search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே குப்பை தொட்டியில் பற்றி எரிந்த  தீ
    X

    கோவை அருகே குப்பை தொட்டியில் பற்றி எரிந்த தீ

    • கரும்புகை-மூச்சுத்திணறலால் மக்கள் அவதி அடைந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே ஏராளமான பழைய கார்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. அங்கு சேகரமாகும் குப்பைகள் சிறுமுகை மின்வாரிய பவர் ஹவுஸ் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அந்த குப்பை தொட்டியில் நேற்று காலை மர்ம நபர்கள் தீ வைத்தனர். கார் உதிரிபாக கழிவு என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்து பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் சிறுமுகை ரோட்டில் கார் உதிரி பாகங்களின் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இதில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதால் தீ எளிதில் பரவி புகை மூட்டம் ஏற்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்சென்று அதனை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×