என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சித்தார்த்க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள ஏ.எஸ்.குளத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மகன் சித்தார்த் (வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை 4.30 மணியளவில் பள்ளி முடிந்ததும் சித்தார்த் அவரது நண்பர்களுடன் பள்ளியின் பின்புறம் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

    அங்கு அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது சித்தார்த் ஆழமான பகுதிக்கு சென்றார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடம் கோவில்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தேடினர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் குளத்தில் இருந்து மாணவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் சித்தார்த்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
    • 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக, அதிகாரிகள் உடனான ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா மற்றும் பல்வேறு துறைகளின் உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலெக்டர் கிராந்திகுமார் கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-

    கோவையில் வடகிழக்கு பருவமழை வெகுவிரைவில் தொடங்க உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள சப்-கலெக்டர், கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் போதிய ஊழியர்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க வேண்டும்.

    மேலும் வெள்ளம், இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 0422-1077 டோல்பிரீ எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்.

    நீர்வழித்த டங்களில் ஆக்கிரப்புகள் இருந்தால் அவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். பேரூர் நொய்யல் மற்றும் மேட்டுப்பா ளையம் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அணை களிலும் அதிகாரிகள் ஆய்வுசெய்து தண்ணீர் கொள்ளளவு, அணையின் உறுதித்தன்மை ஆகிய வற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களை தங்க வைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் முன்கூட்டியே ஈடுபட வேண்டும். இதற்காக அந்தந்த பகுதிகளில் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு கூட்டங்களை தேர்வு செய்து அங்கு தங்க வைக்க வேண்டும். அப்போது அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி தரும் வகையில் அதிகாரிகள் தனித்தனி குழுக்களை அமைத்து செயல்பட வேண்டும்.

    இதன்ஒருபகுதியாக அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார்கள் தலைமையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பி.டி.ஓ ஆகியோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும். வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் போலீசார், தீயணைப்பு படை, ஊரக வளர்ச்சி, கால்நடை, வேளாண்-தோட்டக்கலை மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    கிராம நிர்வாக அதிகாரிகள் தலைமையில் ஊராட்சி செயலர், அங்க ன்வாடி-சத்துணவு அமைப்பாளர்கள், வனக்காவலர்கள் ஆகியோர் குழுவாக ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • இறுதியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உக்கடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர சதி திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ், உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் என்ற அசார் (36) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பையூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீனை என்.ஐ.ஏ. அதிாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இறுதியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தனர். கோர்ட்டு 2 பேரையும் விசாரிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

    இதனையடுத்து முகமது இத்ரிஸ், முகமது அசாரூதீனிடம் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு அழைத்து வந்தனர்.

    முகமது இத்ரிசை ஜி.எம். நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதே போல முகமது அசாருதீனை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடம், கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நபர்களுடன் சந்தித்த இடங்களுக்கும் 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.
    • தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை விளாங்குறிச்சி, எஸ்.ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யா சங்கர் (வயது 44). தொழில் அதிபர்.

    இவருக்கு திருமணம் ஆகி பிந்து என்ற மனைவியும், 15 வயதில் ராகவ் என்ற மகனும் உள்ளனர்.

    வித்யா சங்கர் திருப்பூரில் சொந்தமாக நூல் தயாரித்து விற்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். வித்யா சங்கர் தனது தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்காவும், தொழிலுக்காகவும், வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து கடன் வாங்கி இருந்தார். மொத்தமாக ரூ.42 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    வாங்கிய கடனுக்கு மாதம் தவறாமல் குறிப்பிட்ட நாட்களிலும் பணத்தையும் செலுத்தி வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்க தொடங்கி உள்ளனர்.

    தினமும் போன் போட்டு தொந்தரவு செய்ததால் வித்யா சங்கர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வீட்டில் இருந்து தனது காரில் கம்பெனிக்கு புறப்பட்டார்.

    ஆனால் அவர் திருப்பூருக்கு செல்லாமல் நேராக தொண்டாமுத்தூர் குள்ளாகவுண்டன்புதூர் பகுதிக்கு சென்று தனது காரை நிறுத்தினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும், கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாலும் மன உளைச்சலில் இருந்த வித்யா சங்கர் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    இதையடுத்து அவர், ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து வாங்கினார். பின்னர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

    இந்த நிலையில் காலையில் இருந்து மாலை வரை அந்த பகுதியிலேயே கார் நின்றதாலும், போன் அடித்தும் யாரும் எடுக்காததாலும் அந்த பகுதி பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் காருக்குள் ஏறி பார்த்த போது, அங்கு வித்யாசங்கர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து வித்யா சங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    போலீசார், வித்யா சங்கரின் காரில் இருந்த லேப்-டாப், டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர். அப்போது டைரியில் வித்யா சங்கர் தான் யாரிடம் எல்லாம் இருந்து கடன் பெற்றுள்ளேன் என்பது குறித்தும், அந்த நபர்களின் பெயர்களையும் விரிவாக எழுதியிருந்தார்.

    அந்த தகவல்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் நஷ்டத்தால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கேட் முன்பு திரண்டனர்
    • ரெயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

    கோவை,

    ஒண்டிப்புதூர் ராமச்சந்திர நாயுடு வீதியில் ெரயில்வே கேட் உள்ளது. இங்கு 2011-ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் கடந்த ஜூன் மாதம் இங்கு மேம்பாலம் கட்டப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ரயில்வே கேட் மூடப்படும் என ெரயில்வே நிர்வாகம் அறிவித்ததுடன் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சென்றுவர மாற்று பாதையும் அமைத்து கொடுக்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் அந்தப் பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்க கோரி ரெயிலில் மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். சக்தி நகர், சிவலிங்கபுரம், காமாட்சி நகர், சூர்யா நகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை ெரயில்வே கேட் முன்பு திரண்டனர்.

    இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தண்டவாளத்திற்கு செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி 300-க்கும் மேற்பட்டோர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், '' நாங்கள் எங்கள் பகுதியில் இருந்து திருச்சி சாலை வரவேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரம் தான் ஆகும்.

    ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதை வழியாக வரும்போது 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்றனர். 

    • வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பெரும் வளர்ச்சியில் இருக்கும் என மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி
    • மீனவர்கள் விஷயத்தில் மத்திய அரசு பாதுகாப்பாக செயல்படுவதாகவும் பெருமிதம்

     கோவை.

    இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு ேவலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று 9-வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    தபால்துறை, தகவல் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, நிதிசேவைகள் துறை, நுகர்வோர் துறை, பொது கல்வி துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    விழாவுக்கு பின் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரசு வேலை என்பது எல்லோருக்கும் ஒரு கனவு. அதனை நிறைவேற்றும் வகையில் 10 லட்சம் பேருக்கு அரசு துறையில் வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.

    அதன்படி தொடர்ந்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    வந்தே பாரத் ெரயில் சேவை, சந்திராயன் போன்ற விஷயங்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 500 கம்பெனிகள் மட்டுமே இருந்தன. தற்போது கம்பெனிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 1 லட்சம் கம்பெனிகள் தற்போது உள்ளது.

    இவற்றில் பெரும்பாலான கம்பெனிகளில் 30 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களே சி.இ.ஓ.வாக பணியாற்றி வருகிறார்கள். வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா பெரும் வளர்ச்சியில் இருக்கும்.

    இலங்கை கடற்படை தொடர்ந்து நமது நாட்டின் மீனவர்கள் மற்றும் படகுகளை பிடித்து வருகின்றனர். அதனை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் பேசி மீனவர்களையும், படகுகளையும் மீட்டு வருகிறது.

    மீனவர்களுக்காக புதிய அமைச்சகத்தையே பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். பி.எம்.எஸ் திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களுக்கு படகுகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்காக ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விஷயத்தில் மிகவும் பாதுகாப்பாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கிருஷ்ணா கல்லூரி தாளாளர் மலர்விழி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்
    • போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது

    கோவை,

    காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க., மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் அதிகாலை நேரத்தில் 3 பஸ்கள் மட்டுமே பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. மற்ற பஸ்களின் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.

    போராட்டம் காரணமாக காலையில் 2 பஸ்களும், மாலையில் 2 பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. மற்ற பஸ்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. 

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த 22-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்
    • மகேந்திரனின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன

    கோவை,

    கோவை பீளமேடு கச்சம்மா நாயுடு வீதியை சேர்ந்தவர் கே.மகேந்திரன்(வயது38).

    இவர் கடந்த 19-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பீளமேடு எல்லைதோட்டம் அருகே சென்ற போது நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக அவர், கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் கடந்த 22-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.

    மகேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது மனைவி கோகிலா மற்றும் பெற்றோர் முன்வந்தனர்.

    தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுதியுடன் மகேந்திரனின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டன.

    கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், இருதயம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டன. கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

    இவரது உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். இதுகுறித்து கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி கூறியதாவது:-

    மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பலரது உயிரை காப்பாற்ற உதவும்.

    உடல் உறுப்பு தானம் வழங்கிய மகேந்திரன் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ் மோதி படுகாயம்
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

    சூலூர்,

    சூலூர் கண்ணம்பாளையம், ரத்தினத்தான் தோட்டம் பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் சஞ்சீவ் (வயது 19). இவர்

    எல்.அன்.டி புறவழிச் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்னியம்பாளையம் நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக 2 பேர் நடந்து சென்றனர். எனவே அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக, சஞ்சீவ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது பின்னால் வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த சஞ்சீவ் கீழே விழுந்தார். அப்போது பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். எனவே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நீலாம்பூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல்அறிந்த சூலூர் போலீசார், சஞ்சீவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எல்.என்.டி புறவழிச்சா லையில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராய ணன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் அங்கு பொதுமக்களின் நட மாட்டம் குறையவில்லை.

    விபத்தில் பலியான சஞ்சீவ் தொட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது சகோதரியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று மாலையில் பணி முடிந்ததும் வீட்டுக்கு மீண்டும் அழைத்து செல்வது வழக்கம்.

    இதற்காக தான் சஞ்சீவ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார். அப்போது அவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான விவரம் தெரியவந்து உள்ளது.

    இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேச்சுப்போட்டிக்கு தகுதி சுற்று நடக்கிறது
    • போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்-கேடயம்


    கோவை,

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் நா.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தி.மு.க. மாநில பொறியாளர் அணி சார்பில் பேச்சுப்போட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட (சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிகள்) பொறியியல், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தகுதிச்சுற்று போட்டி வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் கோவை புதுசித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள சி.ஆர்.ஐ. அறக்கட்டளை ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.

    இதனை கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக், தி.மு.க. பொறியாளர் அணி மாநில செயலாளர் எஸ்.கே.பி. கருணா, பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதில், வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.5 ஆயிரம், 3-வது பரிசு ரூ.3 ஆயிரம் என ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. இதன்மூலம், தனியார் டி.வி. சேனல்களில் நடக்கும் பட்டி மன்றங்களில் பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

    இந்த தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள் அடுத்தக்கட்டமாக இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    இறுதி சுற்றில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 2 லட்சமும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழங்கப்படுகிறது.

    எனவே, கோவை மாநகரில் உள்ள பொறியியல், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம் . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆஸ்பத்திரி வாயிலில் குவியும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
    • ஆஸ்பத்திரி வளாகத்தில் பார்க்கிங் இடம் ஒதுக்க வலியுறுத்தல்

    குனியமுத்தூர்,

    கோவை திருச்சி சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி முன்பாக 24 மணி நேரமும் மக்கள் வெள்ளம் அலைமோதுவது வழக்கம். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதையும் எந்த நேரமும் பார்க்க முடியும்.

    கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு இரு சக்கர வாகனங்கள் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டு உள்ளன. இங்கு வருபவர்கள் அவசரத்தில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பாக இருசக்கர வாகனங்களின் குவியலை எந்த நேரமும் காண முடிகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடுகிறது.

    ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரே பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ்களும் உள்ளே சென்று தான் திரும்ப வேண்டும். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் நோயாளிகளும் வரிசையாக சாலையைக் கடந்து செல்லும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கூறுகையில், பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாக அகலமான சாலைகள் இல்லை. அங்கு தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதால், பஸ்கள் கடந்து செல்வது சிரமமாக உள் ளது.

    எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் வாகனங்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைப்பதற்கு பார்க்கிங் இடம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலையை வாகனங்கள் முழுவதுமாக பயன்படுத்த முடியும். பஸ்களும் நெரிசல் இன்றி இலகுவாக நகர முடியும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர்
    • ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாயல் ஜெயின் (வயது 32). இவர் பட்டய கணக்காளராக (ஆடிட்டர்) உள்ளார்.

    இந்த நிலையில் அவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மெக்ரிகேர் ரோட்டில் பைக்கில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, பாயல் ஜெயினிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் பிரசாந்த் (29). இவர் கோவை காந்திபுரம், ராம் நகர் பகுதியில் தங்கியிருந்து அங்கு உள்ள கார் ஷோரூமில் மேனஜராக வேலை பார்க்கிறார்.

    இந்த நிலையில் பிரசாந்த் நண்பர்களுடன் இரவு உணவு சாப்பிடுவதற்காக வெளியே புறப்பட்டு சென்றார்.

    அப்போது பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்து, 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து பிரசாந்த் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×