என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இளம்பெண் கொலையில் குற்றவாளியை நெருங்கிய போலீஸ்
    X

    கோவையில் இளம்பெண் கொலையில் குற்றவாளியை நெருங்கிய போலீஸ்

    • ஜெகதீஷ்வரியை நகைக்கு ஆசைப்பட்டு யாராவது கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
    • அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் முழுவதையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பீளமேடு,

    கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர்.

    இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40). இவர்களுக்கு கார்த்திகா(16) என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கார்த்திகா பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தார். அப்போது அறையில் ஜெகதீஷ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் தாயின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணவர் சக்கரவர்த்தியும் வீட்டிற்கு வந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்ட போது, அவரது கழுத்தில் காயங்கள் இருந்தது.

    மேலும் வீட்டில் இருந்த 5 முக்கால் பவுன் நகையும் மாயமாகி இருந்தது. இதனால் அவரை நகைக்கு ஆசைப்பட்டு யாராவது கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர், ஜெகதீஷ்வரியை நகைக்காக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமாக ஜெகதீஷ்வரியை கொன்று விட்டு போலீசாரை திசை திருப்புவதற்காக இதனை அரங்கேற்றினரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.

    மேலும் கொலை நடப்பதற்கு முன்பு சக்கரவர்த்தியின் வீட்டிற்கு யாராவது வந்து சென்றனரா? என்பதை அறிய அவரது வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் முழுவதையும் தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது சக்கரவர்த்தியின் வீட்டிற்குள் ஒரு நபர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. வீட்டிற்குள் சென்று 2 மணி நேரத்திற்கு பிறகே அந்த நபர் வீட்டை விட்டு வெளியில் வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

    இதனால் அந்த நபர் தான் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அவர்களுக்கு தெரிந்த நபராக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு நிலவுகிறது.

    இதையடுத்து அந்த காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஜெகதீஷ்வரி கொலை தொடர்பாக அவரது கணவர் சக்கரவர்த்தியிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றே சொல்கிறார். மேலும் ஜெகதீஷ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது அவரது மகள் தான் முதலில் பார்த்துள்ளார்.

    அவரிடம் விசாரணை நடத்தலாம் என்றால் அவர், தாய் பிணமாக கிடந்ததை பார்த்ததில் இருந்து அச்சத்திலேயே உள்ளார். அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளோம்.

    கண்காணிப்பு காமிராக்கள் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடையதாக ஒரு நபரை சந்தேகிக்கிறோம். அந்த நபரை நெருங்கி விட்டோம். இன்று மாலைக்குள் அவரை கைது செய்து விடுவோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த கொலையானது கள்ளக்காதல் விவகாரத்தில் முடிந்திருக்கலாம் எனவும் தெரிகிறது. இருப்பினும் கொலையாளி பிடிபட்ட பின்னரே கொலைக்கான காரணம் என்னவென்பது தெரியவரும்.

    Next Story
    ×