search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magna Yanai"

    • யானையானது வனத்தை விட்டு வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது.
    • சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சரளபதியில் நிறுத்தப்பட்டன.

    பொள்ளாச்சி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து கோவை டாப்சிலிப்பில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

    ஆனால் அந்த யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் சுற்றி திரிந்தது. கோவை மாநகர பகுதிகளிலும் அந்த யானையானது சுற்றியது. பின்னர் அந்த யானையை பிடித்து வனத்துறையினர் மீண்டும் வனத்தில் விட்டனர்.

    இருப்பினும் அந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளப்பதி கிராமத்தில் முகாமிட்டிருந்தது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தது.

    கடந்த 4 மாதங்களாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிவதால் அந்த யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து யானையை கண்காணிக்க வனத்துறையினர் தனிக்குழுவும் அமைத்தனர்.

    மேலும் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அதனை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கவும் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்த்தன், கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு சரளபதியில் நிறுத்தப்பட்டன.

    அதன்மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மக்னா யானையை உடனே பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி ஆனைமலை வனச்சரகர் புகழேந்தி, டாப்சிலிப் வனசரகர் சுந்தர வடிவேல் தலைமையில் கால்நடை டாக்டர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய குழு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் இறங்கியது.

    யானை சுற்றி வரக்கூடிய சரளபதி கிராமத்தில் முகாமிட்ட இந்த குழுவினர் மக்னா யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மக்னா யானை சரளபதி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சுற்றி திரிந்தது. யானை ஊருக்குள் புகுந்ததை அறிந்ததும் வனத்துறையினர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அப்போது விவசாய நிலங்களில் யானை சுற்றி திரிந்து கொண்டிருந்தது. உடனே கால்நடை டாக்டர்கள் மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சில மணி நேரம் அங்கும், மிங்கும் சுற்றிய யானை பின்னர் அந்த இடத்தில் அப்படியே நின்று விட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையை ஏற்றுவதற்காக லாரியை வரவழைத்தனர். தொடர்ந்து கும்கி யானை சின்னதம்பி உதவியுடன், வனத்துறையினர் மக்னா யானையை லாரிக்குள் ஏற்றினர். பின்னர் பிடிபட்ட மக்னா யானையை வனத்துறையினர் வால்பாறை வனசரகத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

    கடந்த 4 மாதங்களாக சரளபதி பகுதியில் மக்னா யானை சுற்றி வந்ததால் அந்த பகுதி மக்கள் வெளியில் வருவதற்கே அச்சப்பட்டு இருந்தனர். பயிர்களையும் சேதப்படுத்தி வந்ததால் விவசாயமும் பாதிக்கப்பட்டிருந்தது.

    தற்போது மக்னா யானை பிடிக்கப்பட்டதும் சரளபதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறும் போது, எங்கள் பகுதியில் சுற்றிய யானை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று தற்போது வனத்துறையினர் பிடித்துள்ளனர். அந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். மேலும் அதன் நடமாட்டத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    ×