என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தண்ணன் குளக்கரையில் நடுரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள்
    X

    முத்தண்ணன் குளக்கரையில் நடுரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள்

    • பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே உள்ளனர்.

    கோவை,

    கோவையில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் கோவையில் உள்ள குளங்கள் எல்லாம் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பிடித்துள்ளன.

    விடுமுைற நாட்களில் பூங்கா போன்ற பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் தற்போது மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளுக்கும் சென்று வருகின்றனர். அந்தளவுக்கு மாநகரில் உள்ள உக்கடம் குளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் ஆகிய குளங்கள் மின் விளக்குகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்களை கொண்டு பொலிவுபடுத்தப்பட்டு, அழகுபட காட்சியளிப்பதால் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முதன்மையானதாக திகழ்கிறது.

    விடுமுறை தினங்களில் இந்த குளங்களில் பொதுமக்க ளின் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் காணப்படும். குறிப்பாக முத்தண்ணன் குளத்தின் பொலிவை காண பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வார த்தின் இறுதி நாட்களில் குவிந்து வருகிறார்கள்.

    பகல் முழுவதும் வேலை வேலை என்று தனது தொழிலில் கவனம் செலுத்தி விட்டு , மாலையில் வீடு திரும்பும் குடும்பத் தலைவ ர்கள், மாலை நேரத்தில் தனது குடும்ப த்தோடு எங்காவது சென்று பொழுதை கழிக்க விரும்புவது வழக்கம் தான். அப்படி தினமும் முத்தண்ணன் குளக்கரையில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தினமும் காலை 5.30 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயங்களில் நடைபயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகிக் கொண்டு வருகிறது. முத்தண்ணன் குளக்கரையில் குழந்தைகள் விளையாடுவதற்கு என ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இங்கு குடும்பத்தோடு வரும் குழந்தைகள் அதில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தரைகள் பச்சை பசேர் என்று புல்வெளியுடன் காட்சி அளிக்கிறது. மாலைநேரத்தில் இங்கு குவியும் பொதுமக்கள் அங்கு தங்கள் குடும்பத்தினருடன் புல்தரையில் அமர்ந்து பேசி தங்கள் மாலைபொழுதை அழகாக கழித்து செல்கிறார்கள்.

    இங்கு வரும் பொதுமக்களுக்கு என்று முறையான பார்க்கிங் வசதி கிடையாது. இதனால் இங்கு வருபர்கள் தங்கள் வாகனங்கள் குளத்தின் முன்பாக நிறுத்தி விட்டு செல்லும் நிலைமையை காணப்படுகிறது.

    அப்படி நிறுத்தப்படும் வாகனங்களால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு உள்ளே செல்பவர்கள் திரும்பி வெளியே வந்து பார்க்கும்போது, இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு என பார்கிங் பெருகி விடுகிறது.

    இதனால் வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் அவர்கள் அவதியடைந்து வருகி ன்றனர். ஒரு சிலர் தனது இருசக்கர வாகனத்தை எப்படியாவது எடுத்திட வேண்டும் என்று கருதி, பின்னால் இருக்கும் வாகனத்தை உருட்டி தாறுமாறாக நடுரோட்டில் விட்டு விடுகின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் தினமும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் காட்சியும் காணப்படுகிறது. கூட்டம் கூட்டமாக உள்ளே செல்போர்களுக்கும் இது இடையூறாக உள்ளது.

    இதுகுறித்து குளக்கரைக்கு வரும் பொதுமக்கள் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி இந்த குளக்கரையை மிகவும் அழகுபடுத்தி பொலிவு பெற செய்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எங்களுக்கு இந்த குளக்கரை மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனாலும் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

    எனவே இந்த பகுதியில் பார்க்கிங் வசதி செய்து கொடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அவ்வாறு ஏற்பாடு செய்து கொடுக்கும்போது, வாகனத்தை நிறுத்தும் போதும் அல்லது வாகனத்தை எடுக்கும் போதும் ஏற்படும் கூச்சல் குழப்பத்தை தவிர்க்க முடியும்.மேலும் இங்கு வரும் காதல் ஜோடிகள் ஆங்காங்கே ஓரமாக உட்கார்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இது இங்கு குழந்தைகளுடன் வரக்கூடிய பொதுமக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உள்ளது.

    பரந்து விரிந்த முத்தண்ணன் குளத்தின் ஒரு பகுதியானது கோவை தடாகம் ரோட்டிலும், மற்றொரு பகுதியானது சொக்கம்புதூர் செல்லும் சாலையிலும் உள்ளது. தடாகம் சாலையில் உள்ள குளக்கரையின் பகுதியில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி வழியும். பெரியவர்கள் குடும்பம் குடும்பமாக சின்ன குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆங்காங்கே திரியும் காட்சியை காண முடியும். ஆனால் சொக்கம்புதூர் செல்லும் சாலையில் உள்ள குளக்கரை பகுதி ஓரமாக இருப்பதால் அங்கு மக்களை விட காதல் ஜோடிகளே அதிகளவில் குவிகின்றனர்.

    அந்த பகுதி சற்று இருள் நிறைந்த பகுதி என்பதால் காதல் ஜோடிகளுக்கும் அது ஏற்ற இடமாக மாறி விட்டது. இதனால் தினமும் அங்கு காதல் ஜோடிகளை பார்க்க முடியும். அவர்கள் காவலாளி நேரம் ஆகி விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினாலும் செல்வதே கிடையாது.

    அவர்களை வெளியே அனுப்புவதற்குள் அவர்களுக்கு போதும், போதும் என்றாகி விடும். அப்படியும் சிலர் மறைந்து இருந்து விட்டு, கதவை மூடிய பின்னர் வெளியில் வந்து திறந்து விட்டு செல்வதையும் காண முடிகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகராட்சியின் இந்த அரிய முயற்சி மிகவும் வெற்றிகரமானதாகும்.

    இக்குளக்கரையானது கோவை வாழ் மக்களின் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமன்றி, மனம் மகிழ்ந்து உறவுகளை மேம்படுத்தும் ஒரு பாலமாக இது அமைகிறது. இங்கு பார்க்கிங் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால், இங்கு வருகை தரும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    Next Story
    ×