரியவர்கள் குடும்பம் குடும்பமாக சின்ன குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆங்காங்கே திரியும் காட்சியை காண முடியும். ஆனால் சொக்கம்புதூர் செல்லும் சாலையில் உள்ள குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே அதிகளவில் குவிகின்றனர்.

    அந்த பகுதி சற்று இருள் நிறைந்த பகுதி என்பதால் காதல் ஜோடிகளுக்கும் அது ஏற்ற இடமாக மாறி விட்டது. இதனால் தினமும் அங்கு காதல் ஜோடிகளை பார்க்க முடியும். அவர்கள் காவலாளி நேரம் ஆகி விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினாலும் செல்வதே கிடையாது.

    அவர்களை வெளியே அனுப்புவதற்குள் அவர்களுக்கு போதும், போதும் என்றாகி விடும். அப்படியும் சிலர் மறைந்து இருந்து விட்டு, கதவை மூடிய பின்னர் வெளியில் வந்து திறந்து விட்டு செல்வதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகராட்சியின் இந்த அரிய முயற்சி மிகவும் வெற்றிகரமானதாகும்.

    இக்குளக்கரையானது கோவை வாழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமன்றி, மனம் மகிழ்ந்து உறவுகளை மேம்படுத்தும் ஒரு பாலமாக இது அமைகிறது. இங்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால், இங்கு வருகை தரும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது
    • போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி, சோமனூர் நெடுஞ்சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து சிறு சிறு விபத்துகள் நடந்து வருகின்றன.

    எனவே கிருஷ்ணாபுரம், கொங்கு வேளாளர் திருமண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடு சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி கருமத்தம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

    ஆனால் அவை கடந்த பல மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.இதனால் அந்த பகுதிகளில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தட்டிக் கேட்ட கணவரை இரும்பு கம்பியால் தாக்கியதால் பலத்த காயம் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் போலீசார் ரேசன்கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 46 வயது கூலித் தொழிலாளி. மூடை தூக்கும் தொழிலாளி. இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவிக்கு தற்போது 40 வயதாகிறது.

    18 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி கடந்த சில ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள 58 வயதான ரேசன்கடை ஊழியர் வீட்டிற்கு வேலைக்கு சென்றார்.

    அப்போது எனது மனைவிக்கும் ரேசன் கடை ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. இதனையடுத்து நான் எனது மனைவியை கண்டித்தேன்.

    இது குறித்து எனது மனைவி அவரது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார்.

    இதனால் எனக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று நான் வேலைக்கு சென்றுவிட்டு கணபதி மாமரதோட்டம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு வந்த ரேசன் கடை ஊழியர் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார்.

    அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் அங்கு இருந்த இரும்பு கம்பியால் என்னுடைய தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நான் சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே என்னை தாக்கிய ரேசன் கடை ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் ரேசன்கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அஜய் பரதன் ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார்
    • சுத்திக்கரிக்கப்படும் தண்ணீரை சி.ஆர்.பி.எப்.வளாகத்தில் உள்ள மரம், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்களின் சொந்த உபயோகத்துக்காக தினமும் சுமார் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் அங்கு உள்ள வளாகத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசியது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு பொல்யூசன் கண்ட்ரோல் போர்டு மற்றும் டி.ஆர்.டி.ஒ. அனுமதி பெற்று நிறுவனம் ஆகியவை சுமார் ரூ.2.16 கோடி மதிப்பில் கழிவு நீரை சுத்தப்படுத்தும் பயோ சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைத்து உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் துர்நாற்றம் துளியும் இன்றி 100 சதவிகிதம் கழிவு நீர் சுத்திகரிப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடியலூர் சி.ஆர்.பி.எப். போலீஸ் பயிற்சி கல்லூரி மைதானத்தில் அதிநவீன சுத்திகரிப்பு மையம் திறப்பு விழா நடந்தது.

    அப்போது பயிற்சி கல்லூரி ஐ.ஜி. அஜய் பரதன் ரிப்பன் வெட்டி சுத்திகரிப்பு மையத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் சுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் மதுரை சி.பி.டபுள்யூ. மூத்த பொறியாளர் பவன் குமார் குப்தா, மேக் நிறுவனர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், சி.ஆர்.பி.எப்.கமாண்டர் ராஜேஷ் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், துடியலூர் சுத்திகரிப்பு மையம் வாயிலாக ஒரு நாளைக்கு 400 கிலோ லிட்டர் அளவில் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த தண்ணீரை சி.ஆர்.பி.எப்.வளாகத்தில் உள்ள மரம், செடிகள், பூங்காக்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.

    • மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிட அரசாணையைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • சிறப்புத் தீர்மானம் மேயரால் முன்மொழியப்பட்டு 100-வது மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயனால் வழிமொழியப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    அந்த தீர்மானத்தில், உள்ளாட்சியிலும் நல்லாட்சி நடைபெறவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் சேவையில் முழு ஈடுபாடு கொண்டு, தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவையாற்ற ஊக்கம் தரும் வகையில், மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் முறையே மேயருக்கு ரூ.30,000, துணை மேயருக்கு ரூ15,000, மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10,000 மதிப்பூதியம் வழங்கிட, அரசாணையைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனால் புதிய உத்வேகத்துடன் மக்கள் பணியாற்ற பொன்னான வாய்ப்பினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் இம்மாமன்றம் பெருமகிழ்ச்சி அடைகிறது.

    இந்த சிறப்புத் தீர்மானம் மேயரால் முன்மொழியப்பட்டு 100-வது மாமன்ற உறுப்பினர் இரா.கார்த்திகேயனால் வழிமொழியப்பட்டது. இந்த சிறப்புத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காயம் அடைந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    வடவள்ளி,

    கோவை மருதமலை அடிவார பகுதியில் கடந்த சில வாரங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக வனத்தை விட்டு வெளியேறி மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி.காலனி, கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழக பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகின்றன.

    கடந்த வாரம் 24-ந் தேதி அதிகாலை நவாவூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பருப்பு மற்றும் அரிசியை ருசித்து சென்றன.

    இதேபோல் இந்த பகுதியில் காட்டு யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக ஒற்றை யானை ஒன்றும் நடமாடி வருகிறது.

    இந்த யானை அண்மையில் பாரதியார் பல்லைக்கழக வளாகத்தில் உள்ள இருப்பு அறைக்குள் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பருப்பை சாப்பிட்டு சென்றது.

    தொடர்ந்து யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தனது நண்பர்களுடன் கல்வீரம்பாளையத்தில் தங்கி கட்டி வேலைக்கு சென்று வருகிறார்.

    இன்று அதிகாலை மனோஜ்குமார், தனது நண்பர்கள் 2 பேருடன் இயற்கை உபாதை கழிப்பதற்காக பாரதியார் பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு புதர்மறைவில் காட்டு யானை ஒன்று நின்றிருந்தது. இதனை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து ஓடினர். ஆனால் காட்டு யானை விடாமல் அவர்களை துரத்தி வந்தது. இதில் 2 பேர் ஓடி விட்டனர். மனோஜ்குமார் மட்டும் ஓட முடியாமல் கீழே விழுந்தார்.

    இதையடுத்து யானை மனோஜ்குமாரை தந்தத்தால் வயிற்றில் குத்தி தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இதற்கிடையே இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, காயம் அடைந்த மனோஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • கண்காட்சியை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.
    • நிறைவு விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

    கோவை,

    இந்திய காலணி தொழில்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் 7-வது ஆண்டாக 'இந்திய சர்வதேச காலணி கண்காட்சி 2023 நடந்தது. இந்த கண்காட்சியை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில், பல்வேறு புதிய தயாரிப்புகள், தொழில் அதிபர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அமர்வுகள், தொழில்துறைக்கான கருத்தரங்குகள் மற்றும் பிரத்யேக பேஷன் ஷோ இடம் பெற்றன.

    கண்காட்சி துவக்க விழாவில் வாக்கரூ இன்டர்நேஷனல், விகேசி புட்வேர் மற்றும் பிற காலணி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து இந்திய காலணி தொழில்களின் கூட்டமைப்பு தலைவர் நவுஷாத் கூறியதாவது:-

    இந்திய உற்பத்தியாளர்களுக்கும் சர்வதேச வாங்குபவர்களுக்கும் இடையே வலுவான உறவுகளை வளர்ப்பதில் இந்த கண்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

    அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் காலணித் துறையின் எதிர்காலத்தை வரையறுக்கும் நிலையான நடைமுறைகள் மற்றும் இந்திய காலணிகளை உலகளவில் மேம்படுத்துதல் ஆகியவை இந்த ஆண்டு கண்காட்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.

    கண்காட்சியில் இந்திய காலணிகளுக்கான வளர்ச்சி வாய்ப்புகள், சமீபத்திய போக்குகள் மற்றும் மேம்பாடுகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 3 நாள் நடந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

    • பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயின் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் சேத்துமடை அருகே உள்ள நரிக்கல்பதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது மனைவி மகாதேவி (வயது 38). இவர் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.

    இவர் தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயினை வைத்து இருந்தார்.

    சம்பவத்தன்று மகாதேவி பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயின் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • காதலா்கள் இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
    • போலீசார் 2 பேருடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 19). நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் பள்ளியில் படித்த போது செங்குட்டைபாளையத்தை சேர்ந்த ரம்யா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர். இது குறித்து ரம்யா தனது காதலனிடம் தெரிவித்தார்.

    எனவே பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதல் ஜோடி வீட்ைட விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 பேரும் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆனைமலையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனை தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆனைமலை போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • யானையானது வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது.
    • சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சரளபதியில் நிறுத்தப்பட்டன.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து கோவை டாப்சிலிப்பில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

    ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் சுற்றி திரிந்தது. கோவை மாநகர பகுதிகளிலும் அந்த யானையானது சுற்றியது. பின்னர் அந்த யானையை பிடித்து வனத்துறையினர் மீண்டும் வனத்தில் விட்டனர்.

    இருப்பினும் அந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி கிராமத்தில் முகாமிட்டிருந்தது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது.

    கடந்த 4 மாதங்களாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிவதால் அந்த யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து யானையை கண்காணிக்க வனத்துறையினர் தனிக்குழுவும் அமைத்தனர்.

    மேலும் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அதனை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கவும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சரளபதியில் நிறுத்தப்பட்டன.

    அதன்மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மக்னா யானையை உடனே பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி ஆனைமலை வனச்சரகர் புகழேந்தி, டாப்சிலிப் வனசரகர் சுந்தர வடிவேல் தலைமையில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் இறங்கியது.

    யானை சுற்றி வரக்கூடிய சரளபதி கிராமத்தில் முகாமிட்ட இந்த குழுவினர் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மக்னா யானை சரளபதி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிந்தது. யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்ததும் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அப்போது விவசாய நிலங்களில் யானை சுற்றி திரிந்து கொண்டிருந்தது. உடனே கால்நடை டாக்டர்கள் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சில மணி நேரம் அங்கும், மிங்கும் சுற்றிய யானை பின்னர் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஏற்றுவதற்காக லாரியை வரவழைத்தனர். தொடர்ந்து கும்கி யானை சின்னதம்பி உதவியுடன், வனத்துறையினர் மக்னா யானையை லாரிக்குள் ஏற்றினர். பின்னர் பிடிபட்ட மக்னா யானையை வனத்துறையினர் வால்பாறை வனசரகத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

    கடந்த 4 மாதங்களாக சரளபதி பகுதியில் மக்னா யானை சுற்றி வந்ததால் அந்த பகுதி மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டு இருந்தனர். பயிர்களையும் சேதப்படுத்தி வந்ததால் விவசாயமும் பாதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது மக்னா யானை பிடிக்கப்பட்டதும் சரளபதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் சுற்றிய யானை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று தற்போது வனத்துறையினர் பிடித்துள்ளனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். மேலும் அதன் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    ×