என் மலர்
கோயம்புத்தூர்
- திருமணம் செய்து வைக்க மறுத்ததால் சரமாரியாக தாக்கினார்
- பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 52 வயது பெண். கூலி வேலை செய்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து நான் எனது மகன் மற்றும் 14 வயது பேத்தியுடன் வசித்து வருகிறேன். எனது பேத்தி எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் என்னிடம் வந்து உனது பேத்தியை மிகவும் பிடித்துள்ளது, நான் பெண் கேட்டு வருகிறேன். திருமணம் செய்து வை என மிரட்டல் தொனியில் கூறி விட்டுச் சென்றார். நான் பிரச்சினை எதுவும் செய்யக் கூடாது என அமைதியாக சென்று விட்டேன்.
சம்பவத்தன்று நான் வேலைக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த வாலிபர் மீண்டும் என்னிடம் வந்து தகராறு செய்தார். அதற்கு நான் எனது பேத்தி பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறாள். எங்களை தொந்தரவு செய்யாதே என்றேன். ஆத்திரம் அடைந்த அவர் என்னை கன்னத்தில் தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி எனது பேத்தியை திருமணம் செய்து கொடுக்க வில்லை என்றால் என்னை கொன்று விட்டு திருமணம் செய்து கொள்வதாக மிரட்டி அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
எனவே என்னை பெண் என்று கூட பார்க்காமல் நடுரோட்டில் வைத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேத்தியை திருமணம் செய்து வைக்க மறுத்த பாட்டியை தாக்கிய வாலிபர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணமாகாத விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையானர்
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் அந்த பகுதியில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
கனகராஜ் திருமணத்துக்காக பல இடங்களில் பெண் பார்த்தார். ஆனால் அவர் மாற்றுத்திறனாளி என்பதால் எந்த பெண்ணும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் மது பழக்கத்துக்கு அடிமையானர்.
சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டில் தனியாக இருந்த அவர் திருமணமாகாத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கனகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.
- அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.
கோவை:
சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அக்கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார். இந்த நிலையில் கோவையில் நடைபெற்று வரும் பாதயாத்திரை பங்கேற்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர், இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை கருத்து தெரிவிக்கும் என கூறி விட்டு சென்றார்.
இதுகுறித்து பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்து கொள்வதாக அறிவித்துள்ள முடிவு குறித்து தேசிய தலைமை தான் கருத்து கூறும்.
தேசிய தலைமை அறிவிக்கும் வரை, நாங்கள் எந்தவித கருத்தையும் கூற முடியாது. இதுகுறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம்.
அ.தி.மு.கவினர் கூறிய கருத்துக்களும், அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொடநாடு வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர்.
- விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 14-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.
தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சி.பி.சி.ஐ.டி கூடுதல் துணை கமிஷனர் முருகவேல் தலைமையில் விசாரணை நடக்கிறது.
கொடநாடு வழக்கில் முக்கிய தடயங்களை அழித்ததாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த நிலையில் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரரான தனபாலிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 14-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று 2-வது முறையாக சேலம் தனபால் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார். அவரிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டனர்.
அவர் அளித்த பதில்கள் அனைத்தையும் போலீசார் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். அவர் கூறிய தகவல்களில் உண்மை தன்மை உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்கட்ட விசாரணையில் என்னிடம் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று 2-ம் கட்ட விசாரணையில் மீதி கேள்வி கேட்க இருக்கின்றனர் . கனகராஜ் எடுத்து வந்த பைகளை யாரிடம் கொடுத்தார் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன் என்றார்.
- வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார்.
- மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார்.
கோவை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை கணபதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதயாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
இந்த பாத யாத்திரை இரவு 10.30 மணியளவில் இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
கோவை பா.ஜனதாவின் கோட்டை. அந்த அளவுக்கு கோவையில் கட்சியினர் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துள்ளார்கள். இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.
பாதயாத்திரையில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் காரணமாக 2 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. நேரமின்மை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தல் படியே 6 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் வந்தேன்.
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார். தமிழகத்திலும் 39 இடங்களையும் பெறுவதே நமது இலக்கு.
பிரதமர் மோடி தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ளார். தமிழ் மண்ணையும், மக்களையும், கலாசாரத்தையும் மோடி மிகவும் நேசிக்கிறார். அவருக்கு தமிழ் மொழியை சரளமாக பேச முடியவில்லை என்பது தான் வருத்தம். அவர் தமிழ் மொழியில் சரளமாக பேசிவிட்டால் தமிழகத்தையும் ஆட்சி செய்து விடுவார்.
பிரதமர் மோடி குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார். ஏழைகளுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. இதனால் உலகளவில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் உலகின் 3-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று மோடி கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றம் அடைய நேர்மையான ஊழல் இல்லாத அரசால் தான் முடியும். அது பா.ஜ.க அரசு அளிக்கும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கோவை மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார். தி.மு.க. சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் அவர் மீது பா.ஜ.க.வினர் 400 பேர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையோ, வழக்கோ இல்லை.
சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதிக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டனை தருவார்கள். மேலும் இந்து தர்மம், சனாதனம் மற்றும் நரேந்திர மோடியை பழித்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்.
கோவையில் பேசிய நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு கூட்டம் வரும் போது, கட்சிக்கு வரவில்லையே என பேசியிருக்கிறார். படத்திற்கு வந்த கூட்டம் என்பது அவர் நன்றாக நடிப்பதால் வந்தது.
கட்சி ஆரம்பித்ததில் இருந்து தி.மு.க.வை எதிர்த்து வந்த கமல்ஹாசன் தற்போது தனது தன்மானத்தை மொத்தமாக தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கிறார். அவர்களது கம்பெனி படத்தில் நடிக்கிறார். இப்படி எல்லாம் செய்து தனது தன்மானத்தை இழந்ததாலேயே கமல்ஹாசனின் அரசியலுக்கு கூட்டம் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவிப்பு.
- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இடையே இருந்து வந்த கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது.
கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் தலைவர்கள் பற்றி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அவதூறாக பேசியது, கொள்கைகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.த. அறிவித்து இருப்பது பற்றி பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை பேசும் போது, "தற்போது யாத்திரையில் இருப்பதால், அ.தி.மு.க. வெளியிட்ட அறிக்கையை என்னால் படிக்க முடியவில்லை. தற்போதைய சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக எங்களது தேசிய தலைமையே கருத்து தெரிவிக்கும். ஊடகத்தை சார்ந்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கென தனி கோட்பாடுகள் உள்ளன. எங்களது தேசிய தலைமை சரியான நேரத்தில் கருத்து தெரிவிக்கும்," என்று தெரிவித்து உள்ளார்.
- கோர்ட்டில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட நோட்டீசை வீட்டின் சுவற்றில் ஓட்டினர்.
- அயூப் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு நோட்டீஸ் வழங்கி சென்றனர்.
கோவை:
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதில் அதன் சுற்றுச்சுவர் சேதமானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவையை சேர்ந்த அயூப் என்கிற அஷ்ரப் அலி என்பவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே இந்த வழக்கு சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருந்த போதிலும் இதுவரை குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தலைமறைவாகவே உள்ளார்.
இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு 10 முறை பிடிவாரண்ட் அனுப்பப்பட்டது.
ஆனால் 10 முறை பிடிவாரண்ட் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கோர்ட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
மேலும் அடுத்த மாதம் 16-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறியிருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கோவைக்கு வந்தனர்.
பின்னர் செல்வபுரம் கல்லாமேடு மட்டசாலை பகுதியில் உள்ள அயூப் என்கிற அஷ்ரப் அலியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட நோட்டீசை வீட்டின் சுவற்றில் ஓட்டினர்.
மேலும் அருகே உள்ள அவரது தங்கை வீட்டுக்கும் போலீசார் சென்று, அங்கு அயூப் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு நோட்டீஸ் வழங்கி சென்றனர்.
- மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
- இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன.
வடவள்ளி,
ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறி யியல் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகத்தின் சார்பாக மண்டல அளவிலான 11-வது கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைவர் ஆர்.முருகேசன் மற்றும் துணைத்தலைவர் பி.தமிழரசி முருகேசன் பங்கேற்றனர். இப்போட்டியில் 9 கல்லூரிகள் பங்குபெற்றன. அவற்றுள் முதலாவதாக குமரகுரு பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 50 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.
கே.ஜி.ஐ.எஸ்.எல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 42 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். ஜி.சி.டி. பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்தனர். எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான்காம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜமூர்த்தி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
- வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
- இங்கு தற்போது 65 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மீட்புக் குழுவினர் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் என்பது கோவை மக்களின் நீண்டநாள்கனவு. அவிநாசி, திருச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள், சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 65 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் அங்கு கட்டுமான பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.
வெள்ளலுாரில் பஸ் நிலையம் அமைந்தால் அனைத்து பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். மேலும் நீலாம்பூர், செட்டிபாளையம் என வேறு பகுதிகளுக்கு மேற்கண்ட பஸ்நிலைய கட்டுமான திட்டத்தை மாற்றி அமைத்தால் கூடுதல் செலவு மற்றும் தேவையற்ற காலதாமதமும் ஏற்படும்.
எனவே நிறுத்தப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகளை முற்றிலுமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து வெள்ளலூர் பஸ் நிலைய மீட்புக்குழுவினர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளலூரில் பஸ் நிலைய கட்டுமான பணிகளை முற்றிலுமாக நிறுத்தினால்பொதுமக்களின் வரிப்பணம் வீணாகும். மேலும் அரைகுறையாக கட்டப்பட்டு உள்ள வெள்ளலூர் பஸ் நிலைய பகுதிகளில் தற்போது ஒருசிலர் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களை அரங்கேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.
- சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- ஆனால் 10 முறை பிடிவாரண்ட் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை
கோவை,
சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதில் அதன் சுற்றுச்சுவர் சேதமானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவையை சேர்ந்த அயூப் என்கிற அஷ்ரப் அலி என்பவர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே இந்த வழக்கு சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருந்த போதிலும் இதுவரை குற்றவாளி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தலைமறைவாகவே உள்ளார்.
இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு 10 முறை பிடிவாரண்ட் அனுப்பப்பட்டது.
ஆனால் 10 முறை பிடிவாரண்ட் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரை கோர்ட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
மேலும் அடுத்த மாதம் 16-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறியிருந்தது. வழக்கில் சம்பந்தப்பட்டவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று கோவைக்கு வந்தனர்.
பின்னர் செல்வபுரம் கல்லாமேடு மட்டசாலை பகுதியில் உள்ள அயூப் என்கிற அஷ்ரப் அலியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்ட நோட்டீசை வீட்டின் சுவற்றில் ஓட்டினர்.
மேலும் அருகே உள்ள அவரது தங்கை வீட்டுக்கும் போலீசார் சென்று, அங்கு அயூப் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கூறிவிட்டு நோட்டீஸ் வழங்கி சென்றனர்.
- 28-ந்தேதி மிலாதுநபி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது.
- விதிமுறைகளை மீறி அந்த பகுதிகளில் மதுபானம் விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கோவை,
நாடு முழுவதும் செப்டம்பர் 28-ந்தேதி மிலாதுநபி, அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. எனவே அன்றைய நாட்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இயங்கும் மதுபான கூடங்களும் செயல்படாது. எனவே மேற்கண்ட நாட்களில் விதிமுறைகளை மீறி அந்த பகுதிகளில் மதுபானம் விற்றால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
- கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினம் இரவு மலையப்ப சுவாமிகள் பெரிய சேஷ வாகனத்திலும், அடுத்த நாள் சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 20-ந்தேதி சிம்ம வாகனத்திலும், 21-ந்தேதி கல்ப விருட்ச வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர்.
தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மாலையில் கருடசேவை நடந்தது. அப்போது ஸ்ரீமலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடங்களின் வழியாக வலம் வந்து நிலையை வந்தடைந்தார். கருடவீதியுலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று துவங்கியது. அதிகாலையில் சிறப்பு அலங்காரங்களுடன் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி-பூதேவி தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மேளதாளங்கள் முழங்க, கோவிந்தா,கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்த தேரோட்டம், நிறைவாக நிலையை வந்தடைந்து.
அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மற்றும் கே.ஜி நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து மலையப்ப சுவாமியின் அருளாசி பெற்றுச்சென்றனர்.






